
பாரதியார் பெயரைச் சொல்லும்போது உள்நாக்கும் தித்திக்கும்.
உயிருள்ள வரையில் மறக்க முடியாத மாமனிதர்.
சுப்பையாவாக எட்டயபுரத்தில் பிறந்து தன் கவித்திறனால்
புரட்சிக்கர கவிகள் படைத்து 'பாரதி' ஆனவர்.
பாக்களின் தலைவன்.
தமிழ் ஆசிரியராய், செய்தித்தாள் ஆசிரியராய் தடம் பதித்த உலகளாவிய சிந்தனையாளர்.
மூடநம்பிக்கை உடைத்து எறிந்தவர்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே கூறி சமுதாயத்தை தட்டி எழுப்பியவர்.
பார்த்தசாரதியின் சங்கொலியால் பாரதத்தை தட்டி எழுப்பியவர்.
ஊமையாய் இருந்த மக்களை எழுச்சியுற வைத்த நாயகன்.
கங்கையை, காவிரியை (அன்றே) இணைத்திட்ட தேசியவாதி.
ஊழிக்கூத்தில் காளியை நடனம் ஆட வைத்தவர்.
வசனக் கவிதைகளை வாரி வழங்கிய வள்ளல்.
ஏடுகளில் மட்டுமல்ல; வீடுகளிலும் பெண்ணை மதித்தவர்.
பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்று முழங்கியவர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு பொது என்று சொன்ன மாமனிதர்.
குலப் பாகுபாடு வெறுத்து குருவியாகி பறந்திடச் சொன்னவர்.
பாமரரும் பாடிட புது மரபிற்கு புதுக்கவிதை வித்திட்டவர்.
ஒரு நாளும் புகழ்ச்சிக்கு மயங்காதவர்.
உள்ளத்தில் பயம் அறியாத குழந்தையவர்…
மொத்தத்தில் யுகங்கள் பல கடந்தாலும் யுகக்கவியாய் நம் மனதில் நீக்கமற நிறைந்து வாழ்பவர் முண்டாசுக் கவிஞர்.
இவரின் பல பொன்மொழிகள், வசன கவிதைகள், கவிதைகள் ஒவ்வொன்றும் நம் அன்றாட வாழ்வில் (நூற்றாண்டை கடந்த போதிலும்) இன்றளவும் பொருந்தக் கூடியவை.
"துன்பம் நேரும் சமயத்தில் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள்;
அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகிவிடும்."
எவ்வளவு எளிமையாக துன்பத்தை கடக்க கற்றுக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.
"இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக்கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்தது பொறுமை..."கொஞ்சமே கொஞ்சம் இதைப்பற்றி யோசிக்க எவ்வளவு பெரிய உண்மை இது என்பது புரியும்.
அன்றாட நிகழ்வில்... தேவையில்லாத விஷயங்களில்… (நாம் பேசாமல்) பொறுமையைக் கடைப்பிடிக்க நம் வாழ்க்கை சொர்க்கமாகும்.
"இளமையிற் கல்லென இசைக்கும் ஔவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்...!"
படிக்க வேண்டிய வயதில் கண்டிப்பாக படித்திடுங்கள். படிப்பு மட்டுமே ஒருவனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார்.
“கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை. கற்பதுவே உன் முழு முதல் கடமை” - எவ்வளவு அழுத்தம் திருத்தம்.
"எப்போதும் கர்வத்துடனே இரு… இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல!”
இதைவிட அழகான உதாரணம் இருக்கமுடியுமா தன்னம்பிக்கையைப் பற்றி விளக்க? (தன்னம்பிக்கை வேறு… தலைகனம் வேறு… இந்த இடத்தில் இதை கண்டிப்பாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். 'முடியும்' என்பது தன்னம்பிக்கை. 'என்னால் மட்டும்தான் முடியும்' என்பது தலைகனம்)
"நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
என்ற வரிகளில் புதுமைப் பெண்ணானவள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கண்ட கனவு அழகாய் புரியும்.
அது மட்டும் அல்லாமல் பெண்ணை தெய்வமாகிய சக்தியாகவே அவர் பல இடத்தில் சொல்லியிருப்பதும் விளங்கும்.
"காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்” என்று சொல்வதன் மூலம் மனைவியினால் மட்டுமே ஒருவன் உயர்வினை எய்த முடியும்; கடவுள் நிலை பெற முடியும் என்பதை புரிய வைத்திருப்பார்.
அது மட்டுமா கற்பு என்ற கோட்பாட்டை பெண்ணிற்கு மட்டும் வைத்து ஆண்களை சுதந்திரமாக தவறு செய்யுமாறு கடவுள் படைத்து விட்டதாக நம்பி இருக்கும் ஆண்களுக்கு, கற்பு என்ற ஒழுக்கத்தை ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதாக பாரதியார் செய்த புதுமையையும் இதில் அறியலாம்.
உலக மக்கள் அனைவருக்கும் கவலை இல்லாத வாழ்க்கை வாழணும் என்று ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவையெல்லாம் நடக்குமா? அது அனைத்துமே இறைவன் கையில்தான் இருக்கிறது. (இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்)
அப்படி பாரதி இறைவனிடம் வரம் கேட்ட பாடலிலிருந்து சில வரிகள் இதோ..
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
இந்த வரிகளை நான்கைந்து முறைகளாவது படியுங்கள்...
இந்தப் பாடலில் மன உறுதி, நம்பிக்கை எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரியும். இந்த ஒரு கவிதை போதும்.
நம் மனம் சோர்வுறும் சமயங்களில் இதை நினைக்க... சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் பீனிக்ஸ் பறவையைபோல் நாம் உயிர்த்தெழுவோம்.
சாதாரண மனிதனாக வாழ்ந்து வாழ்க்கை இப்படியே முடிந்து போய்விடக்கூடாது. நம் முன்னோர்கள் செய்த தீவினைகள் எதுவும் எனை வந்து சேரக்கூடாது. என்னை புதியவன்(ள்) ஆக்கிவிட்டு மனம் கவலையற்றதாக இருக்க செய். அப்போதுதான் மனதில் தெளிவு பிறக்கும். ஒரு உயிர்ப்புள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கான வரம் கொடு என்று பிடிவாதமாக கேட்கிறார் பாரதி.
எவ்வளவு உயிர் துடிப்புள்ள பாடல் வரிகள் பாருங்கள்…
இழப்பு வாழ்வின் இயல்பு. இழந்ததை நினைத்து இயங்காமல் இருக்கக்கூடாது. வீழ்வது தவறில்லை; விழுந்தும் எழாமல் விழுந்து கிடப்பதே தவறு என்பதை இது புரிய வைக்கும் வரிகள்…
இப்படி பாரதியின் ஒவ்வொரு கவிதைகளுக்கு பின்னாலும் ஏராளமான சங்கதிகள் இருக்கின்றன. அதையெல்லாம் சொல்வதற்கு இந்த ஒரு கட்டுரை போதாது... நேரம் இருக்கும்போதெல்லாம் பாரதியின் கவிதைகளை படித்து தெளிவு பெறுங்கள். அது மட்டும்தான் அவருக்கு நாம் இந்த 141 வது பிறந்த நாளில் கொடுக்கும் பரிசாக இருக்கும்.
தினம் ஒரு கவிதை... அதற்கான விளக்கம் (அர்த்தத்தை முழுவதுமாக உணர்ந்து) படியுங்கள். வாழ்வில் தெளிவு பெறுங்கள். வெற்றி பெறுங்கள்.