நீங்க ‘பவர் செஃப்’ ஆகணுமா? உங்களுக்கு வீட்டு சாப்பாடு வேணுமா? ‘Cookr’ இருக்கே!
Cookr என்ற செயலி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலும், பெங்களூருவிலும் தற்போது இயங்கி வருகிறது. இந்தச் செயலி வீட்டிலிருந்து சமையல் செய்யும் சமையல் கலைஞர்களையும், வீட்டு சாப்பாட்டிற்காக ஏங்கியிருக்கும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. இதில் பதிவு செய்துள்ள பெரும்பாலான செஃப்கள் பெண்களாக இருப்பினும், சமையல் கலையில் ஆர்வம் உள்ள ஆண்களும், திருநங்கைகளும் கூட பதிவு செய்யலாம் என்கிறார் Cookr நிறுவனத்தின் CEO பிரபா சந்தானகிருஷ்ணன்.
மங்கையர் மலருக்காக பிரத்யேகமாக அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து இதோ சில பதிவுகள்…
Cookr – தொடக்கத்தைப் பற்றி விவரியுங்கள்
நான் அமெரிக்காவில் பல வருடங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். சென்னைக்கு கொரோனா காலத்தில் வந்தபோது நோய்தொற்று ஏற்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது ஒரு நோயாளிக்கு ஏற்ற சத்தான உணவை என்னால் ஓட்டல்களில் ஆர்டர் செய்ய முடியவில்லை. இந்த அனுபவம்தான் Cookr தோன்ற காரணமாக அமைந்தது.
Cookr போன்ற ஒரு வியாபாரத்திற்கு – உணவுத்துறையில் அனுபவமும், அதை டிஜிட்டல் சந்தையின் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல தொழில்நுட்ப அனுபவமும் தேவை. நிர்மல்குமார் என்பவர் உணவகங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட துறைகளில் 20 வருட தேர்ச்சி பெற்றவர். மற்றொருவர் எஸ்.கே.கந்தசாமி, அவருக்கும் உணவு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளிலும் அனுபவம் இருந்தது. நாங்கள் மூவரும் சேர்ந்துதான் Cookr செயலியை நிறுவினோம்.
நாங்கள் நவீன செயற்கை நுண்ணுணர்வு தொழில் நுட்பத்தைக்கொண்டு, எங்கள் செயலியில் வாடிக்கையாளர்கள் மிகவும் பிரத்யேகமாக உணவுதேர்வுகள் செய்ய வாய்ப்பளிக்கிறோம். அதிநவீன தொழில்நுட்பம்தான் எங்கள் மூலதனம்.
உங்கள் செயலியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரி புதுமைகளை வழங்க முடிகிறது?
பொதுவாக ஒரு உணவகத்தில் அந்த அட்டவணையில் இருக்கும் உணவுகளைத் தாண்டி எதுவும் ஆர்டர் செய்ய முடியாது. ஆனால், எங்கள் செயலியில் மட்டுமே புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவு, நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக தேர்வுகள் செய்து உணவு ஆர்டர் செய்ய இயலும்.
இதுவரை 10 லட்சம் வாடிக்கையாளர்கள் எங்கள் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, மதுரை மற்றும் புதுவையில் எங்கள் செயலி உபயோகத்தில் உள்ளது.
மற்றொரு பிரத்யேக திட்டம், எங்களிடம் ஒரு வாரத்திற்கு, பதினைந்து நாட்களுக்கு, ஒரு மாதத்திற்கு என்று சப்ஸ்கிரிப்ஷன் முறையில் ஆர்டர் செய்ய தேர்வுகள் வழங்குகிறோம். அதற்கு ஏற்ப சலுகைகளும் தருகிறோம். இதனால் கல்லூரி விடுதிகளில் வசிப்பவர்கள், ‘பேய்ட் கெஸ்ட் அக்காமடேஷன்’(PG)களில் வசிப்பவர்கள், ஓய்வு பெற்ற தம்பதியர்கள் என்று பலர் பயனடைகிறார்கள்.
உணவு மட்டுமன்றி, ஊறுகாய், மசாலா பொருட்கள், பேக்கரி அயிட்டங்கள் ஆகியவற்றையும் எங்கள் செயலியில் ஆர்டர் செய்யலாம். சிறிய பார்ட்டி ஆர்டர்களும் கூட எடுத்துக்கொள்கிறோம்.
குறிப்பிட்ட ஏரியாவில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனில், அவர்கள் ஊர்களில் பிரபலமான உணவு வகைகளை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இதனால் சென்னை மற்றும் பெங்களுருவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
உங்களிடம் பதிவுசெய்து சமைக்கும் வீட்டு செஃப்கள் எந்த விதத்தில் பயனடைகிறார்கள்?
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 1800 வீட்டு செஃப்கள் எங்கள் செயலியில் பதிவு செய்துள்ளனர். இதனால் 1800 குடும்பங்கள் Cookr மூலம் நேரடியாக பயனடைகிறார்கள். எங்களிடம் மூன்று விதமாக அவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
பவர் செஃப் என்பவர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சமையல் செய்பவர்கள். அவர்கள் மாதம் எண்பதாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். பகுதிநேர செஃப்கள், அவர்கள் பணி செய்யும் நேரத்தை, தினங்களை தேர்வு செய்து சமைப்பார்கள். அவர்கள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை ஈட்ட இயலும்.
பொருளாதார ரீதியாக இல்லாமல், தங்கள் சமையல் கலைக்கு அங்கீகாரம் கிடைக்க சில செஃப்கள் மாதம் நான்கு முதல் ஐந்து நாட்கள் கூட சமைக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சிறப்பு உணவு வகைகளை விரும்பி சமைக்கிறார்கள். இவர்கள் பத்தாயிரம் ரூபாய் வரை ஈட்ட இயலும்.
அவர்கள் என்ன அயிட்டம் சமைக்கப் போகிறார்கள், அதன் அளவு, அதற்கான பொருட்கள் அனைத்தையும் அவர்களே நிர்ணயித்து வாங்குவது என்ற சுதந்திரத்தை அவர்களுக்கே கொடுத்துவிட்டோம்.
அதேபோல, அடுத்த நாளிற்கான ஆர்டரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வசதியை எங்கள் செயலி மூலம் அளிக்கிறோம். இதனால் செஃப்களுக்கு திட்டமிடுதல் சுலபமாக உள்ளது. அதேபோல மட்டன் பிரியாணி, ஓனம் சதயா மீல்ஸ் போன்ற சிறப்பு அயிட்டங்களுக்கு ஒரு வாரம் முன்பே ஆர்டர் புக் செய்ய துவங்கிவிடுவோம். எங்கள் செஃப்களால் செய்யக்கூடிய ஆர்டர் சேர்ந்தவுடன் அந்த புக்கிங்கை நிறுத்திவிடுவோம். இதுபோன்ற பிரத்யேகமான யுக்திகள் மூலம் எங்கள் செஃப்களை சந்தோஷமாக வைத்துள்ளோம்.
புதிதாக பதிவு செய்துள்ள செஃப்களை எங்கள் செயலி மற்றும் சமூக வலைதளங்களில் ப்ரமோட் செய்து அவர்களை ஊக்குவிக்கிறோம். ஆரம்பத்தில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் லாபம் ஏற்படும் வகையில் யுக்திகள் அளித்து உதவுவோம். எங்கள் லாபத்தை காட்டிலும், எங்கள் செஃப்கள் நஷ்டம் அடையாமல் இருப்பது எங்களுக்கு முக்கியம்.
செஃப்கள் பதிவு செய்ய விதிமுறைகள்?
செஃப்களுக்கு தனியாக ஒரு செயலி உள்ளது. அதனை அவர்கள் பதிவிறக்கி பதிவு செய்ய வேண்டும். பிறகு எங்கள் கிட்சன் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் சமையல் திறனை, வியாபார ஆர்வத்தை நிர்ணயிப்பார்கள். பிறகு, அவர்கள் வீட்டு சமையலறையை, குளிர்சாதன பெட்டியை சோதனையிட்டு, அவர்கள் சுகாதாரத்தை கணித்துக் கொள்வர். மேற்கூறிய அளவுகோல்களில் அவர்கள் தேறியவுடன், அவர்களுக்கு உணவு – பாதுகாப்பு உரிமம் (Food – Safety License) பெற்றுத் தருவோம்.
அதன்பின் சில வாரங்களுக்கு வாடிக்கையாளர்களின் விமர்சனத்தைப் பெறுவோம், எல்லா வகைகளிலும் அவர்கள் பொருத்தமாக இருப்பின், அவர்களை எங்கள் செயலியில் அறிமுகப்படுத்துவோம்.
உங்கள் பாக்கிங் மற்றும் டெலிவரி குறித்து?
Cookrக்கு என தனி டெலிவரி டப்பாக்கள், இதர பாக்கிங் உபகரணங்களை நாங்கள் தயாரித்து எங்கள் சப்ளையர்களுக்கு கொடுக்கிறோம். தரமான ஃபுட் கிரேடு ப்ளாஸ்டிக் மற்றும் 100% மக்கும் தன்மையுடைய இதர பாக்கிங் பொருட்களையுமே பயன்படுத்துகிறோம். எங்கள் சப்ளையர்களையும் வாழை இலையை முடிந்தபோது பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கிய உணவை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமாக பாக்கிங் செய்து எடுத்துச் செல்வதே எங்கள் குறிக்கோள்.
முதலில் டெலிவரி செய்ய பிரத்யேகமாக டெலிவரி ஆட்களை பணியமர்த்தினோம். இப்போது ஆர்டர்கள் அதிகமாவதால், டன்சோ, சோமாட்டோ, போர்ட்டர் போன்ற டெலிவரி பங்குதாரர்களையும் பயன்படுத்துகிறோம். இடத்தை ட்ராக் செய்வது, அருகில் இருப்பவருக்கு டெலிவரியை வழங்குவது என்று எங்கள் செயலி அதை செய்துவிடும். செஃப்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எந்த சவாலும் இருக்காது.
நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள்?
எங்கள் சமையலறைகள் எல்லாம் அந்தந்த செஃப்களின் வீட்டில் உள்ளவை. ஒரு உணவகத்தைப் போல, பெரிய அளவில், பெரிய பாத்திரங்கள் மற்றும் அடுப்புகள் கொண்டு துரிதமாக எங்களால் சமைக்க இயலாது. ஆனால், எங்கள் உணவு ஃப்ரெஷ்ஷான பொருட்களை கொண்டு அன்றே தயாரிக்கப்படுவது. அதனால் எந்த பயமும் இன்றி எங்கள் உணவை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம்.
இருப்பினும், துரித டெலிவரி, உடனே எனக்கு பிடித்த உணவு வேண்டும், என்று எங்களிடம் ஆர்டர் செய்ய இயலாது. எங்கள் சப்ளையர்களுக்கு சமைக்க அதற்குரிய நேரம் வேண்டும். சில நேரங்களில் திரவ உணவுகள் பயணத்தின்போது சிறிது வழியக்கூடும். இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள தொடர்ந்து எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம், அவர்கள் உணவு வீட்டில், ஆரோக்கியமாக, அக்கறையுடன் தயார் செய்யப்படுகிறது என்பதைத்தான்.
Cookr தளத்தில் பதிவு செய்த சில பெண்களிடம் பேசியதிலிருந்து:
அனிதா: நான் ஒரு பொறியாளர். முன்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றிருந்தேன். பிறகு இரு குழந்தைகளை பார்த்துக்கொள்ள அந்த வேலையை விட்டுவிட்டேன். இப்போது, Cookr மூலம் வீட்டிலிருந்தபடியே, எனக்குப் பிடித்த சமையலை செய்துகொண்டே, முன்பு சம்பாதித்ததைவிட அதிகம் சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு செய்யும் உணவையே சற்று அதிகமாக செய்து விநியோகிப்பதால், எனக்கு அது சிரமமாக தெரியவில்லை. அதே சமயம், என்னால் சமைக்க முடியாதபோது அன்று விடுப்பு எடுக்கும் சுதந்திரத்தையும் Cookr அளிக்கிறது. முன்கூட்டியே செயலியில் தெரிவித்தால் போதும்.
லதா: நான் ஒரு இல்லத்தரசி. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இருக்கும் நேரத்தில் சமைக்கிறேன். முன்கூட்டியே அன்று சமைக்க வேண்டிய அளவு தெரிவதால், சமைக்கும் முன் ப்ரெஷ்ஷாக பொருட்கள் வாங்கி வருகிறேன். அசைவ உணவு, மசாலா பொருட்கள் எல்லாம் உடனுக்குடன் வாங்கி தயார் செய்து அனுப்புகிறேன். எனக்குப் பிடித்த வேலையை செய்து, வீட்டில் இருந்தபடியே என் குடும்பத்திற்கு சம்பாதிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
“உலகிலேயே இணையத்தில் அதிகம் பேர் ஆர்டர் செய்யும் பொருள் உணவு. மாறிவரும் வாழ்க்கை சூழலில் இளம் தலைமுறையினர் சமைப்பதை தவிர்க்கின்றனர். அதேசமயம், நிறைய இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் சமையல் கலையில், பேக்கிங் போன்ற கலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். யூ டியூபில் மட்டும் எத்தனை அலைவரிசைகள் பிரத்யேகமான சமையலுக்காக உள்ளன? இந்த இரு குழுக்களை தொழில்நுட்பம் கொண்டு இணைப்பதே Cookr- குழுவின் வேலை. வரும் வருடங்களில், எங்கள் மீதான எதிர்பார்ப்பு, வார இறுதியைக் காட்டிலும், வார நாட்களில் அதிகமாகும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை,” என்று கூறுகிறார் பிரபா சந்தானகிருஷ்ணன்.