Uterine Prolapse treatment
Uterine Prolapse treatment

கர்ப்பப்பை இறக்கமா? கர்ப்பப்பை அகற்றாமலே கர்ப்பப்பையை பாதுகாக்கலாம்... சிகிச்சை என்ன தெரியுமா?

Published on

கர்ப்பப்பை இறக்கம் என்பது பெண்களுக்கு வயதாகும் போது ஏற்படக்கூடிய பிரச்சனை. எல்லா பெண்களுக்கும் இந்த பாதிப்பு வருமா? கர்ப்பப்பை இறக்கம் வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்? கர்ப்பப்பை இறக்கம் வந்தால் உடனே கர்ப்பப்பையை அகற்ற வேண்டுமா? யாருக்கு என்ன சிகிச்சை வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் Dr. MALA RAJ, FIRM  HOSPITALS, Chennai.

Dr. Mala Raj, Firm Hospitals
Dr.Mala Raj, Firm Hospitals
Q

கர்ப்பப்பை இறக்கம் என்றால் என்ன?

A

பெண்களுக்கு 40 வயதுக்கு பிறகு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். பொதுவாக கர்ப்பப்பை என்பது பெண் உறுப்புக்கு உள்ளே இருக்கும். இது கர்ப்பப்பையை தாண்டி பெண் உறுப்பை நோக்கி இறங்கும் போது அதன் சரிவை பொறுத்து 0-1-2-3 கிரேடு ஆக பிரிக்கப்படுகிறது. கர்ப்பப்பை பெண் உறுப்பின் வாய்க்கு அருகில் வந்தால் அது கிரேடு 1 ஆகும். பெண் உறுப்புக்கு வெளியே தெரிய ஆரம்பித்தால் அது கிரேடு 2 ஆகும். பெண் உறுப்பிலிருந்து முழுவதுமாக வெளியே வந்து தொங்கி கொண்டிருந்தால் அது கிரேடு 3 ஆகும்.

Q

கர்ப்பப்பை இறக்கம் ஆரம்ப சிகிச்சை என்ன?

A

கர்ப்பப்பை இறக்கம் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் ஒவ்வொரு பெண்ணும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யலாம். இந்நிலையில் கீகல் உடல்பயிற்சி செய்ய பரிந்துரைப்போம். இதன் மூலம் தசைகள் வலுவாகும். இதனால் கர்ப்பப்பை அந்த கிரேடு நிலையிலேயே இருக்கும்.

கர்ப்பப்பை இறக்கம் இலேசாக இருக்கும் போது அறுவை சிகிச்சை இல்லாமல் radiofrequency tummy tightening என்னும் கரண்ட் முறையில் இந்த தசைகள் இறுக்கமாக வைக்கப்படும். இதன் மூலம் கர்ப்பப்பை நார்மலாக அதே இடத்தில் வைக்கப்படும். ஆனால் கர்ப்பப்பை வெளி வர தொடங்கி சரிவு சந்திக்கும் போது அலட்சியம் செய்தால் அதற்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கும்.

Q

கர்ப்பப்பை இறக்கம் இருந்தால் அறுவை சிகிச்சை தான் தீர்வா?

A

கர்ப்பப்பை இறக்கம் இருந்தாலும் சிலருக்கு கர்ப்பப்பை அகற்றுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. கர்ப்பப்பை இறங்கி இருந்தாலும் கர்ப்பப்பை அகற்றாமல் லேப்ராஸ்கோபி வழியாக கர்ப்பப்பை உள்ளே தள்ளி சரியான இடத்தில் சரியான அமைப்பில் பொருத்தப்படும். இது நவீன சிகிச்சை. இதனால் கர்ப்பப்பை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. இவர்களுக்கு உடலுறவில் எந்த பிரச்சனையும் இருக்காது. நார்மலான வாழ்க்கையை வாழ முடியும்.

Q

கர்ப்பப்பை இறக்கம் எல்லோருக்கும் வருமா?

A

கர்ப்பப்பை ஊஞ்சல் போன்று தசைகள் மற்றும் தசைநார்கள் சப்போர்ட்டில் தான் இருக்கும். இவை பலவீனமடையும் போது கர்ப்பப்பை சரிவு இருக்கலாம். இது எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது.

பிரசவ வலி 8 மணி நேரம் வரை இருக்கலாம். இது நார்மல். ஆனால் நீண்ட நேரம் பிரசவ வலி இருந்தால் 24-36 மணி நேரம் வரை வலி இருந்தால் அவர்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம்.

குறிப்பாக சிறுவயதில் இருப்பவர்கள் அதிக சிரமத்துடன் சுகப்பிரசவம் எதிர்கொண்டால் அவர்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம்.

சுகப்பிரசவத்தில் குழந்தையை ஆயுதம் போட்டு வெளியே எடுப்பது, வேக்யும் பயன்படுத்துவது போன்றவையும் ஏற்கனவே விரிந்து பெரிதாக இருக்கும் கர்ப்பப்பை, தசை மற்றும் தசைநார்களை பலவீனப்படுத்தி சரிவை ஏற்படுத்தும். இதனாலும் பிற்காலத்தில் கர்ப்பப்பை இறக்கம் உண்டாகும்.

ஆரம்பகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் இவை தசைகளை வலுவாக வைக்கும். அதனால் கர்ப்பப்பை சரிவு உண்டாகாது. வயதாகும் போது 40 வயதுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் தசைகள் பலவீனமாகும். அப்போது சற்று கடினமான வேலை செய்தாலும் கருப்பை வேகமாக இறங்க தொடங்கும்.

இதையும் படியுங்கள்:
எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பு தான் தீர்வா..? - மருத்துவர் விளக்கம்!
Uterine Prolapse treatment
Q

சுகப்பிரசவம் ஆனவர்கள் எல்லோருக்குமே கர்ப்பப்பை இறக்கம் உண்டாகுமா?

A

சுகப்பிரசவம் ஆன அனைவருக்கும் கர்ப்பப்பை இறங்காது. ஆனால் பிரசவம் நடக்கும் போதே மருத்துவர்களால் இதை கணிக்க முடியும். குழந்தைக்கும், தாய்க்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதை கவனித்து தான் மருத்துவர்கள் நார்மல் டெலிவரி கொடுப்பார்கள்.

சுகப்பிரசவம் ஆனாலும் கூட பிரசவத்துக்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பப்பை பலவீனமான தசைகளை இறுக்க செய்ய வேண்டும். இடுப்பு எலும்பு தசைகள்,பெல்விக் தசைகள் இறுக்காமல் விட்டால் அவை பலவீனமாகலாம். இதனால் கர்ப்பப்பைக்கு போதுமான சப்போர்ட் கிடைக்காமல் போகலாம். அதனால் தான் பிரசவத்துக்கு பிறகு இந்த கவனிப்பு மிகவும் முக்கியம் என்று சொல்லப்படுகிறது

இதையும் படியுங்கள்:
கருப்பையில் 2 - 3 கிலோ கட்டியையும் லேப்ராஸ்கோபி மூலம் அகற்றிவிடலாம்... மருத்துவர் விளக்கம்!
Uterine Prolapse treatment
Q

இளவயதில் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுமா?

A

அரிதான நிலையில் திருமணத்துக்கு முன்பே கூட சிலருக்கு கர்ப்பப்பை இறக்கம் வருகிறது. இது மரபணு ரீதியாக வரலாம். இவர்களுக்கு இணைப்பு திசு, தசைநார்கள் பலவீனமாக இருக்கும். இந்த கொலாஜன் தசைகளுக்கு வலிமை கொடுக்க கூடியது. மரபணு ரீதியாக இவர்களுக்கு பலவீனமாக இருக்கும் போது பிரசவம் ஏற்படாமலே கர்ப்பப்பை இறக்கம் உண்டாகும். இது nulliparous prolapse என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு 100 % கர்ப்பப்பை எடுக்கவே கூடாது. இவர்களுக்கு கர்ப்பப்பை இருந்த இடத்தில் அதே அமைப்பில் கொண்டு வந்து பொருத்த வேண்டும். இதற்கு தனி சிகிச்சை உண்டு. இவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஏற்ற சிகிச்சை எது என்பதை ஆராய்ந்து பிறகு செய்யப்படும்.

லேப்ராஸ்கோப்பி மூலமாக mesh வைத்து சரியான இடத்தில் கருப்பை பொருத்தப்படும். இது இரண்டு வகைகளில் செய்யலாம். ஒன்று laparoscopic pectopexy மற்றொன்று laparoscopic sacrocolpopexy. யாருக்கு எந்த சிகிச்சை முறை ஏற்றது என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு அந்த சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கருப்பை சரியான இடத்தில் பொருத்தப்பட்டு அவர்கள் இயல்பான வாழ்க்கையை பெறமுடியும். இவர்கள் கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் முயற்சிக்காமல் சிசேரியன் செய்ய வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
இருமினால் தும்மினால் சிறுநீர் வெளியேற என்ன காரணம்..? சிகிச்சை என்ன?
Uterine Prolapse treatment
Q

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை குணமாக்கும் காலம்?

A

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் போதும். இது லேசர் மூலம் செய்யப்படும் கீ ஹோல் சர்ஜரி தான். அதனால் வலி அதிகம் இருக்காது. அடையாளம் தழும்புகளும் இருக்காது. நார்மலாக உணரலாம். இவர்கள் பின்வரும் காலத்திலும் அதிக எடையை தூக்க கூடாது என்று அறிவுறுத்தப்படும். ஏற்கனவே தசைகளும் தசைநார்களும் பலவீனமாக இருப்பதால் கண்டிப்பாக அதிக எடை தூக்க கூடாது. இந்த சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றாமல் இயல்பான வாழ்க்கையை பெறலாம். முந்தைய காலத்தில் கர்ப்பப்பை இறக்கம் இருந்தாலே கர்ப்பப்பை அகற்றுவது சிகிச்சையாக இருந்தது. இப்போது நவீன சிகிச்சையின் மூலம் கர்ப்பப்பை அகற்றாமல் பொருத்தப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com