வாயில் அரிசி தலையில் குட்டு - அனுபவம் பேசுகிறது!

Cooking
Cooking
Published on

இப்போதெல்லாம் வீட்டில் சமைக்க போர் அடிக்கும் நேரங்களில் ஹோட்டல்களில் அதற்கான ஆப்புகளின் மூலம் ஆர்டர் செய்து பெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அதன் விலைகளோ யானை விலை, குதிரை விலையாக உள்ளது. அந்த விலையை பார்த்துவிட்டு அதன் பின்னர் நாம் ஆர்டர் செய்துள்ள உணவுகளை மனதார சாப்பிட முடிவதில்லை.

அதனால் தயவு செய்து கணவன்மார்களே வீட்டில் சிறிதளவு சமைக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு சாதாரண சாதம் வைக்க தெரிந்தால் போதும். அதன் பின்னர் கடையில் தயிர் வாங்கிக்கொண்டு, ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விடலாம்.

ஆனால் சமைக்கத் தெரியாது என்றால் என்னை போலத்தான் ஆகவேண்டும். மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில், ஹோட்டல் ஆப்புகளுக்கு பயந்து வீட்டிலேயே சாதம் வடிக்கலாம் என நினைத்து, அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தி, ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அது கொதித்த உடன் வெளியே வைத்திருந்த அரிசியை அதனுள் போட்டேன். 20 நிமிடங்கள் ஆன பின்னர் சமைத்த சாதத்தை பார்க்கும் போது மிகவும் குழைந்து காணப்பட்டது. சரி சற்று அதிகமாக வேக வைத்து விட்டோம் என்று நினைப்பில் நீரை வடிகட்டி டைனிங் டேபிளில் வைத்தேன். அதன் பின்னர் கடையில் வாங்கி வந்த தயிரை அந்த சாதத்துடன் சேர்த்து ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட தொடங்கினேன். ஆனால் ஏதோ ஒரு ருசி குறைவாக இருந்தது. ஆனாலும் பசி மயக்கத்தில் சாப்பிட்டு முடித்தேன். அதன் பின்னர் மாலை மனைவி ஊரில் இருந்து வந்தார். அவரிடம் மிகவும் பெருமையாக பார்த்தியா... நானே சமையல் பண்ணி சாப்பிட்டேன் என்றேன். அவரும் ஆச்சரியமாக நான் சமைத்த சாதத்தை சிறிது எடுத்து ருசி பார்த்தார். அவர் முகம் மாறியது.

"எந்த அரிசியை கொண்டு சமைத்தீர்கள்?" என என்னிடம் கேள்வி கேட்டார்.

நானும் சமைத்த அரிசியை அடையாளம் காட்டினேன். அவர் தலையில் அடித்துக் கொண்டார். அந்த அரிசி இட்லிக்கு போடும் அரிசியாம். தன் உற்றார் உறவினர்களுக்கெல்லாம் என் பராக்கிரமத்தை செல்போனில் சொல்ல தொடங்கினார். அப்போதுதான் நான் யோசித்தேன்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரிட்ஜை எப்படி பராமரிப்பது? இதோ எளிய டிப்ஸ்!
Cooking

கொஞ்சம் பணம் செலவு செய்திருந்தால் நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும். இல்லையென்றால் சமையல் எப்படி செய்வது என சரியாக தெரிந்து கொண்டிருந்தாலாவது நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும். இரண்டுக்கும் இல்லாமல் போய்விட்டது என யாரும் பார்க்காத நேரத்தில் எனக்கு நானே தலையில் குட்டிக் கொண்டேன்.

அதனால் தயவுசெய்து இனிமேலாவது சாப்பாட்டு அரிசி எது இட்லி அரிசி எது என தெரிந்து கொண்டு சமையலில் இறங்குங்கள் நண்பர்களே!            

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com