சிறுகதை – சித்தி!

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா

நாளை சினேகா சித்தி குடும்பத்துடன் வரப்போகிறாள். இந்துவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவ்வளவு பிரியம் சித்தியின் மீது.

பளீரென்ற வெண்ணிற பற்களுடன் முகமெங்கும் சிரிப்போடுதான் எப்போதும் காட்சி தருவாள் சித்தி. அவளுக்கு எளிதில் கோபம் வராது. அவளின் நிஜப்பெயர் வனஜா. திருமணத்தின்போது  “அழகா எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கிற உன்னை சினேகான்னுதான் கூப்பிடப் போறேன்’’ என்றார் சித்தப்பா. சினிமாவில் நடிகை சினேகா அறிமுகம் ஆன நேரமது.

இரண்டு வருடத்திற்கு முன் வாசுவின் கல்யாணத்தின் போது பார்த்தது. தன் உயரத்திற்கேற்ற அளவான எடையுடன் முகத்தில் சுருக்கங்கள் இன்றி, நரைமுடி இல்லாமல் இளமையாகவே இருந்தாள்.

மறுநாள் ரகு ரயிலடிக்கே சென்று அவர்களை அழைத்து வந்தான்.

இந்துவின் இடுப்பில் இருந்த சிமியை ஆசையுடன் வாங்கிக்கொண்ட சித்தி மிகவும் களைத்துத் தெரிந்தாள். முகம் வீங்கி, உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறியிருந்தாள். வழக்கமான புன்னகை மிஸ்ஸிங். அவ்வப்போது மகள் பூஜாவை கடுகடுத்த முகத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.

''என்ன சித்தி உடம்புக்கு முடியலையா?’’ என்றாள் இந்து தனிமையில்.

“ஆமாண்டி. இர்ரெகுலர் பீரியட்ஸ். படுத்தி எடுக்குது. ஓவர் பிளீடிங். உடம்புல இருந்த சத்தெல்லாம் உருவியெடுத்த மாதிரி கை, கால், உடம்பெல்லாம் ஒரே வலி. மாசத்துல பதினஞ்சு இருபது நாள் இதே கதை தான்’’ சோகையான சிரிப்பில் ஜீவனேயில்லை. பத்து வயது கூடித் தெரிந்தாள்.  

இரவு ஒன்பதுக்கே சித்தியும் பூஜாவும் படுத்துவிட, மொட்டை மாடியில் காற்று வாங்கியபடி சித்தப்பா, ரகு மற்றும் இந்து.

“சித்தப்பா, சித்திய வாய்க்கு வாய் சினேகா, சினேகான்னு கூப்பிட்டதுபோய் இப்போ வனஜான்னு கூப்பிடுறீங்களே ஏன்?’’

“அவதான் சந்திரமுகியா மாறி ரொம்ப நாளாச்சே?’’

“என்ன சொல்றீங்க மாமா?’’ என்றான் ரகு திடுக்கிட்டு.

“இப்பல்லாம் காரணமே இல்லாமல் எரிஞ்சு விழறா. கடிச்சுக் கொதர்றா. ஏன்னு புரியவே இல்லை. அவகிட்ட இப்பல்லாம் பேசவே பயமா இருக்கு தெரியுமா? என்னவோ பேய் புகுந்த மாதிரி ஆயிட்டா.’’

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமில்லை நெடுஞ்சாலை அரளிச் செடிகள்!
ஓவியம்: லலிதா

“எதனால இப்படின்னு யோசிச்சீங்களா சித்தப்பா?’’

“எனக்கு என்ன தெரியும்? ஏதாவது வாயைத் திறந்து சொன்னா தானே?’’

“இப்போ சித்திக்கு வயசு 47. பீரி மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க’’

“என்னம்மா சொல்ற?’’ புரியாமல் பார்த்தார் சித்தப்பா. 

“பொதுவா மாதவிலக்கு நிற்கிற சமயத்துல பெண்களுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் உண்டாகும். தாறுமாறா உடம்பு வெயிட் போடும். மனசுல இனம் புரியாத கவலை, பதற்றம், இருக்கும். சில பெண்களை தற்கொலைக்குக் கூட தூண்டும். சாதாரணமாவே பெண்கள் மாதவிலக்கின் போது அதிகமா உணர்ச்சிவசப்படுவாங்க.’’ 

“ஆனா, எங்கம்மாலாம் அப்படி நடந்த மாதிரி ஞாபகம் இல்லையேம்மா.’’

“சித்தப்பா, அந்தக் காலத்து சாப்பாடு வேற. ஓரளவு பெண்கள் ஆரோக்கியமா இருந்தாங்க. இவ்வளவு ஸ்ட்ரெஸ் இல்லை. கூட்டுக் குடும்பம். பெண்களுக்குள்ளையே பேசித் தீர்த்துக்குவாங்க. இப்ப   வாழ்க்கை முறையே வேற. மருந்துல முக்கியெடுத்த காய்கறிகளும் உணவுப் பொருள்களும். அதோட ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ் வேற. அந்த சமயத்துல அவங்ககிட்ட ஆதரவா அன்பா ரெண்டு வார்த்தை பேசுனா போதும். மனசு உருகிருவாங்க. நல்லா சிரிக்க சிரிக்க பேசுற மனுஷன் நீங்க. நீங்களே இப்படி சித்தி மேல கோபப்பட்டா, நியாயமா சித்தப்பா?” 

“அடப்பாவமே, நான்கூட அவள வில்லி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேனே. பாவம், எப்படித் தவிச்சிருப்பா? இப்பவே போய் இதமா பேசி, அவளை சிரிக்க வைக்கிறேன்’’ என்று எழுந்து கீழே போனார்.

மனதுக்கு நிறைவாக இருந்தது இந்துவிற்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com