மசாலா முதல் ஐஸ்கிரீம் வரை உணவில் கலப்படம்! என்ன பயங்கரம்!

Food adulteration
Food adulteration

- மதுவந்தி

சமீப காலத்தில் அடுத்தடுத்து உணவிலும் உணவு சார்ந்த விஷயங்களிலும் கலப்படம் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் மூன்று சம்பவங்கள் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பூச்சிக்கொல்லி முதல் அதிக அளவிலான இரசாயனங்கள் வரை இருந்த கலப்படம் இப்பொழுது அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அப்படிக் கண்டெடுக்கப்பட்ட அச்சுறுத்தும் சம்பவங்கள் இதோ:

1. மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தபொழுது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஐஸ்கிரீமிற்குள் ஒரு மனித விரல் நகத்துடன் இருப்பதைக் கண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த அவர், அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் எந்த ஒரு பதிலும் வராததால், அவர் மலாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பரிசோதித்த காவல்துறை அதிகாரிகள் நடந்த சம்பவத்தை FSSAIயின் பார்வைக்குக் கொண்டுபோயுள்ளனர். இதனையடுத்து FSSAI அதிகாரிகள் புனேவிலுள்ள ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் இடத்தை ஆராய்ச்சி செய்து அந்த நிறுவனத்தை மூடவும், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. இரண்டாவது சம்பவமும் மும்பையில் நடந்தது தான். இதுவும் ஐஸ்கிரீம் சம்மந்தப்பட்டது தான். பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் பேமிலி பேக் டப்பாவில் ஒரு இறந்த பூரான் இருந்துள்ளது. இதனை ஆர்டர் செய்து வாங்கிய அந்த நபருக்கு இது அதிர்ச்சி அளிக்க, அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த FSSAI அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு தகுந்த விசாரணை செய்யப்படும் என உறுதி கூறியுள்ளனர். அந்த ஐஸ்கிரீம் நிறுவனம், பொருளைக் கொண்டுவந்து டெலிவரி செய்யும் நிறுவனம் மற்றும் கடை மேலாளரின் மேல் புகார் பதிவு செய்துள்ளனர். அந்த ஐஸ்கிரீம் நிறுவனமும் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தகுந்த விசாரணை மேற்கொள்வார்கள் எனக் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
மன இறுக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் நாள் - ஜூன் 18 Autistic Pride Day
Food adulteration

3. மூன்றாவது, உலக அளவில் அதாவது சிங்கப்பூர், ஹாங்காங், நேபால் போன்ற நாடுகளில் தொடங்கி இந்தியாவில் ராஜஸ்தான் வரை பல இடங்களிலும் சர்ச்சைக்குள் வந்திருக்கிறது இந்தியாவின் பிரபலமான இரண்டு மசாலா பொடி தயாரிக்கும் நிறுவனங்கள். வெளிநாடுகளில் இந்த இரண்டு நிறுவனங்களின் சில மசாலாக்களைத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் சில மசாலாக்களில் அளவுக்கு அதிகமாகப் பூச்சிக்கொல்லிகள், கலப்படங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதினால் சுமார் 12000 கிலோ மசாலாக்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஒரு நிறுவனம் நாங்கள் பூச்சிக்கொல்லிகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதில்லை என அறிவித்துள்ளது, மற்றொன்று பதில் அளிக்கவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி இதுபோன்ற சம்பவங்களும், கலப்படங்களும் இனி நடக்காமல் இருக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உணவு துறை அதிகாரிகளும் இடை இடையே சோதனைகள் நடத்தி கலப்படங்கள் இருந்தால் அதற்குத் தகுந்த தண்டனையோ அபராதமோ அல்லது தடையோ செய்வது முக்கியம்.

மக்களாகிய நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com