45+ பெண்களுக்கு வரும் 'அந்த' மௌனமான வலி!

மெனோபாஸ் என்பது ஒரு முடிவல்ல; அது ஆரோக்கியமான இரண்டாம் வாழ்வின் தொடக்கம்!
Menopause problem
Menopause
Published on
MM strip
MM strip

பெண்களின் வாழ்வில் 45 முதல் 55 வயதிற்குள் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு 'மெனோபாஸ்' (Menopause). இது குறித்த போதிய புரிதல் இன்றி, பல பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் வெளியே சொல்லத் தயங்கும் ஒரு 'மௌனமான' வலியாகவே இன்றும் தொடர்கிறது.

சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், பெண்கள் எதிர்கொள்ளும் நான்கு முக்கியப் பிரச்னைகளை இங்கே காண்போம்:

1. தற்காப்பு அரண் வீழ்ச்சி (Vaginal Flora)

இயற்கையாகவே பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியில் அமிலத்தன்மை (Acidity) அதிகமாக இருக்கும்; இது கிருமித் தொற்று ஏற்படாமல் ஒரு தற்காப்பு அரணாகச் செயல்படும். ஆனால், மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் இந்தத் தற்காப்பு குறைகிறது. இதனால் நன்மை செய்யும் லாக்டோபாசிலி (Lactobacilli) பாக்டீரியாக்கள் குறைந்து, தேவையற்ற கிருமிகள் வளர வழிவகுக்கிறது.

2. வறட்சியும் வலியும் (Vaginal Dryness)

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் திசுக்களில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க மிக முக்கியமானது. இது குறையும் போது திசுக்கள் மெல்லியதாகி வறட்சி அடைகின்றன. இது நடக்கும் போதோ அல்லது அமரும் போதோ கூட ஒருவித எரிச்சலை உண்டாக்கலாம். இதனால் பல பெண்கள் அன்றாட வேலைகளைச் செய்வதில் கூட மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

3. மறைக்கப்படும் மன உளைச்சல் (Low Libido)

ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் ஆர்வம் குறைவதும், உணர்திறன் பாதிக்கப்படுவதும் இயல்பானது. இது குறித்த புரிதல் கணவன்-மனைவி இருவருக்கும் இல்லாதபோது, அது தேவையற்ற குடும்பச் சிக்கல்களுக்கும் மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது. இடுப்புப் பகுதித் தசைகள் (Pelvic muscles) பலவீனமடைவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

4. தொடரும் சிறுநீரகத் தொற்றுகள் (UTI)

திசுக்களில் ஏற்படும் வறட்சியும் கிருமித் தடுப்பு அரண் வீழ்ச்சியும் இணைந்து, அடிக்கடி சிறுநீரகத் தொற்று (UTI) ஏற்படக் காரணமாகின்றன. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மற்றும் சிறுநீர் கசிவு போன்றவை பெண்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்கின்றன.

தீர்வு: நாம் செய்ய வேண்டியது என்ன?

உடற்பயிற்சி: இடுப்புப் பகுதித் தசைகளை வலுப்படுத்த 'கெகல்' உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது இடுப்புத்தசைகளை (Pelvic floor muscles) வலுப்படுத்த உதவும் ஒரு எளிய பயிற்சியாகும்.

மருத்துவ ஆலோசனை: இது ஒரு நோய் அல்ல, ஹார்மோன் மாற்றம் மட்டுமே. இதற்குத் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நவீன சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம்.

குடும்ப ஆதரவு: குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பருவத்தில் பெண்களுக்குத் தேவையான மன ரீதியான ஆதரவை வழங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இளநீரை விட விலை கம்மி.. கோடைக்கு ஏற்ற ஹெல்தி பானம் இதுதான்! ஒரு கிளாஸ் 'A' கிளாஸ்!
Menopause problem

பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்துப் பேசுவதைத் தயக்கமின்றித் தொடங்க வேண்டும். மெனோபாஸ் என்பது ஒரு முடிவல்ல; அது ஆரோக்கியமான இரண்டாம் வாழ்வின் தொடக்கம்!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com