
தீபாவளி இந்தியாவின் தேசியப் பண்டிகை எனலாம். இந்துக்கள் தவிர ஜைனர், பௌத்தர்களும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கதைகள் கூறப்பட்டாலும், தீபத் திருவிழா இந்தியா முழுக்கவும்தான்!
ஜைன தீபாவளி
தீபாவளி தினத்தன்று தீபாலங்காரம் செய்து மகாவீரருக்கு பூஜை நடத்தி வெகு விமரிசையாக ஜைனர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.
ஜைன மத ஸ்தாபகரான மகாவீரர் இகலோக வாழ்க்கையை நீத்து மகா நிர்வாணம் எய்திய நாள் இதுவேயாகும்.
அவர் நிர்வாணம் எய்தியதும் காசி கோசலைப் பகுதியைச் சேர்ந்த பதினெட்டு மன்னர்களும் மல்ல - விச்சாவி பகுதியை சேர்ந்த இருபது மன்னர்களும் ஒன்றுகூடி எங்கும் தீபாலங்காரம் செய்து அவர் மகா நிர்வாணத்தைப் பெரும் விழாவாகக் கொண்டாடியதாகவும் அன்று தொடங்கியே ஜைனர்கள் தீபாவளி உற்சவம் உற்சவம் கொண்டாடி வருவதாகவும் ஜைன நூலான ‘கல்ப சூத்ரம்’ ஹரி வம்ச புராணம்' ஆகியவை கூறுகின்றன.
பெளத்த தீபாவளி
பாரத நாட்டில் இப்பொழுது பெளத்த மதத்தினர் அதிகமில்லை. லடாக், இமயமலைப் பிரதேசம், அஸ்ஸாம், மணிபுரி,வங்காளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே சுமார் இரண்டரை லட்சம் பௌத்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இலங்கை, பர்மா, சயாம், கம்போடியா, இந்தோசைனா, சைனா, ஜப்பான், திபெத்து ஆகிய வெளிநாடுகளில் பெளத்த மதத்தினர் மிகுதியாக வாழுகிறார்கள்.
அவர்கள் எல்லாம் தீபாவளி தினத்தன்று தீபாலங்காரம் செய்து விழா கொண்டாடுகிறார்கள்.
இதற்கு அவர்கள் சொல்லும் கதையும் ஜைனர்கள் கதையைப் போலவே இருக்கிறது.
பகவான் புத்தர் வைசாக பூர்ணிமையில் அல்ல, தீபாவளி தினத்தன்றுதான் நிர்வாணம் எய்தினாராம். புத்த மதத்தைத் தழுவிய அக்கால மன்னர்கள் சிராவஸ்தியிலிருந்து காசி வரை எங்கும் தீபாலங்காரம் செய்து புத்தரின் மகா நிர்வாணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்களாம்.
அதிலிருந்து பௌத்தர்கள் தீபாவளி விழா கொண்டாடி வருவதாக பெளத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன.
இந்து தீபாவளி
நரகாசுரன் வதத்தையே இந்துக்கள் தீபாவளியாகக் கொண்டாடுவதாக நம் பக்கங்களில் ஒரு கதை கூறப்படுகிறது. இதே போல் நம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு கதைகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசங்களில் அசுராதிபதியாக இருந்த மகாபலியின் சாம்ராஜ்யத்தை வாமனாவதாரம் எடுத்து மகா விஷ்ணு வென்ற நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்:
அன்று அங்கு பெண்கள் சாணம் அல்லது மாவினால் மகாபலியின் உருவம் செய்து வைத்து பூஜை செய்து 'அலாய பலாய தூர்ஹோ, ராஜாபலி ராஜ்ய வௌட்டோ" (துன்பம் தொலையட்டும். நோய் நீங்கட்டும். ராஜாபலியின் ஆட்சி அகலட்டும்) என ஜபிக்கிறார்கள். வழிபடுகிறார்கள்.
வங்காளத்தில் கதை வேறு மாதிரி சும்பன், நிசும்பன் ஆகியவர்களை மகா துர்க்கை சம்ஹாரம் செய்தாள். பிறகு அவளுக்கு வெறி அடங்காது போய் தேவர்கள் சேனைக்குள்ளேயே புகுந்து அவர்களையும் சம்ஹாரம் செய்யத் தொடங்கி விட்டாளாம்.
இந்த மகா துர்க்கையை அடக்கி சிவபெருமான் வெற்றி கொண்ட நாளே தீபாவளி என்று வங்காளிகள் கூறுகிறார்கள்.
மத்தியப் பிரதேசம், டில்லி, ராஜஸ்தானம் ஆகியவைகளில் மகாலக்ஷ்மி தன் கணவரான மகாவிஷ்ணு பூலோகத்துக்கு வந்த நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப்பில் நசிகேசனுக்கு எம தர்மராஜன் உயிர்ப்பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரமும் அளித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
குஜராத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் ஏகிய நாளே தீபாவளி,
தீபாவளியைப் பற்றிச் சரித்திர பூர்வமாக துருவிப் பார்ப்போமானால் அப்பண்டிகை பற்றிய குறிப்புகள் கிறிஸ்து சகாப்த தொடக்கத்தில் எழுதப்பட்ட வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்திலேயே முதன்முதலாகக் காணப்படுவதை காணலாம்.
அந்த நூலில் ‘யக்ஷ ராத்திரி' என்று அது குறிப்பிடப் பட்டிருக்கிறது. யக்ஷ அதிபதியான குபேரனுக்கு நடத்தும் விழாவாக அக்காலத்தில் அது விளங்கி இருக்கிறது.
இதையே இப்பொழுது வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையோடு சேர்த்து ' தன குபேர தேரஸ்' எனக் கொண்டாடி வருகிறார்கள்.
விக்ரமாதித்யன் தீபாவளி தினத்துக்கு மறுநாள் தொடங்கியே தன் விக்ரம சகாபதத்தைத் தொடங்கினான்.
நம் நாட்டுக்கு வந்து போன முஸ்லீம் யாத்ரிகர் அல்பேருனியின் பிரயாணக் குறிப்பிலும் தீபாவளியைப் பற்றி ஒரு செய்தி காணப்படுகிறது.
ஹிந்துக்கள் கார்த்திகை அமாவாசையன்று தீபங்கள் ஏற்றி விழா கொண்டாடுகிறார்கள். வீடுகளை நன்கு சுத்தம் செய்து அலங்கரித்து வாஸுதேவனின் பத்னியான லக்ஷ்மி தேவி ராஜாபலியை விடுவித்துச் செல்லுவதற்காக அன்றிரவு, பூலோகத்துக்கு வருவதாக இந்துக்கள் பூர்ணமாக நம்புகிறார்கள்!
தமிழ்நாட்டிலே மட்டும்தான் தீபாவளியை தீபங்கள் ஏற்றாமலே கொண்டாடுகிறோம். தீபாவளி என்பது தீப ஆவளி என்பதன் சேர்க்கை. வரிசையாகத் தீபங்களை ஏற்றுவதை இது குறிக்கிறது. ஆனால் இதற்கு பதிலாக பட்டாசு விட்டு அமர்க்களப்படுத்துகிறோம்.
இந்து சாஸ்திர சம்பிரதாயத்தில், யாராவது பெரியவர்கள் மோட்சம் புகுந்தால், கோயில் கோபுரங்களிலும், கோயில் மதிள் மீதும் தீபங்களை ஏற்றி வைப்பது வழக்கம். இதை மோட்ச தீபம் என்பார்கள்.
மகாவீரர், மகாபலி, கிருஷ்ணர், புத்தர் எல்லாருடைய அமர தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடினாலும், அன்று தீபங்கள் ஏற்றுவதும் இதிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவ்விதம் தீபாவளி கொண்டாடுவதற்கு விதவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான்.
- சன்மிஷ்டை