பில்டர் காபியின் வரலாறு தெரியுமா? தெரிஞ்சாலும், செய்முறை தெரியுமா?

Filter Coffee
Filter Coffee
Published on

அதிகமான களைப்போ, தலைவலியோ இருக்கும்போது நாம் எடுத்துக் கொள்ளும் சூடான பானங்களில் ஒன்றுதான் பில்டர்  காபி. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவருக்கு காலை உதயமாவது இந்த பில்டர் காபியில் தான். அந்த அளவுக்கு நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றாய் மாறிப்போன இந்த பில்டர் காபியின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

17ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பில்டர் காபி இருந்ததில்லை. 17 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு தான் அரேபியாவில் இருந்து வறுத்த  மற்றும் சுடப்பட்ட வடிவத்தில் காபி கொட்டைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன . இதன் சுவை மற்றும் ரகசியத்தை பாதுகாப்பதில் அரபு அரசு மிகுந்த கவனம் செலுத்தி வந்தது.

ஒருமுறை சூபி துறவியான பாபா புடான் என்ற துறவி அரபு நாடான மக்காவிற்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அப்பொழுது பில்டர் காபியின் சுவையால் ஈர்க்கப்பட்ட அவர்  நன்கு முளைக்கும் தன்மை உடைய ஏழு காபி கொட்டைகளை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு வந்து கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் பயிரிட்டாராம். அங்குள்ள மண்ணின் தன்மை  காபி பயிருக்கு பொருத்தமானதாக இருக்கவே காபி பயிர் நன்கு வளர தொடங்கியதாம். இப்படித்தான் காபி இந்தியாவிற்குள் வரத் தொடங்கியது.

வணிக  நோக்கத்திற்காக இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு  காபியின் சுவை பிடித்துப் போகவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதிகமான காபி தோட்டங்களை அமைத்தனர். இப்படியாக காபி இந்தியாவின் முக்கிய பயிர்களில் ஒன்றாகவே மாறிப்போனது. நன்கு விளைந்த காபி கொட்டைகள் வறுக்கப்பட்டு அரைத்து 80 முதல் 90% காபி கொட்டையுடன் 10 முதல் 20 % சிக்கரியுடன் கலக்கப்படுகிறது. சிக்கரியில் உள்ள லேசான கசப்பு சுவையும் இந்திய பில்டர் காபியின் சுவைக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

முதன்முதலாக பில்டர் காபிக்கு வெல்லம் மற்றும் தேன் தான் சேர்த்து தயாரிக்கப்பட்டதாம். 1900 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு தான் வெள்ளை சக்கரை பயன்படுத்தி பில்டர் காபி தயாரிக்கப்பட்டதாம். இன்றும் கூட இந்தியாவில்  பில்டர் காபிக்கென  மிகப்பெரிய அளவில் உணவு பிரியர்கள் உள்ளார்கள். பில்டர் காபி இன்று இடத்தை பொறுத்து பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. மெட்ராஸ் காபி, கும்பகோணம் டிகிரி காபி, மயிலாப்பூர் காபி, மைசூர் பில்டர் காபி என பல்வேறு பெயர்களில் காபி  விற்பனை செய்யப்படுகிறது. விற்கப்படும் இடங்களை பொறுத்து காபியின் சுவையும் இடத்திற்கு இடம் மாறுபட்டு தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
Filter Coffee

பில்டர் காபியின் செய்முறை :

பில்டர் காபி செய்வதற்கு இரண்டு குவளைகள் கொண்ட காபி வடிகட்டி பயன்படுத்தப்படுகிறது. கீழ் குவளை  வடிகட்டிய காபி கசாயத்தை சேகரிக்க பயன்படுகிறது. மேல் குவளையில் துளைகளால் நிறைந்த அடிப்பாகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல் குவளையில் காபித்தூளை கொட்டி சுடு  தண்ணீரை ஊற்றும்போது கீழ்  குவளையில் அவை மெல்ல மெல்ல  சிறு  துளியாக கசாயமாக சேமிக்கப்படும். இப்படி சேமிக்கப்படும் காபி கசாயத்துடன் சர்க்கரை மற்றும் சூடான பால் கலந்து பருகும் போது அதன் சுவையே மிகவும் அற்புதமாக இருக்கும்.

இத்தகைய வடிகட்டுதல் முறையினால் தான் சாதாரணமாக இன்ஸ்டன்ட் காபித்தூளை பாலுடன் கலந்து குடிக்கும் காபியைவிட பில்டர் காபியின் சுவை தனித்துவமாக உள்ளது. இதன் விரிவான தயாரிப்பு முறைகளால் முதலில் வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த  பில்டர் காபி  தற்போது வருகை தந்துள்ள பில்டர் காபி தயாரிப்பு மிஷின்களால் அனைத்து இடங்களிலும் பில்டர் காபியின் மணம் வீச தொடங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
சிக்கரி ஃபில்டர் காபி பற்றிய முக்கிய ஆரோக்கிய தகவல்கள்!
Filter Coffee

எது எப்படியோ, சோர்வு மிகுந்த அலுவலக இடைவேளையிலேயோ, போக்குவரத்து நிறைந்த பயணக் களைப்பிலோ சூடாக ஒரு பில்டர் காபி குடித்தால் அதனால் கிடைக்கும் புத்துணர்ச்சியே மிகவும் அற்புதமானது தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com