சிக்கரி பில்டர் காபியானது அதன் தனித்துவமான சுவைக்கு பலரால் விரும்பி அருந்தப்படுகிறது. குறிப்பாக, தீய பழக்கங்களைக் குறைக்க விரும்புவோருக்கு சிக்கரி காபி ஒரு சிறந்த மாற்றாகும். சிக்கரி என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இதன் தாயகம் ஐரோப்பா. சிக்கரியின் வேர் பகுதி காரமான சுவையைக் கொண்டிருக்கும். இது பல நூற்றாண்டுகளாக, மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிக்கரியின் வேர்ப்பகுதியை வறுத்து பொடி செய்து காபி போலவே தண்ணீரில் கலந்து குடிப்பார்கள்.
சிக்கரி காபி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
சிக்கரி காபியை தயாரிப்பது மிகவும் எளிது. முதலில் சிக்கரியின் வேர்ப்பகுதியை நன்கு சுத்தம் செய்து உலர்த்துவார்கள். பின்னர், இதை வறுத்து பொடி செய்து, காபி பொடியுடன் சேர்த்து பயன்படுத்துவார்கள். சிக்கரி பொடியை கொதிக்கும் நீரில் கலந்து, சில நிமிடங்கள் வைத்த பின்னர் வடிகட்டி குடித்தால், சுவையாக இருக்கும். கலோரி குறைவான இந்த பானத்தில், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை மிகக் குறைந்த அளவில் உள்ளன. ஆனால், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
சிக்கரி காபியின் நன்மைகள்:
சிக்கரி காபியில் கலோரி மிகவும் குறைவு என்பதால், எடை இழக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும். இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள சில கலவைகள் கல்லீரலை பாதுகாத்து, கல்லீரல் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோய்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைகிறது.
சிக்கரி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி செல்களை பாதுகாக்கிறது.
சிக்கரி காபி வாங்கும்போது நல்ல தரமான பொருளை தேர்வு செய்ய வேண்டும். இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட சிக்கரி பொடியை தேர்வு செய்வது நல்லது. மேலும், பதப்படுத்தப்பட்ட கலப்படம் இல்லாத பொருளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
சிக்கரி காபி ஒரு ஆரோக்கியமான சுவை மிகுந்த பானமாகும். இது பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால், எந்த பொருளையும் போலவே சிக்கரி காப்பியையும் மிதமாக உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.