காதலர்களுக்கு ஏற்ற புது டிரெண்ட்! ரோஸ் தங்கம்...

Different Golds
Different Golds
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

உலகிலேயே தங்கத்தை அதிகமாக நேசிக்கும் மக்களில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் தான் முதலிடம். நம் கலாச்சாரத்தோடு ஒன்றிய இந்த மஞ்சள் உலோகம், வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் விற்பனையாகும் தங்க நகைகளில் பாதி அளவு இந்த இரண்டு நாடுகளில் தான் வாங்கப்படுகிறது. 

ஆனால் சமீபகாலமாகத் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதால், மக்கள் சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று வகைகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். கடைகளில் விதவிதமான வண்ணங்களில் ஜொலிக்கும் நகைகளைப் பார்க்கும்போது, இது உண்மையான தங்கமா அல்லது கவரிங் நகையா என்ற சந்தேகம் பலருக்கும் வருவது இயல்பு. 

மஞ்சள் நிறத்தைத் தாண்டி ரோஸ் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் தங்கத்தைப் பற்றியும், அதன் தரத்தை நிர்ணயிக்கும் கேரட் முறையைப் பற்றியும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேரட்!

நாம் வாங்கும் தங்கம் எவ்வளவு சுத்தமானது என்பதை அளவிடும் ஒரு கருவிதான் 'கேரட்' என்பது. 24 கேரட் என்பது கலப்படமே இல்லாத நூறு சதவீதம் சுத்தமான தங்கமாகும். ஆனால் இது மிகவும் மென்மையானது என்பதால், இதை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. எனவே, தங்கத்துடன் செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்களைச் சேர்த்தால் மட்டுமே அது உறுதியாகும். 

இந்த உறுதிக்காகச் சேர்க்கப்படும் மற்ற உலோகங்களின் அளவை வைத்தே கேரட் பிரிக்கப்படுகிறது. உதாரணமாக, நாம் வழக்கமாக வாங்கும் 22 கேரட் நகையில் 91.6 சதவீதம் தங்கமும், மீதமுள்ள சதவீதம் செம்பு போன்ற உலோகங்களும் கலந்திருக்கும்.

நிறம் மாறும் தங்கம்!

தங்கம் என்றாலே மஞ்சள் என்று இருந்த காலம் மாறிவிட்டது. இப்போது இளஞ்சிவப்பு நிறத்தில் Rose Gold மற்றும் White Gold போன்றவை ஃபேஷன் உலகில் சக்கை போடு போடுகின்றன. தங்கத்துடன் செம்பு உலோகத்தை அதிகமாகக் கலக்கும்போது அதற்கு ஒரு சிவந்த நிறம் கிடைக்கிறது.

இதுவே ரோஸ் கோல்ட் எனப்படுகிறது. அதேபோல, தங்கத்துடன் பல்லாடியம் அல்லது வெள்ளி போன்ற வெண்ணிற உலோகங்களைக் கலந்து, அதன் மேல் ரோடியம் பூச்சு பூசும்போது அது வெள்ளை நிறத் தங்கமாக ஜொலிக்கிறது. நிறம் மாறினாலும் உள்ளே இருப்பது தங்கம் தான்.

இதையும் படியுங்கள்:
நகை கடன் வாங்கியிருப்போர் கவனத்திற்கு..! ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்..!
Different Golds

குறைந்த கேரட் நகைகளின் ஆபத்து!

விலை உயர்வால் இப்போது 18 கேரட், 14 கேரட் மற்றும் 9 கேரட் நகைகள் சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 9 கேரட் நகைகள் சகஜம் என்றாலும், இந்தியாவில் இது இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. 18 கேரட் நகைகள் பொதுவாக வைரக்கற்களைத் தாங்கிப் பிடிப்பதற்கு ஏற்ற உறுதியைக் கொண்டிருக்கும். ஆனால் 9 கேரட் மற்றும் 10 கேரட் நகைகளில் தங்கத்தின் அளவு மிகவும் குறைவு. அதாவது 9 கேரட்டில் வெறும் 37.5 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும். மீதி அனைத்தும் மற்ற உலோகங்களே.

வியர்வையில் கரையும்!

குறைந்த கேரட் கொண்ட நகைகளை வாங்குவது லாபகரமானது போலத் தோன்றினாலும், நீண்ட காலப் பயன்பாட்டிற்கு இது உகந்தது அல்ல. 22 கேரட் நகை மங்காமல் ஜொலிப்பதைப் போல, இந்த 9 அல்லது 14 கேரட் நகைகள் ஜொலிப்பதில்லை. இவற்றைத் தொடர்ந்து அணிந்துகொண்டே இருந்தால், நம் உடலில் சுரக்கும் வியர்வை பட்டு நகையின் நிறம் விரைவில் மாறிவிடும். தங்கத் தண்ணீரில் முக்கி எடுக்கப்பட்ட கவரிங் நகை போல, சில காலத்திலேயே இதன் சாயம் வெளுத்துவிடும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நகை வாங்குவோர் ஷாக்..! கதி கலங்க வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
Different Golds

எனவே நகை வாங்கும்போது அது 916 முத்திரை கொண்ட 22 கேரட் தங்கமா அல்லது ஃபேஷனுக்காக வாங்கப்படும் குறைந்த தரம் கொண்ட தங்கமா என்பதை முடிவு செய்து வாங்குவதே புத்திசாலித்தனம். ஆபரணத்தின் அழகை விட அதன் தரமே நீண்ட காலத்திற்கு நமக்குக் கைகொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com