சிதறாத தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து ரசிகர்களின் மனதை சிறைபிடித்த சாதனை எழுத்தாளர்!

அனுராதா ரமணன் (1947-2010) நினைவு நாள் - மே -16
அனுராதா ரமணன்
அனுராதா ரமணன்
Published on

மிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான். அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளையே அடித்தளமாகக் கொண்டு காட்சிப்படுத்தும். அன்று முதல் இன்று வரை பாகுபாடின்றி கதைப் பிரியர்கள் விரும்பும் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் இடம்பெறுவார்.

தமிழுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூரில் 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் பிறந்தவர் அனுராதா. அவரது தாத்தா அந்த நாளைய நடிகர். பெரும்பாலான திரைப்படத்தில் தந்தை வேடம் தாங்கி நடித்ததால் ‘அப்பா’ பாலசுப்ரமணியம் என அறியப்பட்டவர்.

18ஆவது வயதில் திருமணம். இவரது கணவர் ரமணன். ஆனால், தன் 28ஆவது வயதிலேயே கணவனை இழந்தார். மணவாழ்க்கை மொத்தம் பத்தே ஆண்டுகள். இவருக்கு சுதா, சுபா என்ற இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் பணிவாய்ப்பு தேடி முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின் தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக்கொண்டார். 1977இல் அந்தப் பிரபல மாத இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.

பிரபல இதழில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது. இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவற்றுள் கே.பாலசந்தர் இயக்கிய ‘ஒரு வீடு இரு வாசல்’ திரைப்படம் பிற சமூகச் சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991இல் பெற்றது.

இவரது கதையை மையப்படுத்தி 1988இல் வெளியான ‘ஒக்க பாரிய கதா’ (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.

இவரது ‘சிறை’ சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார். மேலும், இவர் தமிழ்நாட்டின் காங்கிரஸ் வழங்கிய சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான ராஜீவ்காந்தி விருது பெற்றது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
அவசியம் தவிர்க்க வேண்டிய 6 வகை உணவுகள்!
அனுராதா ரமணன்

ஓவியம் வரைவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தவர். சென்னை எழும்பூர் ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றார். பரீட்சை நேரம் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட, இடது கையினால் வரையப் பயின்று, பரீட்சையில் வென்றது வியப்பு.

எழுத்தாளர் என்பதைத் தாண்டி இவர் செய்த மற்றொரு முக்கிய சாதனை, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அதற்கு தீர்வுகள் கூறியதுதான். பிரபலமான வார இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு வாரமும் ‘அன்புடன் அந்தரங்கம்’ என்ற தலைப்பில் இவர் தந்த வாழ்வியல் ஆலோசனைகள் ஏராளமான வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

மங்கையர்மலர் பத்திரிகையில் தொடர்...
மங்கையர்மலர் பத்திரிகையில் தொடர்...

இவர் தன் வாழ்க்கை வரலாற்றை தனிப் புத்தகமாக எழுத வில்லையாயினும் தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை, எண்ணங்களை, உணர்வுகளை நான்கு மாறுபட்ட புத்தகங்களாக எழுதியுள்ளார். ’மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்’ என்ற தலைப்பில் தனது நோய்கள் குறித்தும் சிகிச்சை பற்றியும் நகைச் சுவையுடன் (மங்கையர்மலர் பத்திரிகையில்) எழுதி, படித்த அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்து வரவேற்பு பெற்றார்.

அனுராதா ரமணன் 30 ஆண்டுகளில் 800 புதினங்களும் சுமார் 1230 சிறுகதைகளும் எழுதியதுடன் அவை அனைத்தும் மக்களால் விரும்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் திரைப்படங்களாக மட்டுமின்றி தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

மே மாதம் 16ஆம் நாள் தனது 62ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார் அனுராதா. இறந்த பிறகு தனது உடலை மருத்துவப் படிப்பிற்காக தானம் செய்ய விரும்பினார். ஆனால், பல ஆண்டுகளுக்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் உடலைத் தானம் செய்ய இயலவில்லை. ஆனால், கண்கள் நன்றாக இருந்ததால் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.

சிறு வயதில் கணவரை இழந்து தனியொருவராக இந்தச் சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு இரு மகள்களையும் வளர்த்து, தன்னுடன் உறவாடிய நோய்களை தன் உற்சாகமானப் புன்னகையால் புறந்தள்ளி, சர்ச்சைகளைச் சந்தித்தாலும் சிதறாத தன்னம்பிக்கையுடன், வாழ்ந்தவரை தன் எழுத்தினால் ரசிகர்கள் மனதை சிறைபிடித்த அனுராதா ரமணன் எழுத்து உள்ளவரை நிலைத்திருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com