

நாம் கண் சிமிட்டுவதை (eyes blinking) வைத்தே உண்மை சொல்கிறோமா அல்லது பொய் சொல்கிறோமா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியுமாம். அதற்கு முதலில் நாம் ஏன் கண் சிமிட்டுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். நாம் கண் சிமிட்டுவதற்கு நான்கு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன:
கண்களை ஈரமாக வைத்திருக்க: நம் கண்களுக்கு மேல் உள்ள கண்ணீர் சுரப்பிகள் தொடர்ந்து நீரைச் சுரந்துகொண்டே இருக்கும். நாம் கண் சிமிட்டும்போது அந்த நீர் விழித்திரை முழுவதும் பரவும். இது நம் கண்கள் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
தூசியை அகற்ற: காரின் 'வைப்பர்' (Wiper) எப்படி கண்ணாடியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்கிறதோ, அதைப்போலக் கண்களில் விழும் தூசியை அகற்ற கண் சிமிட்டுவது உதவுகிறது.
பாதுகாப்பு: கண்களில் அதிகப்படியான வெளிச்சம் பட்டால், இமைகள் உடனே மூடி விழித்திரையைப் பாதுகாக்கும்.
மூளைக்கு ஓய்வு: கண்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் மூளை சோர்வடைந்துவிடும். நாம் சிமிட்டும் அந்தச் சிறு நொடியில் மூளைக்கு ஒரு 'மைக்ரோ ரெஸ்ட்' (Micro Rest) கிடைக்கிறது. இது மூளை சோர்வில்லாமல் இயங்க உதவுகிறது.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 தடவை கண்களைச் சிமிட்டுகிறான். இப்போது பொய் சொல்வதற்கும் கண் சிமிட்டுவதற்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஷாரன் லீல் (Sharon Leal) மற்றும் ஆல்டர்ட் விரிஜ் (Aldert Vrij) ஆகிய இருவரும் இதுகுறித்து நடத்திய ஆராய்ச்சியே மிகவும் புகழ்பெற்றது. அவர்கள் சொல்வது என்னவென்றால், ஒருவர் பொய் சொல்லும்போது அவருடைய மூளைக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்; இதனால் கண் சிமிட்டுவது தற்காலிகமாக நின்றுவிடுமாம். உதாரணத்திற்கு, நாம் ஆர்வமாக ஒரு கேம் விளையாடும்போது மூளைக்கு இருக்கும் சுமையால் கண் சிமிட்டுவது குறைந்துவிடும்.
இதைப்போலவே ஒருவர் பொய் சொல்லும்போது ஒரு கதையை உருவாக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். இதனால் மூளைக்குச் சுமை அதிகமாகி, கண் சிமிட்டுவதை நிறுத்திவிடும் அல்லது குறைத்துவிடும். எனவே, ஒருவர் பொய் சொல்லும்போது குறைவாகவே கண் சிமிட்டுவார்கள்.
இவ்வாறு செய்வதால் அவர்கள் கண்கள் வறண்டு போய்விடும். எனவே, அவர்கள் பொய் சொல்லி முடித்த பிறகு, வறண்டு போன கண்களை ஈரமாக்குவதற்காகத் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் கண்களைச் சிமிட்டுவார்கள். சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் ஒருவரை விசாரிக்கும்போது இதையும் கவனிப்பார்கள்.
இருப்பினும், இதை வைத்து மட்டுமே ஒருவர் பொய் சொல்கிறார் என்று உறுதி செய்துவிட முடியாது. அப்பாவிகள் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போதும் கண் சிமிட்டல் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம், நன்கு கைத்தேர்ந்த குற்றவாளிகள் மற்றும் உளவியல் தெரிந்தவர்கள் பதற்றமே இல்லாமல் பொய் சொல்லி, கண் சிமிட்டுவதைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். எனவே, ஒருவருடைய உடல்மொழி, ஆதாரங்கள் போன்றவற்றையும் இணைத்தே முடிவெடுப்பார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)