நம்பிக்கை ஊட்டும் எமிலி பிளன்டின் தன்னம்பிக்கை பயணம்!

Emily Blunt
Emily Blunt
Published on

தனக்கு இருந்த திக்குவாய்ப் பிரச்சினையைக் கடந்து, ஆசிரியர் சொன்ன 'உன்னால் முடியும்' என்ற ஒற்றை வாக்கியத்தை நினைவில் வைத்து, சாதித்துக் காட்டிய ஹாலிவுட் நடிகை எமிலி பிளன்டின் வெற்றிப்பயணம் தான் இந்தப் பதிவு.

சாதனையாளர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, சாதித்தவர்கள் பலரும் பல தடைகளைக் கடந்து தான் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக மாறுகின்றனர். உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் நிச்சயமாக இருக்கும். அந்தத் திறமைகளைக் கண்டறிந்து, சரியான முறையில் செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். என்னால் முடியாது என சோர்ந்து இருக்கும் நேரத்தில், யாரேனும் ஒருவர் நம்மை ஊக்கப்படுத்தினால் வெற்றி அடைவோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம் தான். அவ்வகையில் சிறு வயதில் திக்கித் திக்கிப் பேசும் ஒரு பெண், ஆசிரியர் அளித்த ஊக்கத்தினால் இன்று பிரபல ஹாலிவுட் நடிகையாக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். அவர் தான் ஹாலிவுட் நடிகை எமிலி பிளன்ட்.

எமிலி பிளன்ட் லண்டனில் பிறந்து ஹாலிவுட் படங்களில் பிரிட்டிஷ் - அமெரிக்க நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது 14 வயது வரை திக்கித் திக்கித் தான் பேசிக் கொண்டிருந்தார். திக்குவாய்ப் பிரச்சினையால் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை நினைத்து அடிக்கடி வருந்திய எமிலி பிளன்ட், "நான் ஒரு புத்திசாலித்தனமான குழந்தை; மற்றவர்களிடம் பேசுவதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. இருப்பினும் என்னால் சரியாக பேச முடியாது என முடங்கி இருந்தேன்" என ஒரு திரைப்பட விழாவில் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இவர் எப்படி பிரபலமான ஹாலிவுட் நடிகையானார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா! இதற்கெல்லாம் முக்கிய காரணம் “உன்னால் முடியும்” என இவரை ஊக்கப்படுத்திய ஆசிரியர் தான்.

பள்ளியில் படிக்கும் போது நாடகம் ஒன்றில் எமிலியை நடிக்கச் சொன்னார் இவரின் ஆசிரியர். ஆனால், என்னால் சரியாக பேசவே முடியாது. இந்தச் சூழலில் நான் எப்படி நாடகத்தில் நடிப்பேன் என மிரண்டு போனார். ஆனால், இவரின் ஆசிரியர் உனக்குத் துணையாக நான் இருக்கிறேன்; நீ தைரியமாக நாடகத்தில் நடிக்கலாம் என்று ஊக்கப்படுத்தியது மட்டுமின்றி, நடிப்புப் பயிற்சிகளைக் கொடுத்து பலவிதமான குரல்களில் பேச வைத்தார். எமிலியின் ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சியால், இவர் நாடகத்தில் நன்றாக நடித்து தனது திக்குவாய்ப் பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.

இதையும் படியுங்கள்:
"இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும்" - நம்பிக்கை ஊட்டும் கிரிக்கெட் வீரரின் வெற்றிக் கதை!
Emily Blunt

எமிலியின் நடிப்புத் திறனை அறிந்து கொண்ட இவரின் ஆசிரியர், மேலும் மேலும் ஊக்கப்படுத்தியதன் வெற்றி யாதெனில், இன்று பிரபலமான ஹாலிவுட் நடிகையாக எமிலி பிளன்ட் உலகைச் சுற்றி வருவதே. நடிகையான பின்பும் கூட, தன்னைப் போல் திக்குவாய்ப் பிரச்சினையால் அவதிப்படும் அனைவருக்கும் உதவி புரியும் வகையில், திக்குவாய்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமெரிக்க அமைப்பில் இணைந்து சேவையாற்றி வருகிறார் எமிலி.

தனது சிறந்த நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார் எமிலி. இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் திரை நடிகர்கள் குழுமம் விருதைப் பெற்றுள்ளார். மேலும் மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக எமிலி பிளன்டை போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.

அனைத்து மனிதர்களுக்கும் பிரச்சினை என ஏதாவது ஒன்று இருக்கும். அதேசமயம், அவர்களுக்கென தனித்திறமையும் இருக்கும். ஆகையால், பிரச்சினையைக் கண்டு பயம் கொள்ளாமல் திறமையை முன்னிறுத்தி முயற்சி செய்யுங்கள். வெகுதூரத்தில் இருக்கும் வெற்றி கூட முயன்றால் உங்கள் கைகளில் தவழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com