
பொதுவாக யாருக்காவது அதிக மகிழ்ச்சி அல்லது துக்கம் வந்தால் அதனை அழுகை மூலம் தான் வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் உணர்ச்சிகளை, மன அழுத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சில நேரங்களில் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வந்துவிடும். அழுதால் யாராவது பார்த்து விடுவார்களோ, நன்றாக இருக்காதே என்று அழுவதை நிறுத்தி விடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள். ஆனால் மும்பையில் இது போன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக க்ரையிங் கிளப் என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
க்ரையிங் கிளப்கள் என்றால் என்ன?
கிரையிங் கிளப் என்பது மக்கள் கூடி அழுவதற்கான ஒரு இடமாகும். மன அழுத்தத்தை குறைக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இது ஒரு வழியாகும். இந்தியாவில் கிரையிங் கிளப்புகள் (Crying Clubs) சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. குறிப்பாக மும்பை போன்ற பெருநகரங்களில் உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்திற்காக மக்கள் ஒன்று கூடி அழுவதற்கு இந்த கிளப்புகள் இடமளிக்கின்றன. இந்த புதிய போக்கால் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் இணைந்து ஆறுதல் பெறவும் ஒரு பாதுகாப்பான இடத்தை நாடி பயன் பெறுகிறார்கள். மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் கார்ரோடு பகுதியில் இந்த கிரையிங் கிளப் கடந்த ஜூன் 15-ம் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கிரையிங் கிளப் முதன் முதலில் தோன்றிய இடம்:
இந்தக் கிளப் முதன்முதலில் ஜப்பானில் தான் தொடங்கியது. ருய்காட்சு என்ற அமைப்பு தான் இந்த கிரையிங் கிளப்பை தொடங்கியது. அடிக்கடி உணர்ச்சிபூர்வமான படங்களை பார்ப்பதற்கும், மனதைத் தொடும் கதைகளை கேட்பதற்கும், இதயபூர்வமான கடிதங்களைப் படிப்பதற்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அழுகை மூலம் மக்கள் உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்து விடுபட முடியும் என்பதே இதன் கொள்கையாகும்.
இவை ஏன் பிரபலமாகின்றன தெரியுமா?
மக்கள் உணர்வு ரீதியான ஆரோக்கியம் பெறுவதற்கு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் ஒரு வழியாக இந்த கிளப்கள் பார்க்கப்படுகின்றன.
இந்த கிளப்புகளில் இணைந்து தங்கள் உணர்வுகளை பகிர்வதன் மூலம் ஒரு பாதுகாப்பான உணர்வைப் பெறுவதாக உணர்கிறார்கள். தனிமை மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கும் ஆதரவளிக்கும் ஒரு சமூகத்தை இந்த கிளப்புகள் உருவாக்குகின்றன.
இந்தியாவில் கிரையிங் கிளப்களின் வளர்ச்சி:
2017 முதல் ஹெல்த்தி க்ரையிங் கிளப் சூரத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் மக்கள் தங்கள் பாதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சி ரீதியான குழுக்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இவை அதிகாரப்பூர்வ கிளப்கள் அல்ல. இரண்டாவதாக சமீபத்தில் மும்பையும் க்ரையிங் கிளப் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த கிளப்புகள் ருய்காட்சு எனப்படும் ஜப்பானிய நடைமுறையால் ஈர்க்கப்பட்டுள்ளன. இவை நம் பேச்சைக் கேட்கும் ஆதரவான அந்நியர்களை கண்டுபிடிக்கும் ஒரு தனித்துவமான சூழலை வழங்குகிறது. ஜப்பானில் ருய்-கட்சு என்றால் 'கண்ணீர் தேடுவது' என்று பொருள்.
இவற்றின் குறிக்கோள்:
மன அழுத்தத்தை குறைத்து மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நன்றாக உணர வேண்டுமென்று அழுவதுதான் இந்த க்ளப்பின் குறிக்கோளாக உள்ளது. மனமுடைந்து இருந்தாலும், சோர்வாக இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு தீர்ப்பு இல்லாத இடமாக இது திகழ்கிறது. மங்கலான விளக்குகள், இனிமையான தேநீர், புரிந்து கொள்ளும் மக்களுடன் சேர்ந்து அழலாம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் அல்லது அமைதியாக உட்கார்ந்து விட்டு வரலாம்.
உணர்ச்சி வசப்பட்டு அழுவது மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். அத்துடன் உணர்ச்சி தெளிவையும் உண்டாக்கும் என்ற உண்மையை அறிவியல் ஆராய்ச்சி ஆதரிக்கிறது. இது போன்ற இடங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய பின்னர் தங்கள் மனம் அமைதியாகவும், உணர்ச்சி ரீதியாக சமநிலையில் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.