
‘தி ஸ்பேஸ் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் எமிலி காலண்ட்ரெல்லி (Emily Calandrelli) இருபது வருடங்களுக்கு முன்னால் விண்வெளியில் பறக்க ஆசைப்பட்டார்.
சென்ற ஆண்டு அந்தக் கனவு நிறைவேறியது. தனது இந்தப் பயணத்தால் அனைத்துப் பெண்மணிகளுக்கும் உத்வேகம் ஊட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.
“விண்வெளியில் பறக்க வேண்டும்; பறந்து விடுவேன் என்ற நம்பிக்கை, நான் என்று ஏரோ எஞ்ஜினியரிங் படிக்க ஆரம்பித்தேனோ, அன்றே ஏற்பட்ட ஒன்று.
ப்ளு ஆரிஜினின் NS-28 கலமானது பூமியின் துணை சுற்றுப்பாதையில் 2024 நவம்பர் 22ம் தேதி அன்று பறக்க ஆரம்பித்தபோது அது நிறைவேறியது," என்கிறார் எமிலி.
உடனடியாக பத்தாயிரம் பேர் தாங்களும் அவர் போலப் பறக்க ஆசைப்படுவதைத் தெரிவித்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு சிறிய தொகையை நன்கொடையாகப் பெற்ற அவர் மேற்கு வர்ஜீனியாவின் மகவுக்கொடை பராமரிப்பு அமைப்பிற்கு 30000 டாலரை அளித்தார்.
விண்வெளிக்குச் செல்வது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு பெரிய வாய்ப்பு என்பதை உணர்ந்த அவர் இதுவரை 700 பேர்களே உலகில் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“இந்த வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைத்தது என்றால் மற்ற எல்லோரையும் உயரத்தில் ஊக்கி விட இதைப் பயன்படுத்துவேன். மேற்கு வர்ஜீனியாவில் சிறுகுழந்தைகள் மற்ற எல்லா மாநிலங்களையும் விட நான்கு மடங்கு மகவுக்கொடை பராமரிப்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்காக எப்படி நன்கொடையைப் பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார் அவர்..
ஸ்பேஸ் கேர்ள் என்ற செல்லப்பெயரால் அறியப்பட்ட அவர் தன் பெயருக்குத் தக்கபடி நூறாவது பெண்மணியாக விண்ணிற்கு ஏகியதோடு தான் நினைத்தபடியே குழந்தைகளுக்கு உதவி, தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார்.
“நூறாவது பெண்மணி என்பதில் உள்ள நூறு என்ற நம்பர் எனக்கு விசேஷமான ஒன்றாகும். ஏனெனில் முதல் நூறு பேருக்குள் நான் இடம் பெற வேண்டும் என்று துடித்தேன். அதற்காகக் கடுமையாக உழைத்தேன். வெற்றி பெற்றேன். குறிப்பாக விண்வெளிக்குச் சென்ற பெண்கள் பிரபலமாகவும் ஆகவில்லை; சமூகத்தால் அங்கீகரிக்கப்படவும் இல்லை. அந்த நிலையில் நான் நூறாவது பெண்மணியாக ஆனேன்.” என்றார் அவர்.
37 வயதான எமிலி கல்லூரியில் படிக்கும் போதே நாஸாவில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பல விண்வெளித்திட்டங்களை அறிந்து கொண்டார். கூகிள், பிக்ஸர் உள்ளிட்டவற்றில் அனைத்தையும் பற்றி விவரிக்கும் அவர் அனைவராலும் ஸ்பேஸ் கேர்ள் என்று அழைக்கப்படலானார். அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளைமாளிகைக்கும் கூட அவர் அழைக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளிலும் நிபுணரான அவர் ஒரு அறிவியல் பேச்சாளர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்.
இப்போது நூறாவது விண்வெளிப் பெண்மணி!
வாழ்த்துவோம் – நூறாவது விண்மணியை!