
மனிதனின் முதல் பாஷை 'சைகை' என்பார்கள். அது உண்மையில்லை. அழுகையே மனிதனின் முதல் பாஷை என்பதை குழந்தைகளைக் கவனித்தால் தெரிந்துவிடும். அது பேசி புரிய வைக்கும் வரை, தன் தேவைகளை அழுகையின் மூலமாகவே வெளிப்படுத்தும். சில குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் போது கண்ணீரே வராது. அது நம்மை ஏமாற்றும் போலி அழுகையாகும். ஆனால் உண்மையில், பிறந்த குழந்தைகளுக்கு சில மாதங்கள் வரை கண்ணீர் வராது. இதற்கு அவர்களுக்கு கண்ணீர் சுரப்பி வளராதது காரணமாகும்.
அழுகை என்பது ஒரு இயற்கையான செயல். இது பல்வேறு காரணங்களால் தூண்டப்படுகிறது. மக்கள் ஏன் அழுகிறார்கள் என்பதற்கு பல்வேறு உளவியல் மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. காரசாரமான உணவை சாப்பிடும்பொழுது, பச்சை மிளகாயை கடிக்கும்பொழுது, தொலைக்காட்சியில் உணர்ச்சி மயமான காட்சிகளைக் காணும்பொழுது நம்மை அறியாமல் கண்களிலிருந்து நீர் அருவி எனக் கொட்டும்.
அழுகை என்பது சோகம், வலி, ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். அழுகையின்பொழுது உடல் ரீதியாகவும் சில மாற்றங்களைக் காணலாம். முகம் கோணிப்போவது, ஒலி எழுப்பி அழுவது, சில நேரங்களில் மகிழ்ச்சி, பயம் போன்ற காரணங்களினாலும் அழுகை வரும். அழுகையின்பொழுது மூளையிலிருந்து குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
2011 ஆய்வில், பெண்கள் வருடத்திற்கு 30-64 முறை அல்லது அதற்கும் மேல் அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 5-7 முறை மட்டுமே அழுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களை வலிமையாகவும், அவர்களை அழாமலும் வைக்கின்றது. சில நேரங்களில் பெண்கள் சராசரியாக மாதத்திற்கு 3.5 முதல் 5 முறை அழுகிறார்கள் என்கிறார்கள்.
புரோலாக்டின் ஹார்மோன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. பெண்களுக்கு இது மிகவும் அதிகமாக இருப்பதால், பெண்கள் அதிகம் அழுவதற்கு காரணமாக இருக்கின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த ஹார்மோன் மிகவும் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
வருத்தங்களைக் குறைப்பதற்கு மட்டுமல்ல நல்ல உடல் நலத்திற்கும் அழுவது நல்லது என்று ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் .ஜே.கிராஸ் என்பவர் கண்டறிந்துள்ளார். உணர்ச்சி வசப்பட்டு அழும் போது வெளிவரும் கண்ணீரில் மன அழுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான ஹார்மோன்களும் வெளியேறி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறதாம். அழுகை நம் அறிவையும் பாதிக்காமல் உடலில் படபடப்பு போன்றவற்றை நீக்கி நம்மை அமைதிபடுத்துகிறதாம், இதய துடிப்பு, உடலின் வெப்பம் முதலியவை நம் அழுவதால் சீராகிறது.
மன அழுத்தமில்லா வாழ்வு வேண்டுமா? வாரத்திற்கு ஒருமுறையாவது அழுது கண்ணீர் விடுங்கள் என்கிறார்கள் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள டோஹோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். டென்ஷனான மனநிலையை சிரித்து மகிழ்ந்து சரி செய்யலாம், தூங்கி சரி செய்யலாம், ஒரு கப் காபி சாப்பிட்டு சரி செய்யலாம். இதனை விட சிறந்தது அழுது கண்ணீர் விடுவது தான் என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.
கட்டுப்படுத்த முடியாத துயரத்தை அனுபவிக்கும் போது அழுகை வெளிப்படும். அந்த சமயத்தில் மட்டுமின்றி அவ்வப்போது அழுவது அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளை விடுவிப்பதற்கும், மன அழுத்தத்தை குறைக்க வழி வகை செய்யும். அழுகையின் போது எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள் வெளிப்பட்டு மன வலியை குறைக்கும் நிவாரணியாக செயல்பட்டு மேம்பட்ட மனநிலைக்கும் வித்திடும்.
அதிலும் இரவில் தூங்கச் செல்லும் முன்பு அழுவது மனநிலையை மேம்படுத்துவதோடு ஆழ்ந்த தூக்கத்திற்கும் உதவும். அதற்காக அடிக்கடி அழக்கூடாது. அப்படி அடிக்கடி அழுவது பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அழுகை மூலம் கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீர் பல நோய்களின் தன்மையை காட்டும் 'மீட்டர்' என்பது தெரியுமா? உடலில் உள்ள பல வியாதிகளை நம் கண்ணீர் காட்டிக் கொடுக்கிறது என்கிறார்கள். நம் கண்களிலிருந்து வரும் கண்ணீர் மூலம் 90 நிமிடங்களில் நமக்கிருக்கும் நோய்களை கண்டறிய முடியும் என்கிறார்கள். அப்படி என்ன வியாதிகளை கண்டறிய முடியும்? பார்கின்சன் நோய், முடக்கு வாதம் (ரூமாட்டிக் ஆர்தரைட்டீஸ்), அல்சைமர் நோய், கேன்சர், டையபடிக் ரெத்னோபதி, குளுக்கோமா போன்றவைகள் என்கிறார்கள்.