குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா?

Best Gift for Children
Best Gift for Children
Published on

- ராதாரமேஷ்

மனித வாழ்வில் முக்கிய அம்சங்களில் மிகவும் கவனம் கொடுக்கக் கூடிய ஒன்று குழந்தை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பு என்பது ஓரிரு ஆண்டுகளில் முடியக்கூடிய பணி அல்ல, அது வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது. இன்றைய காலகட்டங்களில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே உள்ளது என்றால் அதில் சிறிதளவும் சந்தேகமில்லை. 

இன்றைய வாழ்வியல் முறை குழந்தைகளுக்கு என்றே தனியாக கட்டமைக்கப்பட்டது போன்று உள்ளது. அவர்களுக்கான பொருள்களும், அவர்களுக்கான தேவைகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சிக்கலான காரியமாக இருந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இருந்திருக்காது.

அப்பொழுதெல்லாம் குழந்தைகளை எந்நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை பெற்றோருக்கு இருந்ததில்லை. ஆனால் இன்று அருகிலுள்ள பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றால் கூட பெற்றோர் ஒருவர் கூடவே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் நேரம் கார்ட்டூன் பொழுது போக்குகளால் கழிகிறது, அல்லது மொபைல் போன்களால் கழிகிறது. இதைத் தாண்டி நாம் அவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். 

சமீபத்தில் தோழி வீட்டிற்கு சென்றிருந்தபோது, காலையில் குழந்தையை பரபரப்பாக பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்தார். ஆறு வயது நிரம்பிய அந்த குழந்தையானது, எழுந்தது முதல் பள்ளிப் பேருந்து வரை விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தது. தோழியும் அதற்கு சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்பொழுதுதான் ஒரு விஷயம் பொட்டில் அடித்தார் போல் நன்கு புரிந்தது.

ஒவ்வொரு மனுஷனுக்கும் மற்றவரிடம் பேசிக் கொள்ள ஏதோ ஒரு விஷயம் இருப்பது போல், குழந்தைகளுக்கும் நம்மிடம் சொல்லிக் கொள்ள ஏதோ விஷயங்கள் இருக்கிறது. நாம் அதிகமாக குழந்தைகளிடம் பேசுகிறோம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதிகமாக குழந்தைகளை பேச வைத்து நாம் கேட்கிறோமா என்று கேட்டால், அது சந்தேகமே! 

குழந்தைகளை நம்மால் நம் உலகிற்குள் கொண்டு வர முடியாது ஆனால் நம்மால் குழந்தை உலகிற்குள் செல்ல முடியும்.

ஒவ்வொரு மனிதனும் தாம் பிறரிடம் பேசும் போது பிறர் தமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதை போலவே, குழந்தைகளும் நினைக்கிறார்கள். குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் நேரத்தை காட்டிலும் மிகச் சிறந்த பரிசு வேறு எதுவும் இல்லை. சிறு வயது முதலே அவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் மரியாதை கொடுக்கும் போது தான், அவர்களால் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வளர முடியும்.

இதையும் படியுங்கள்:
அச்சுறுத்தும் ஆய்வுகள்! பெண்களே உஷார்!
Best Gift for Children
  • எந்த ஒரு தவறையும் முகத்தில் அடித்தார் போல் பட்டென்று போட்டு உடைக்காமல், அதனை நெளிவு சுழிவோடு பொறுமையாக கூறுவதற்கு நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். 

  • அவர்களது வேலைகளை அவர்களே செய்வதற்கு நாம் பழக்கப்படுத்த வேண்டும். சிறு சிறு தவறுகள் இருந்தாலும் முதலில் பாராட்டி விட்டு, பின்பு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். 

  • அவர்களை கடைகளுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போது, அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் மூலமே நாம் அவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்ற முடியும். 

  • அம்மா,அப்பா, சகோதரர் என்ற கூட்டை தாண்டி அவர்களை மற்றவர்களோடு உறவாட வைக்க வேண்டும், அது அவர்களுக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்தும். 

  • குழந்தைகளுக்கு பணத்தை அதிகமாக செலவழித்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதை காட்டிலும், அதிகமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வது மிகவும் சிறந்தது. புதுப்புது சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை காட்டிலும், மிகச் சிறந்த பரிசு அவர்களுக்கு ஏதுமில்லை. 

  • சமீபத்தில் பெற்றோருக்கான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டபோது மிகப்பெரிய கல்வியாளர் ஒருவர் கூறிய அறிவுரை 'உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிக இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள், புது உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்' என்பதே. 

  • கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல, அவர்களது நடத்தைக்கும், பழக்கவழக்கங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள். இவற்றின் மூலம் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் திறனை அவர்கள் அடைவார்கள். 

  • எனவே பெற்றோராகிய நாம் குழந்தைகளை அடக்கி ஆள்வதை காட்டிலும், அன்பால் அரவணைத்து இந்த உலகினை ஆள அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com