கழுத்திரு, கௌரிசங்கம் எனும் அணிகலன்கள் பற்றித் தெரியுமா?
இந்த அணிகலன்களை எப்போது, யார் அணிந்து கொள்கிறார்கள்?
தெரிஞ்சுக்கலாம் வாங்க!
சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினம் நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகர்கள் குழு, சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி, பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். இந்தக் கிராமங்கள் தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கின்றன. இந்த 96 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்டு நகரத்தார்கள் வாழும் இந்தப் பகுதியே செட்டிநாடு என்று அழைக்கப்படுகின்றது. இந்த வணிகக் குழுவினரைச் செட்டிநாட்டினர் என்கின்றனர்.
செட்டிநாட்டினர் எனப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பினரில் நடைபெறும் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று, மணமகன் கௌரிசங்கம் எனும் அணிகலனையும், மணமகள் கழுத்திரு எனும் அணிகலனையும் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது.
கழுத்திரு:
கழுத்திரு என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் திருமணம் அல்லது சாந்திக்கல்யாண நிகழ்வில் மணமகன் மணமகளுக்குக் கழுத்தில் அணிவிக்கும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும். இதனை, திருச்சோடிப்பு, நகரத்தார் தாலி என்றும் சொல்வதுண்டு.
கழுத்திருவாகிய திருமங்கல நாணில் (இரட்டைவடச் சங்கிலியில்), திரு ஏத்தனம் - 1, ஏத்தனம் - 4, திருமங்கலம் - 1, உரு - 19, சரிமணி - 4, கடைமணி - 2, துவாளை - 1, குச்சி - 1, தும்பு - 1 எனும் 34 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய துணை நகைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள், குச்சி, தும்பு, துவாளை ஆகிய மூன்று துணை நகைகள் திருப்பூட்டுதலின் போது, கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சைப் போடுகிறார். அதன் பின்னர் இம்மூன்றும் கழுத்திருவில் இணைக்கப்படுகின்றன.
நகரத்தார் திருமணத்தில் திருப்பூட்டுதல் என்று சொல்லும் வழக்கம் இன்று வரை நடைமுறையிலுள்ளது. அதற்கு, மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கல நாணை, கடைமணிகளில் இருந்து வரும் புற அக நாண்களின் இருமுனையையும் குச்சி, தும்பு இடை, துவாளை இட்டுப் பூட்டுவதால் திருப்பூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
கழுத்திருவில், இரண்டு தொங்கட்டான்கள் (Pendant) மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தொங்கட்டான்களில் ஒரு பக்கம் தேவி இலக்குமியின் உருவமும், மறுபக்கம் காளை வாகனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் அமர்ந்து காட்சி தரும் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இறைத் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கழுத்திருவை அணிவிப்பதன் மூலம், கழுத்தில் திரு என்ற இலக்குமியைத் தங்க வைக்கின்ற நம்பிக்கையும், மணமக்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அளித்துக் காப்பான் என்கிற நம்பிக்கையும் நகரத்தார் சமூகத்தினரிடம் இருக்கிறது.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கழுத்திரு என்ற இந்த அணிகலனை 100 பவுன் (சவரன்) எடையுடைய தங்கத்தில் செய்வார்கள். தங்கம் விலை அதிகரிப்பிற்குப் பிறகு இந்த அளவு சற்றுக் குறைந்துப் போயிருக்கிறது. இது போல கழுத்திரு நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு என்கிற எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். மணப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் வேளையில், தாய் தன் பெண்ணுக்கு இந்தக் கழுத்திருவை அணிவிப்பது வழக்கம். ஒன்றுக்கு மேல் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் மொத்தக் கழுத்திருவையும் அழித்துப் பின் தேவைக்கேற்ப பிரித்துப் புதுப்புதுக் கழுத்திருக்களாகச் செய்து கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. இதனால் கழுத்திருவின் தங்க அளவு பெண் குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்பக் குறைந்து வருகிறது. தற்போது கழுத்திரு அளவில் குறைந்து 11 முதல் 16 பவுன் என்கிற அளவில் சிறிய கழுத்திருக்களாக உருமாறிப் போய்விட்டன.
கௌரிசங்கம்:
கௌரிசங்கம் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண நாளன்று மணமகன் அணிந்திருக்கும் கழுத்து அணிகலனாகும். இது ஒரு உருத்திராட்ச மாலையாகும்.
கௌரிசங்கம் என்பது தற்காலப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஐந்து முக உருத்திராட்சம் கொண்டு செய்யப்பட்ட மாலையாகும். ஆனால், கௌரிசங்கம் என்பது இரண்டு முக உருத்ராட்சத்தை சுட்டும் ஒரு சொல். நகரத்தார்கள் சைவர்கள் என்பதால் திருமணத்திற்கு முன்பு தங்கள் குரு பீடங்களில் உபதேசம் கேட்பது தங்களின் முதன்மைக் கடமையாகக் கொண்டிருந்தனர் அப்போது ஆண்கள் அணியும் முக்கிய அணிகளில் இதுவும் ஒன்று. அதன் பின் சாந்தி கலியாணத்தின் போதும், தாய் தந்தையாரின் இறப்பின் போது அது சார்ந்த சடங்கின் போதும் அணிந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கவுரி + சங்கரர் அதாவது அர்த்தநாரீஸ்வர தத்துவம் சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையை சுட்டும் சொல். சிவசக்தியின் சேர்க்கையே இவ்வுலகின் இயக்கமாக சைவர்கள் நம்புகிறார்கள். அதனடிப்படையில் இவ்வகை உருத்திராட்சம் சக மனிதர்களுடனான உறவுகளை மேம்படுத்தும் திறன் மற்றும் இல்வாழ்க்கையினை மேம்பபடுத்தும் என்பது போன்ற நம்பிக்கைகள் இவர்களிடையே உண்டு. இதன் காரணமாக, நகரத்தார்கள் உருத்திராட்ச மாலையின் மையப்பகுதியில் சிவசக்தியின் உருவங்களைப் பதித்திருக்கின்றனர்.
கௌரிசங்கத்தை முன்பு சிவகண்டி என்றே நகரத்தார்கள் அழைத்து வந்துள்ளனர். காலபோக்கில் இச்சொல்லாடல் திரிந்து விட்டது. இந்தக் கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் மற்றும் கழுத்துப் பகுதியில் ஒரு தொங்கட்டான் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. தற்காலத்தில் வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசிப் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தொங்கட்டானில் முன்பகுதியில் பெரும்பாலும் இடபாருடர் (ரிசபாருடர்) எனும் இடப (ரிசப) வாகனத்தில் சிவசக்தியாகச் சேர்ந்து அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழ்புறம் உள்ள குழியில் இரு முக உருத்திராட்சம் வைக்கப்பட்டு இருக்கும். இதன் பின்புறம் நடராசர் சிவகாமி மற்றும் பிள்ளையார் முருகனின் உருவங்களை செதுக்கியிருப்பர். ஆனால், முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கௌரிசங்கங்கள் முழுக்க முழுக்க இருமுக உருத்திராட்சம் கொண்டு செய்து, அதில் அம்பாள் சிவபூசை, நடராசர் சிவகாமி, பாலமுருகன், சண்முகர் போன்ற உருவங்களும் முன்பகுதியில் காட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது.