
-ஜி.எஸ்.எஸ்.
பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது உங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியிருக்கும். ஐ.ஏ.எஸ்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.காம். இப்படிக் குறிப்பிட்ட ஒரு கோர்ஸில்தான் சேர வேண்டுமென்று. சிலருக்கு மிகவும் சிறு வயதிலிருந்தே இந்தத் தெளிவு வந்திருக்கும்.
ஆனால், உங்கள் கனவு கோர்ஸ் உங்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். முக்கியமாக அந்த கோர்ஸில் சேரத் தேவைப்பட்ட மதிப்பெண்களை நீங்கள் பெற முடியாமல் போயிருக்கலாம்.
ஆக, வேறு ஏதோ கோர்ஸில்தான் சேரும்படி ஆகிவிட்டது. என்ன செய்வீங்க? இடிந்து போய்விடுவீங்களா? உற்சாகமிழந்து விடுவீங்களா? அப்படியானால் உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
அந்தப் படிப்பைப் படித்தால் ''பெருமை' என்ற எண்ணமா?
உங்கள் இலக்கு சரியானதா என்பதை யோசியுங்கள். குழந்தைகளிடம் "நீங்கள் பெரியவனானதும் என்ன ஆவீங்க?" என்று கேட்டுப் பாருங்கள். அவர்களில் ஒரு சிலர் "கண்டக்டர் ஆவேன்" என்பார்கள் முகம் கொள்ளாத பெருமையுடன். அதாவது டிக்கெட்டைக் கிழித்துக் கொடுப்பதில் ஒரு கர்வம். அவர்களுக்குத் தெரியாது கோடையில் பேருந்து நிரம்பி வழியும்போது, கண்டக்டராக வேலைப் பார்ப்பது எவ்வளவு சிரமம் என்பது.
எந்தப் படிப்பைப் படிப்பதால் பெருமை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்தப் பெருமை நிலைத்திருக்குமா என்று தெரியாது.
ஓர் உதாரணத்துக்கு மருத்துவக் கல்வியை எடுத்துக் கொள்வோம். அது பெருமைக்கு உகந்ததுதான். ஆனால் அப்படி ஒரு பணியைப் பெற்ற சிலரும் மனம் கசந்துபோய் இருப்பது எனக்குத் தெரியும். அதேபோல் ஐ.ஏ.எஸ். ஆனவர்களில் அரசியல்வாதிகளோடு மல்லுக்கு நின்று அவர்களால் இடம் மாற்றப்பட்டு சோர்ந்து போனவர்களும் உண்டு. எனவே, 'பெருமை' என்பது என்றைக்குமே நிலைத்து நிற்கும் என்று சொல்ல முடியாது.
சின்ன வயதிலிருந்தே வீட்டில் அந்தப் படிப்பைத்தான் நீ படிக்கணும் என்று சொல்லிச்' சொல்லி அந்த எண்ணத்தை அழுத்தமாக உங்களுக்குள் உருவாக்கியிருந்தார்களா?
ஒருவேளை அந்தக் கோர்ஸில் சேர்ந்து தேர்ச்சி பெற வேண்டும் என்பது உங்கள் அப்பா அல்லது அம்மாவின் மாணவப் பருவ ஏக்கமாக இருந்து அது நிறைவேறாமல் போயிருக்கலாம். அதனால் ஏற்பட்ட ஏக்கத்தை உங்கள் மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்திருக்கலாம். தாய், தந்தைக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை அலாதிதான். ஆனாலும் இது உங்கள் வாழ்க்கை. இதில் பிறரது ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளலாமே தவிர முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். உங்களுக்கு ஆர்வமில்லாத, ஆனால் வீட்டினர் கட்டாயப்படுத்திய, ஒரு கோர்ஸ் உங்களுக்குக் கிடைக்காததே ஒருவிதத்தில் வரம்தான்.
அந்தப் படிப்பின்மீது உங்களுக்கு நிறைய ஆர்வமா? அது உங்களுக்கு மிகவும் பிடித்த பாடமா?
மிகப் பெரும்பாலான படிப்புகளை நீங்கள் பகுதி நேரமாகக் கூடப் படிக்கலாமே. இப்போதெல்லாம் வேதியியல், அறிவியல் போன்ற (பரிசோதனைச் சாலைகள் தேவைப்படும்) கல்வியைக்கூட பகுதி நேரக் கல்வியாகப் படிக்க முடிகிறதே. பெரும்பாலான சப்ஜெக்ட்களை தொலை தூரக் கல்விமுறையிலும் முடிக்க முடியுமே. எனவே, உங்களுக்கு ஆர்வமான படிப்பை உங்களால் எப்படியும் படிக்க முடியும். வழிமுறையில்தான் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
'அந்தக் கோர்ஸை முடித்தால்தான் வளமான வருங்காலம் இருக்கிறது' என்கிறீர்களா?
வருங்காலத்தில் வருமானம் அதிகம் இந்த கோர்ஸில்தான் என நினைக்கிறீர்களோ? ஒன்றில் தெளிவு பெறுங்கள். எந்தக் கல்வியாக இருந்தாலும் முதல் தரமாகப் படித்து மதிப்பெண்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரம் இருக்கத்தான் செய்கிறது. சரித்திரப் பாடத்தில் மிகச் சிறப்பாகக் கல்வியை முடித்தவர்கள்கூட உலக அளவில் அங்கீகாரமும், வருமானமும் பெற்று வருகிறார்கள்.
தவிர மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு வேலைவாய்ப்புகள் எந்தத் துறைக்கு இருக்கும், எதற்கு இருக்காது என்பதையெல்லாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. (சமீபத்தில் சந்தித்த பொருளாதாரச் சரிவை மறக்க முடியுமா? கணினிப் பொறியாளர்களையெல்லாம் துவண்டு விழச் செய்த நிலை அல்லவா அது?).
போகப்போக எந்தத் துறையில் சிறந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறதோ அதற்கான படிப்புகளை அதிகப்படியாக பகுதி நேரத்தில் படிக்க முடியாதா என்ன?
இதையும் மனதில் கொள்ளுங்க!
இறைவன் மேலும் ஒரு சிறப்பான பாதையை அளிப்பதற்காகக்கூட இந்த தாற்காலிக ஏமாற்றத்தை நமக்குக் கொடுத்திருக்கலாம். விபத்தில் ஒரு காலை இழந்தபோது, நடிகை சுதா சந்திரன், எவ்வளவு துடித்திருப்பார். ஆனால் அந்த விபத்தே அவரது வருங்காலத்தை நல்லதொரு உயரத்துக்குக் கொண்டுபோனதே! கேரம் சாம்பியனாக விளங்கிய அனு ராஜு என்பவர் "எனக்கு வாலிபால் விளையாட்டில்தான் இஷ்டம். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அதை ஆடமுடியாமல் போனது. அப்புறம்தான் கேரம் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினேன்" என்று கூறியதுண்டு.
'இருந்தாலும் கூட' என்று மெலிதாக தயங்கிறீங்களா?
மூச்! எல்லாவற்றையும் விட முக்கியமாக, எப்படியும் நீங்கள் நினைத்த கோர்ஸ் உங்களுக்குக் கிடைக்கவில்லை. வேறு கோர்ஸில்தான் சேர்ந்திருக்கிறீர்கள். அதை வேண்டாவெறுப்பாகப் படிப்பதைவிட, பிடித்துப் படித்தால்தான் அதில் சிறக்க முடியும் என்ற நடைமுறை உண்மையை எண்ணிப் பாருங்க. இல்லாவிட்டால் கனவு கண்ட கோர்ஸையும் இழந்து, கைக்குக் கிடைத்த கல்வியையும் அலட்சியம் செய்து, வருங்காலத்தைத் தொலைத்துவிட நேரிடும். எனவே தெளிவு பெறுங்க. ஆல் தி பெஸ்ட்!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜூன் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்