Chennai Breast Centre: மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முதல் சிகிச்சை வரை - இனி ஒரே இடத்தில்!

Breast cancer
Breast cancer awareness
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

நீண்ட காலம் ஏற்படும் மாதவிலக்கும் கூட மார்பகப் புற்றுநோய்க்கு ஒரு காரணமாகலாம். தாமதமாக முதல் குழந்தை பிறப்பது தாய்ப்பால் தராதது, குழந்தை பிறக்காமல் இருப்பது போன்றவை சில காரணங் களாகலாம். ஆனால் இவை மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் மார்பகப் புற்றுநோயால்  பாதிக்கப்படும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் இயங்கி வரும் Chennai Breast Centre நிறுவனர்களில் ஒருவரும், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகருமான டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, Plastic & Cosmetic  Surgeon, மற்றும் மார்பக Re Construction அறுவை சிகிச்சை  நிபுணரான பேராசிரியர் மருத்துவர் வெங்கட் வி. ராமகிருஷ்ணன் இருவரையும்  சந்தித்தோம்.

breast cancer
டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா
Q

முதலில் டாக்டர் செல்வியிடம் கேட்டோம்... Chennai Breast Centre என்ற இந்த மையத்தைப் பற்றி சொல்லுங்கள் டாக்டர்...

A

Chennai Breast Centre, 2007ல் முதலில் மார்பகப் புற்று நோய்க்கான ஆலோசனை மையமாகத்தான் தொடங்கப்பட்டது. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பலவிதமான மருத்துவ சோதனைகளையும் வெவ்வேறு இடத்தில் செய்வதால் நேரம் விரயமாவதோடு, அலைச்சல், மற்றும் அதைக்காட்டி மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டியுள்ளது.

எல்லா சோதனைகளும் ஒரே இடத்தில் செய்ய முடிந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆலோசனையும் சிகிச்சையும் எளிதாக இருக்கும் என்பதால், அல்ட்ரா சவுண்ட் மிஷின், எக்ஸ்ரே, ஸ்கேன், பின்னர் மேமோக்ராம் , வேக்வம் பயாப்ஸி சோதனை என்று விரிவுபடுத்தினோம்.

தெற்கு ஆசியாவிலேயே,  மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாமே ஒரே இடத்தில் துவங்கியது  இந்த சென்னை ப்ரெஸ்ட் சென்டரில்தான். மேமோகிராம் போன்ற  பரிசோதனைகளயும் டிஜிட்டல் முறையில் இங்கேதான் முதலில் கொண்டு வந்தோம்.

3 டி எனப்படும் நவீன தொழில் நுட்பம் (digital breast tomosynthesis (DBT)) மூலம் சோதனைகள் செய்யப் படுகின்றன. இது மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். மார்பகத்தை பல்வேறு கோணங்களில் இருந்து பல எக்ஸ்-ரே படங்களை எடுத்து திசுக்களின் 3D படங்களை உருவாக்குகிறது. அடர்த்தியான மார்பகங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவுகிறது.

பரிசோதனைக்கு வருபவர்கள், முன்புபோல ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும் ஒரு நாள் என்று  பலமுறை மருத்துவ மனைக்கு வரத்தேவையில்லாமல்,  ஒரே நாள், ஒரு விசிட் (Oneday,One Visit) என்ற முறையில், தேவைப் படுவோருக்கு பயாப்ஸி வரை எல்லாமே இந்த மையத்தில் சோதிக்கப் படுவதால், நேரம், பண விரயம் தவிர்க்கப்படுகிறது.

குறிப்பாக வெளியூரிலிருந்து வருவோருக்கு, அடிப் படையான பரிசோதனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் இந்த மையத்தில் கிடைத்து விடுகிறது.

breast cancer
எக்ஸ்-ரே பரிசோதனை
Q

இங்கே வேறு என்னென்ன சிகிச்சை  முறைகள் உள்ளன?

A

முதல் கட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகு, பையாப்ஸி சோதனையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தால், அறுவை சிகிச்சை,  ரேடியேஷன்,  கீமோ போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.

Q

மார்பக புற்றுநோய் வர முக்கியமான காரணங்கள் என்ன டாக்டர்?

A

ஐந்து முதல் பத்து சதவீதம் ஜெனிடிக்ஸ் எனப்படும் மரபணுப் பண்புகள். பரம்பரையாக வர வாய்ப்புக்கள் உண்டு. மார்பகப் புற்று நோய்க்கு மரபணு பத்து சதவீதம் காரணம். கேட்கீப்பர் ஜீன்ஸ் (Gate Keeper Genes) எனப்படும் பாதுகாக்கும் மரபணுக்கள் சரியாக இயங்காவிட்டால் புற்று நோய் செல்களை வளர விட்டுவிடும்.

பெண்களின் பூப்பெய்தல், குழந்தைப்பேறு இவற்றுக்குக் காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன். இதுவே சில நேரங்களில் புற்று நோய் செல்கள் வளர காரணமாகிவிடுகின்றன.

நமது லைஃப் ஸ்டைல் மாறி, உணவுப் பழக்கங்களும் மாறி வருவதால், இப்போதெல்லாம் சில பெண் குழந்தைகள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். (early menarche)

மெனோபாஸ் வருவதும் 50 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது. இப்படி நீண்ட காலம் ஏற்படும்  மாதவிலக்கும் ஒரு காரணமாகலாம். தாமதமாக முதல் குழந்தை பிறப்பது தாய்ப்பால் தராதது, குழந்தை பிறக்காமல் இருப்பது போன்றவை சில காரணங்களாகலாம். ஆனால் இவை மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.

Q

சுயபரிசோதனை செய்வது எப்படி?

A

குளிக்கும்போது மார்பகங்களை தொட்டுப் பார்த்து ஏதாவது கட்டி வீக்கம், மார்பக அளவில் மாற்றம், அக்குள் பகுதியில் கட்டி முலைக்காம்புகளில் மாற்றம் இதெல்லாம் இருக்கிறதா, என்று சோதித்துப் பார்க்கவும்.

மாதவிலக்கின் முன்பு சிலருக்கு மார்பகம் கனமாக இருக்கும் லேசாக வலி கூட இருக்கலாம். அதனால் மாத விலக்கு முடிந்த பிறகு சோதித்துப் பார்க்கவேண்டும்.

Symptomatic (அறிகுறிகளுடன் கூடிய) மார்பகப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரை அணுகும்போது, உடல் பரிசோதனை, மேமோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் தேவைப்பட்டால் பயாப்ஸி போன்றவை செய்யப்படும்.. 

40 வயது கடந்துவிட்டால் மேமோகிராம் சோதனை செய்து கொள்வது அவசியம். மார்பக கட்டியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட சிறந்த டெஸ்ட் இது.

Q

பினைன் (Benign), மேலிக்னன்ட்(Malignant)  கட்டிகளிடையே என்ன வித்தியாசம்?   

A

பொதுவாக கட்டி என்பதே சில திசுக்கள் அதிகப்படியாக வளருவதுதான்.பினைன் கட்டிகள் கேன்சர் அல்லாதவை. வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அருகில் இருக்கும் உறுப்புக்களை பாதிக்காது. ஒரு மச்சம்போல என்று உதாரணம் சொல்லலாம். அதற்கு சிகிச்சையே தேவையில்லை எனலாம். ஆனால் மேலிக்னன்ட் கட்டிகள் மற்ற உறுப்புக்களை ஊடுருவிப் பெருகும்  தன்மை கொண்டவை.

breast cancer
மார்பக புற்று நோயின் அறிகுறிகள்
Q

ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்தாலும் அறுவை சிகிச்சை அவசியமா டாக்டர்?

A

இப்போது உள்ள மருத்துவம் வரை க்யூரேடிவ் ட்ரீட்மென்ட் ஆக, அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றி விடுவதுதான் நல்லது. வருங்காலத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவம் கண்டுபிடிக்கப்படலாம். ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Q

மார்பகப் புற்று நோய் வந்தால் மார்பகத்தை எடுக்க வேண்டியது அவசியமா?  

A

இல்லை. புற்று நோயின் தாக்கம், கட்டியின் அளவு, எத்தனாவது ஸ்டேஜ், மார்பகத்தின் அளவு, இவற்றை  சோதனை செய்த பின், கட்டியை மட்டும் எடுத்தால் போதுமா அல்லது மார்பகத்தையே எடுக்கவேண்டுமா என்று  முடிவெடுப்போம்.  தொடர்ந்த சிகிச்சைகளாக, ஹார்மோன் தெரபி, கீமோ போன்றவை அளிக்கப் படுகின்றன. தேவைப்படுவோருக்கு மட்டும் ரேடியேஷன் செய்யபடும்.

Q

Metastatic cancer என்பது என்ன டாக்டர்?

A

மார்பகத்திலிருந்து புற்றுநோய் செல்கள் உடலின் பிற பாகங்களுக்கு பரவும் நான்காவது நிலை கேன்சர். (Metastatic cancer) இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், சிகிச்சைகள் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்து வாழ்நாளை அதிகரிக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும். 

Q

மார்பகப் புற்று நோய் வந்தால் கர்ப்பபை வாய் (Cervical cancer) கர்ப்பப்பை, ஓவரி இவற்றில் புற்று நோய் எற்படுமா?

A

மார்பகப் புற்று நோய்க்கும் கர்ப்பப்பை, சர்விகல் கேன்சருக்கும் தொடர்பு இல்லை. ஆனால் மரபணு பிறழ்வு, ஹார்மோன் இவை காரணமாக, ஓவரியில் கேன்சர் வர வாய்ப்பு உண்டு.

Q

பின்னாளில் சர்விகல் கேன்சர் வராமல் தடுக்க, பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்தும் பருவத்தில் தடுப்பூசி போடப்படுவதுபோல் மார்பக புற்று நோய்க்கும் தடுப்பூசி இருக்கிறதா?

A

சர்விகல் கேன்சர் என்பது வைரஸ் காரணமாக வருவது. அதனால் அதற்கு தடுப்பூசி போடப்படுகிறது. அனால் மார்பகப் புற்று நோய் பல்வேறு காரணங்களால் வருவது. இன்று வரை அதற்கு எந்த தடுப்பூசியும் இல்லை.

Q

எந்த வயதில் மார்பகப் புற்று நோய் வருகிறது?

A

பொதுவாக நம் நாட்டில் 40 வயதிலிருந்து 60 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு வருகிறது. சுமார் 13 சதவீதம், 40 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கும், அதே சதவீதம் 70 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் வருகிறது.

Q

இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, தாம்பத்திய வாழ்க்கை சரியாக இருக்குமா? குழந்தை பிறப்பு தடையாக இருக்குமா?

A

இப்போது சில பெண்கள் 30 வயதுக்கு மேல்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு மார்பகப் புற்று நோய் கண்டறியப்பட்டால், சில வருடங்கள் சிகிச்சை நீடிக்கும். ஹார்மோன் தெரபி சிகிச்சை என்றால் ஈஸ்ட் ரோஜன் சுரப்பு நின்று போவதால் தாம்பத்திய வாழ்க்கை , குழந்தை பிறப்பு பாதிக்கப் படலாம். நவீன மருத்துவம் மூலம் தீர்வுகாண முயற்சிக்கலாம்.

Q

ஒன்றில் கேன்சர் வந்தால் இரண்டு பக்க மார்பகத்தையும் அகற்ற   வேண்டியிருக்குமா?

A

சிலருக்கு பைலேடரல்  கேன்சர் (Bilateral Cancer) என்னும் இரு பக்க கேன்சர் வந்தால் இரண்டையும் அகற்ற வேண்டியிருக்கும். குடும்பத்தில் மார்பக புற்றுநோய் வந்திருந்தால்,  சிலருக்கு, மரபணு பிறழ்வு (Genetic Mutation) இருக்கும். அது மரபணு சோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

அப்படி இருந்தால் 60 முதல் 80 சதவீதம் வரை மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. அதிலும் ஒரு மார்பகத்தில் புற்று  நோய் வந்தால் பின்னால் இன்னொன்றிலும் வரும் வாய்ப்பு அதிகம்.

இந்த மரபணு பிறழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. இதற்கான ரத்தப் பரிசோதனை நுட்பமானது.  இப்போது நம் நாட்டிலேயே செய்யமுடியும். ரிசல்ட் தெரிய மூன்று வாரங்கள் ஆகும். வருமுன் காப்போம் என்பதுபோல மார்பகத்தை அகற்றிவிட சிலர் முடிவெடுக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகை ஒருவர், மார்பக புற்று நோய் வந்து, மார்பக நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தன.

ஆனால் அவருக்கு மார்பக புற்று நோய் இல்லை. பின் எதற்காக அருவை சிகிச்சை செய்து கொண்டார்?

யார் அந்த நடிகை? உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

Plastic & Cosmetic Surgeon, மற்றும் மார்பக Re Construction அறுவை சிகிச்சை நிபுணரான பேராசிரியர் மருத்துவர் வெங்கட் வி. ராமகிருஷ்ணன் வழங்கும் மார்பக மீள் கட்டமைப்பு (Breast Re Construction) குறித்த விரிவான விளக்கக் கட்டுரை இதோ:

இதையும் படியுங்கள்:
Breast Re-Construction என்றால் என்ன? பிரபல ஹாலிவுட் நடிகை மார்பக மீள் கட்டமைப்பு செய்துகொண்டது ஏன்?
Breast cancer

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com