பெண் பாவம் பொல்லாதது!

girl image
girl imageImage credit - pixabay.com

-மரிய சாரா

பொதுவாகவே ஒரு ஆண் வீட்டிற்கும் ஊருக்கும் அடங்காமல் சுற்றித்திரிபவனாக இருந்தால் "அவனுக்கு ஒரு கால்யாணைத்த பண்ணிட்டா, அந்தப் பொண்ணு வந்து அவனை சரி பண்ணிடுவா. கால்கட்டு போட்டுட்டா எல்லாம் சரியாகிடும்; நீதாம்மா அவனைத் திருத்தணும்," என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். நாமும் இவற்றையெல்லாம் அனுபவித்திருப்போம்.

ஒரு குழந்தையை, சமூகத்தில் நல்லவனாக ஒழுக்கம் உள்ளவனாக வளர்க்கவேண்டியது அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்தானே? அப்படி அவர்கள் கடமையைச் சரிவர செய்யமுடியாமல், பிள்ளையை அவன் போக்கில் வளர்த்துவிட்டு, அவனுக்கு ஒரு நல்ல பண்பான பெண்ணாக பார்த்து திருமணம் செய்துவைத்து அவள் பார்த்துக்கொள்வாள் என்று அவள் உயிரை ஏன் எடுக்கின்றனர்?

ஒழுக்கமில்லாமல், சீர்கேடான நெறிகளில் நடக்கும் பொறுப்பற்ற இந்த ஆண்மகன்களைத் திருத்தி மஹான்களாக்கத்தான் பெண் பிள்ளைகள் பெற்று வளர்க்கப்படுகின்றார்களா? பெண்கள் முன்னேறிவிட்டார்கள், பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றார்கள் என்றெல்லாம் பெருமை பேசும் இந்தக் காலகட்டத்தில்கூட, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ,  நீதான் அவனைத் திருத்தணும், உன் கைலதான் இருக்கு என்றெல்லாம் ஏன் இன்னமும் பெண்ணின் மீதே பாரங்களை வைக்கிறது இந்தச் சமூகம்? அப்போ அந்தப் பெருமையெல்லாம் வெறும் பேச்சுதானா?

பெண்ணாய் பிறப்பதே சவால்தான். இதில் அவள் வளர வளர அவளின் பிரச்னைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். சாகும்வரை அவள் வாழ்க்கை போராட்டம்தான். இதில் இவனுங்கள வேற சரி கட்டணும், திருத்தணுமா? ஏன் அவர்களுக்குத் தெரியாதா நல்லது எது கேட்டது எது என்பதெல்லாம்? இல்லை அவர்களின் பெற்றோர் சொல்லி வளர்க்கமாட்டார்களா? வளர்க்கத் தவறிவிட்டார்களா?

முதன்முறை அவன் தவறு செய்யும்போதே அவனுடைய பெற்றோர் அவனைக் கண்டித்து திருத்தி நலவழிப்படுத்தி வளர்த்திருந்தால், அந்தப் பாரம் பிற்காலத்தில் அவனுக்கு மனைவியாகப் போகும் அந்தப் பெண் மீது விழாது அல்லவா?

இன்னும் எவ்வளவு காலம்தான் இந்தச் சமூகம் பெண்ணை மட்டுமே பொறுப்புள்ளவாக்க நினைக்கும்? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா? பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பதுபோல், இதுபோன்ற அறிவுரைகளைக் கூறுவது பெரும்பாலும் மாமியார்கள்தான்.

பெற்றோர்களே அதிலும் ஆண் பிள்ளைகளைப் பெற்ற மகராசி மற்றும் மகாராசான்களே கேளுங்கள். தயவுசெய்து பெண் பிள்ளை, ஆண் பிள்ளை என பிரித்துப் பார்த்து வளர்க்காமல், கண்டிப்பும், பாசமும் சமமாய் கொடுங்கள். என் மகன் ஒரே பையன் என செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்து குட்டிச்செவிராக்கிவிட்டு பின்னர் திருமணம் என்னும் பெயரில் இன்னொரு பெண்ணின் வாழ்வோடு விளையாடாதீர்கள். அப்படி விளையாடினால் விளைவுகள் உங்களை கடைசிவரை விரட்டி விரட்டி வேட்டையாடும் என்பதை மறக்க வேண்டாம். ஏனென்றால் பெண் பாவம் பொல்லாதது.

இதையும் படியுங்கள்:
அன்னபூரணிக்கும் அக்ஷய திரிதியைக்கும் உள்ள தொடர்பை தெரிஞ்சிக்கலாம் வாங்க!
girl image

அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் புரியும் என்பதால் சொல்கிறேன். சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் சரி, இனி பெற்றோராகும் சந்ததியினரும் சரி பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல அவர்களை நம்பி வரும் அவர்களின் துணையான பெண் பிள்ளைகளின் எதிர்காலமும் இவர்களின் ஒழுக்கம் சார்ந்தே இருக்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

அம்மா, அப்பா இருவருக்குமே சம பங்கு இருப்பதால், ‘தாயைப்போல பிள்ளை’ எனும் பழமொழியை மறந்துவிட்டு, தாய், தந்தையைப்போல பிள்ளை என்பதை நினைவில்கொண்டு நல்ல பிள்ளைகளை நமது சமுதாயத்திற்குக் கொடுப்போம். பெண் பிள்ளைகளை அரணாய் நின்று காக்கும் ஆண் பிள்ளைகளையும், சாதனை பல கண்டு புதுமைப்பெண்களாகச் சிறக்கும் பெண் பிள்ளைகளையும் வளர்த்தேடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com