இன்றைய பள்ளிக்கூட வாழ்க்கை முன்பை விட முற்றிலும் வேறானது. அப்படி இருக்கையில் மறந்து விட்ட உங்களின் பள்ளி நினைவுகளை டஸ்டரைக் கொண்டு தட்டி எழுப்புகிறது இந்தப் பதிவு.
இன்றைய காலத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகி இருக்கிறது. அலாரம் ஒலிப்பதில் இருந்து கரும்பலகையை அழிக்கும் டஸ்டர் வரை அனைத்தும் மாறி விட்டது.
அப்படியே ஒரு 20 ஆண்டுகள் முன்சென்று பார்த்தால், இப்போது கிடைக்கும் வசதிகள் அப்போது ஏதுமில்லை. இருப்பினும் அந்த காலத்து நினைவுகள் மனதில் பசுமரத்தாணியைப் போல் பதிந்துள்ளது. இதில் மிகவும் முக்கியமான நினைவு என்றால் கரும்பலகையை அழிக்கும் டஸ்டர் தான். இப்போது புதுப்புது மாடல்களில் கரும்பலகைக்கு ஏற்றவாறு வகை வகையாய் டஸ்டர்கள் வந்து விட்டன. ஆனால் அன்றைய காலத்தில் ஒரே மாதிரியான டஸ்டர் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
உடன் படிக்கும் மாணவர்களில் யாருடைய தந்தை டெய்லராக இருக்கிறாரோ அவர் தான், துண்டு துண்டாக இருக்கும் துணிகளைப் பயன்படுத்தி டஸ்டரை தைத்துக் கொடுப்பார். பார்ப்பதற்கு சதுர அல்லது செவ்வக வடிவில் இருக்கும் இந்த டஸ்டரின் ஒரு ஓரத்தில் மட்டும் கைப்பிடியை தைத்து விடுவார். அடுத்த நாள் புதிய டஸ்டர் வகுப்பறைக்கு வந்ததும், மாணவர்கள் பலரும் ஆச்சரியத்துடன் அதனை வாங்கிப் பார்த்த நினைவுகள் எல்லாம் இன்றைய காலத்துப் பிள்ளைகளுக்கு கிடைக்காத சுகங்கள்.
பாடம் எடுத்து முடித்த பின்னர் கரும்பலைகயை அழிக்க ஆசிரியர் உத்தரவிட்டதும் முன்வரிசையில் இருக்கும் மாணவர்களில் யாரேனும் ஒருவர் அழிக்கும் போது, பின்னால் இருந்து சில மாணவர்கள் குரல் கொடுப்பதும், அதைக் கண்டு மற்ற மாணவர்கள் சிரிப்பதும் வகுப்பறையில் அடிக்கடி அரங்கேறும். இதுபோன்று வகுப்பறையில் நிகழும் சிறுசிறு கலாட்டாக்களை இன்றைய தினம் நினைக்கையில், மனம் கொள்ளும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது.
வகுப்பில் யாரேனும் சேட்டை செய்தால் டஸ்டரால் கரும்பலகையை அழிக்கச் சொல்லி அவர்களுக்கு ஆசிரியர் வழங்கும் தண்டனை கூட சுவாரசியமாகத் தான் இருக்கும். அதுவே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் டஸ்டர் அங்கும் இங்கும் பந்து போல பறப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது. சில மாணவர்கள் சண்டை போடும் நேரங்களில் கூட அடி வாங்குவது என்னவோ டஸ்டர் தான். இதில் இருக்கும் வெள்ளை நிற சாக்பீஸ் கறை நம் மேல் பூசிக் கொண்டால், மற்ற மாணவர்களின் சிரிப்பலை அடங்கவே பல நிமிடங்கள் ஆகும்.
நினைவுகள் அழியாச் சுவடுகள் என்பதை பலரும் அறிவர். எங்கே இருந்தாலும் அங்கே நாம் காணும் சில பொருள்கள் நம் பள்ளி வாழ்வை நினைவுப்படுத்தத் தவறுவதில்லை. நாம் பள்ளிப்பருவத்தில் இப்படியெல்லாம் இருந்தோமா என இப்போது நினைத்தால் கூட சிரிப்பு தான் வரும். மீண்டும் கிடைக்காத வரங்களில் பள்ளி வாழ்வும் ஒன்று. இருப்பினும் நினைவுகளால் மட்டுமே இது சாத்தியம். உங்கள் நினைவுகளை மெல்ல சுமந்து கொண்டு வரும் இந்த டஸ்டரின் மீது உங்கள் பள்ளிச் சிறகுகளை கட்டவிழ்த்து விடுங்கள்.