
இன்றைய இளையதலைமுறையினர், கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் விதவிதமான பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டியிருக்கிறது ஒரு சீன மூதாட்டியின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியல். அவர் ஒரே ஆண்டில் ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்து உள்ளது அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பெண்மணி, தனியாக வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நகரப் பகுதியில் உள்ள அவரது பிளாட்டை விற்ற பிறகு புறநகர் ஜியாடிங் மாவட்டத்தில் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது. பல ஆண்டுகளாக இவர் செய்த ஷாப்பிங் மூலம் ஆயிரக்கணக்கான பொட்டலங்களை குவிந்து, அவரது பிளாட்டை விளிம்பு வரை நிரப்பி வழிகிறது. நடக்கவோ அல்லது தூங்கவோ கூட சிறிது இடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. வாங்கின் சம்மதத்துடன், இவரது குடியிருப்பு கடந்தாண்டு மே மாதம் சுத்தம் செய்யப்பட்ட போதும் ஷாப்பிங் பதுக்கல் தொடர்கிறது.
அப்படி பிரிக்கப்படாத பொருட்களுக்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். பொட்டலங்கள் அடைந்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அண்டை வீட்டார். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை. பாட்டி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கின் உற்சாகத்தை அனுபவிக்க விரும்புவதை ஒப்புக்கொண்ட வாங் கூறுகையில், ‘தனது நண்பர்களும் குடும்பத்தினரும் தன்னிடம் பணம் கேட்டு பிச்சை எடுப்பதைத் தடுக்கவே பணத்தை வீணாக்க விரும்புவதாக’ கூறினார்.
மேலும், ‘நான் பணக்காரர் என்ற தோற்றம் வரக்கூடாது என்பதற்காக, எல்லா பணத்தையும் சாமான்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டேன். என் வீட்டில் பொருட்களைக் குவியல்களாகக் காணும்போது என்னிடம் கடன் கேட்பது பொருத்தமற்றது என்று நினைத்து அவர்கள் என்னிடம் கடன் கேட்க மாட்டார்கள்,’ என்றும் கூறும் வாங், முக்கியமாக தங்க நகைகள், சுகாதாரத் துணை உபகரணங்கள் மற்றும் அழகு பொருட்கள் ஆகியவற்றை அதிகளவு வாங்கியுள்ளார். இவரது இந்த நடவடிக்கை மற்றவர்கள் தன்னிடமிருந்து கடன் வாங்குவதைத் தடுக்க, ஷாப்பிங்கில் பணத்தை செலவிட அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
வாங்கின் பிளாட்டில் இருந்து வரும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி, அனுதாபத்தையும் கவலையையும் தூண்டியதாக SCMP அறிக்கை கூறியுள்ளது. இது சீனாவில் வயதானவர்கள் மனநல நெருக்கடி, சமூக தனிமை மற்றும் மூத்த குடிமக்கள் தனிமையை அனுபவித்து வருவதைக் குறிக்கிறது.
ஷாங்காயைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஷி யான்ஃபெங் கூறுகையில், பதுக்கல் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு சமூக பதட்டம் மற்றும் விரக்தி பொதுவானது என்றும், அவர்களுக்கு நீண்ட கால மனநல சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறினார்.