அழுகை வந்தால் சிரமப்பட்டு நிறுத்த முயலாதீர்கள். ஒரு சொட்டுக் கண்ணீர் மூக்கு நுனிக்கு வருமுன்பே பல நூறு கிருமிகள் அழிகின்றன. உங்கள் முகத்தோற்றம் அழகு பெறுகிறது, ஏன்? உங்கள் ஆயுள் காலம் கூட நீளுகிறது. அழுபவர்களையும், விசும்பகிறவர்களையும், கேவிப் கேவிப் புலம்புகிறவர்களையும், டாக்டர்கள் ஆராய்ந்ததில் சில ஆச்சரியமான உண்மைகளைக் கண்டுபிடித்தனர். சில தப்பான கருத்துக்களைத் தகர்த்தெறிந்தார்கள்.
உதட்டைக் கடித்துக்கொண்டு அழுகையை அடக்கிக் கொள்ளவது நல்லதா?
இல்லை, அப்படி அடக்குவதால் சிலசமயம் அதிகக் கெடுதல்தான் உண்டாகிறது. அழுகையை அடக்கிக் கொள்ளும் ஆணைக் காட்டிலும், பொல பொலவென்று கண்ணீர் சொரியும் பெண் அதிக ஆரோக்கியமாக இருப்பாளாம்! அழுகையை நிறுத்துவது ஒரு பெரிய வீரமல்ல. அழுவதால் கோழை என்றும் நினைக்கக் கூடாது. நெப்போலியனும், சர்ச்சிலும், நம் ராமாயண காலத்தில் ராமரும்கூட வாய் விட்டு அழுது, கண்ணீர் பெருக்கியிருக்கிறார்களாம்!
பிறப்பதற்கு முன்பே கூட சிசு அழுவது உண்டாமே?
ஆம். பெரும்பாலான டாக்டர்கள் இது முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் விதி விலக்கான கேஸ்களும் உண்டு. இங்கிலாந்தில் நான்ட்விச் என்ற ஊரில், ஸ்ரீமதி அன்னவார் ஹாம் என்ற 24 வயதுப் பெண், வயிற்றில் இருக்கும்போதே தன் குழந்தை அழத் தொடங்கிய தாகவும், அதைத்தானே காதால் கேட்டதாகவும் கூறினாள். அவளுடைய டாக்டரும், குழந்தையின் அழுகையைக் கேட்டதாகச் சொன்னார். அடுத்தநாள்தான், ஏழரைப் பவுண்டு எடையுள்ள பெண் குழந்தை அவளுக்குப் பிறந்தது, கத்திக்கொண்டே.
அழுவதால் சித்தப் பிரமை சரியாகும் – சரியா, தப்பா?
சரியே. அடைத்து வைக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அழும்படி செய்வதற்காக டாக்டர்கள் ஒரு பிரத்தியேக சிகிச்சை செய்கிறார்கள். அதற்கு ‘அப்ரியாக்ஷன்’ என்று பெயர்.
நோயாளியின் நினைவுகளைத் தூண்டி அவருடைய கவலைகள் என்னென்ன என்பதை அவரே வாய்விட்டுக் கூறும்படி செய்வதே இந்த சிகிச்சை முறை. பேசும்போதே நோயாளி அழ ஆரம்பித்து கண்ணீர் பெருக்குவார். அவ்வளவுக்கவ்வளவு அது நல்லதாம்.
கண்ணீர் விட்டு அழுவதால் அழகு குறையும். சரியா, தப்பு?
தப்பு. பார்க்கப் போனால் அழகை அதிகரிக்கச் செய்ய, அழுவதும் ஒரு சிறந்த சாதனம். கண்ணீர் உங்கள் கண்களை நன்றாக கழுவி விடுகின்றன. அதிலுள்ள உப்பு, அழுக்குகளைப் போக்கும் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகமாக அழுகிறார்கள். சரியா?
சரி. இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ‘கண்ணீர் சோதனை’ நடத்தினார்கள். அவர்களது முடிவின்படி 15லிருந்து 29வயது வரை உள்ள பெண்கள் அதே வயதுள்ள ஆண்களை விட 33 சதவிகிதம் அதிகமாய்க் கண்ணீர் சிந்துகிறார்கள் என்று தெரியவந்தது. முப்பது வயதுக்குப் பிறகு அறுபது வயதுவரை ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே அளவில் கண்ணீர் சிந்துகிறார்கள். அறுபது வயதுக்கு மேல் ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகக் கண்ணீர் விடுகிறார்கள்.
கிருமிகளைக் கண்ணீர் கொல்லும் – சரியா, தப்பா?
சரிதான். ஒரு காலன் தண்ணீரில் ஒரு சொட்டுக் கண்ணீர்த் துளியை விட்டால் அது சில வகை பாக்டீரியாக்களைக் கொல்வதைக் கண்டுபிடித்தள்ளனர். கிருமிகளைக் கொல்லும், அந்த அம்சத்துக்குப் பெயர் ‘லைகோஸிம்’ என்கிறார்கள். பல மடங்கு தண்ணீரில் கலந்த பிறகும்கூட ‘லைகோஸிம்’ நல்ல வீரியத்துடன் இருக்கிறதாம்.
எப்போதும் கண்ணீர் ஒரே மாதிரியானதுதான். உண்மையா?
இல்லை. கண்ணீருக்குக் கண்ணீர் சந்தர்ப்பம், சூழ்நிலையைப் பொறுத்து வித்தியாசமாக இருக்கும்.
வெங்காயத்தை நறுக்கும்போது வடிக்கும் கண்ணீருக்கும், துக்கத்தில் இருக்கும்போது வடிக்கும் கண்ணீருக்கும், ஆனந்தத்தில் இருக்கும்போது வடிக்கும் ஆனந்தக் கண்ணீருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டாம். இன்னும் சொல்லப் போனால், சிறுநீர் ரத்தப் பரிசோதனை போல கண்ணீரைப் பரிசோதனை செய்து ஒரு நோயாளியின் நோயைக் கூடக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.