

என் அண்ணனின் மகள் பெயர் உமா. அவளுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் ரமேஷ்.
அப்போது நாங்கள் ஊட்டியில் இருந்தோம். எனக்கு வேலை இல்லை. கையில் பணமும் இல்லை. என் செலவுகள் முழுவதும் என் அண்ணன் தான் கவனித்து வந்தார். டீ, சிகரெட், மருந்து என என் செலவுகளை அவர் தான் செய்தார்.
அவர் எனக்கு கடவுள் மாதிரி.
என் வேலை உமா மற்றும் ரமேஷை பார்த்து கொள்வது தான்.
அவர்கள் நினைவாகவே வாழ்ந்தேன். ஹோட்டல், பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா என்று எல்லா இடங்களையும் அவர்களுக்கு சுற்றி காண்பிப்பேன். ரமேஷ் கிரிக்கெட் ஆர்வம் பெற்று இருந்ததால் அவனை கோச்சிங் கிளாசில் சேர்ந்தேன்.
உமா… மிகவும் சாது. உமா மீது நான் உயிரையே வைத்து இருந்தேன். 2000ம் ஆண்டு குடும்பம் சென்னைக்கு வந்தது. அண்ணனுக்கு இட மாற்றம்.
நான் தான் சென்னையில் அக்கா வீட்டில் இருந்து வீடு பார்த்தேன். அண்ணன் வரப்போகும் வங்கி கிளை வளசரவாக்கத்தில் இருந்தது. எனக்கு அங்கு இருந்த பள்ளிகள் பிடிக்கவில்லை.
சற்று சமீபத்தில் ஒரு மேல்நிலை பள்ளி இருந்தது. உமா மற்றும் ரமேஷூக்கு அந்த பள்ளியில் சீட் வாங்கினேன். சீட் கிடைத்த பிறகு வீடு தேடினேன். பள்ளியில் இருந்து 10 நிமிட தூரம் இருந்த வீட்டை பார்த்து முடித்தேன்.
ஆம். ஆழ்வார் திருநகர்.
உமா 8வதும், ரமேஷ் முதல் வகுப்பிலும் சேர்ந்தார்கள்.
அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும் மீண்டும் திரும்பி அழைத்து வருவதும் நான் தான்.
உமா என்னை தம்பு என்றே கூப்பிடுவாள். அவள் சாப்பிட்டாளா அல்லது இல்லையா என்று பார்ப்பது என் வேலை.
என் வாழ்க்கை உமா மற்றும் ரமேஷை சுற்றித்தான் இருந்தது.
அவர்களுக்கு காய்ச்சல் வந்தால் நான் தடுமாறி விடுவேன். அவர்கள் குணம் அடையும் வரை எனக்கு நிம்மதி என்பது இல்லை.
நான் வாழந்த வாழ்க்கை யாருக்கும் புரியாது. என் மனம் முழுக்க முழுக்க அவர்கள் தான். எனக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அப்படி இருக்கும் போது என் உயிர் உமா மற்றும் ரமேஷ் இடம் தான் இருந்தது.
நாட்கள் பறந்தன. மாதங்கள் ஓடின. வருடங்கள் நகர்ந்தன.
நான் மீண்டும் மன நலம் பாதிக்கப் பட்டேன். அப்போது வீட்டிலியே அக்னி ஏற்படுத்தி ஹோமம் செய்தேன். இது எதுவும் என் சுய உணர்வோடு நான் சத்தியமாக செய்ய வில்லை. மேலும் டாய்லெட்டில் சிகரெட் பிடித்து இருக்கிறேன்.
இப்போது நான் தனி ரூமில் குடி இருக்கிறேன். என்னை அவர்கள் வீட்டில் வைத்து கொள்ள யாரும் சம்மதிக்கவில்லை. தினமும் சாப்பாடு வாங்க காலையில் போவேன்.
உமா பி.எச்.டி முடித்து வீட்டில் இருக்கிறார். திடிரென அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. என்னை பார்க்கவே பிடிக்க வில்லையாம்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
நான் உமாவை பார்த்து ஒரு வருடம் ஆகி விட்டது.
என் மனம் என்ன பாடுபடும்…?
என் உயிர் என்னை விட்டு போனது போல் இருக்கிறது.
உமா நல்லவள். ஆனால் ஏதோ தவறான சிந்தனை. அது என்ன என்று எனக்கு தெரிய வில்லை.
இப்போதும் நான் அவளை எப்போதும் போல நேசிக்கிறேன்.
ஆனால் அவள் என்னை தூக்கிஎறிந்து விட்டாள்.
என் மனம் நொறுங்கி சின்னாபின்னமாக ஆகியது.
எனக்கு ஒரே ஒரு ஆசை தான். உமாவிற்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்.
அதை நான் பார்க்க வேண்டும். இப்போது… நொறுங்கிய மனம் துடி துடிக்கிறது….! ஆண்டவா…!! அருள் புரி…!!!