மனித வாழ்க்கையில், குழந்தைகள் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அதைப்போல முதியவர்களும் முக்கியமானவர்களே. ஒரு குடும்பம் தலைமுறை தலைமுறையாக தழைத்தோங்குவதற்கு முக்கிய காரணம் முதியவர்கள் என்றால் அது மிகையாகாது. வாழ்க்கை என்னும் சக்கரத்தில் வாழ்வியலை கற்றுத் தரும் அச்சாணிகளே முதியவர்கள். பல நேரங்களில் இது ஒரு சிறிய விஷயம் தானே என்று நினைப்போம்; ஆனால் அதுவே சில சமயங்களில் மிக கடினமானதாக உணரக்கூடும். ஆனால் வழிகாட்ட வீட்டில் முதியோர்கள் இருக்கும்போது எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்ய முடியும்.
மனித மனம் எப்போதும் ஒரு கோணத்தில் மட்டும் சிந்திப்பதில்லை, ஆலோசனை செய்வதற்கும் விவாதிப்பதற்கும் பல கோணங்களில் யோசிக்க கூடிய மனிதர்களின் கருத்துக்கள் நமக்கு தேவைப்படுகின்றன. அவர்களே அனுபவம் வாய்ந்த முதியவர்களாக இருக்கும்போது நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு மிகவும் சாதகமாக அமைகின்றன. இன்றைய அவசரகதியான சூழலில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோரை தாண்டிய உறவு என்பது பெரும்பாலும் கிடைப்பதில்லை.
சமீபத்தில் தோழி ஒருத்தியை சந்திக்க சென்றிருந்தபோது அவளது ஒரு வயது குழந்தையை 70 வயது மூதாட்டி ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் போது அப்பெண்மணி அக்குழந்தையை அவ்வளவு அருமையாக பார்த்துக் கொண்டார். இது பற்றி தோழியிடம் விசாரித்த போது, "இந்த பாட்டி என்னுடைய மாமனாரின் அம்மா. கிட்டத்தட்ட 70 வயதாக போகிறது. என் குழந்தையை பெரும்பாலும் அவர் தான் கவனித்துக் கொள்கிறார். சின்ன சின்ன விஷயங்களை கூட மிக பக்குவமாக பார்த்துக் கொள்கிறார். நூற்றில் 99% அவரின் கணிப்பு தவறாக போனதில்லை. நானெல்லாம் முறையான பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலும் விடுதி வாழ்க்கையிலே நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் என் குழந்தையோ தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி என்று கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறான். இது எனக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கிறது" என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினாள்.
நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளை அவர்களே கையாள வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் நிலைமை என்னவென்றால் சிறு சிறு விஷயங்களுக்கு கூட குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பகிரங்கமாக ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நாம் அனைவரும் வாழ்க்கையை சரியாக வாழத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் காசை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.
முதியவர்கள் அனுபவங்களின் நீரூற்றுகள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் நிறைய வாழ்வியல் முறைகள் கொட்டி கிடக்கின்றன. பெரும்பாலும் நாம் நம் குழந்தை பருவத்தில் மருத்துவமனைக்கு அதிகமாக சென்று இருக்க மாட்டோம். காரணம் என்னவென்றால், அப்போதெல்லாம் பாட்டி வைத்தியங்கள்தான் அதிகம். ஆனால் இப்போது பாட்டிகளும் அதிகமாக இல்லை பாட்டி வைத்தியங்களும் அதிகமாக இல்லை.
ஒரு நாடு வலிமை மிக்கதாக மாறுவதற்கு இளைஞர் படை எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல அனுபவம் வாய்ந்த முதியவர்களும் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். கால மாற்றங்களில் சிலவற்றை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அதற்காக நாம் அவர்களை முழுமையாக புறக்கணித்து விட முடியாது.
முதியவர்கள் கோவிலை தாங்கி நிற்கும் அஸ்திவாரத்தை போன்றவர்கள். தெய்வமாய் இருக்கும் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் போது, பக்தனுக்கு கோவிலில் என்ன வேலை இருக்கிறது!
முதியவர்களின் அனுபவங்களை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டு வாழ்வியலை இன்னும் சிறப்பாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்!