உலகம் முழுவதும் மன இறுக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் முயற்சியாக, ஜூன் மாதம் 18 ஆம் நாளில், தன்மையப் பெருமை நாள் (Autistic Pride Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரேசிலில் 2005 ஆம் ஆண்டு, முதல் ‘தன்மையப் பெருமை நாள்’ கொண்டாடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆதாரங்களின்படி, இந்த நாள் கரேத் (Gareth) மற்றும் எமி நெல்சன் (Amy Nelson) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. மன இறுக்கம் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நிலையில், மக்களிடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டவும், சுதந்திரத்திற்கான மன விருப்பம் (Aspires for Freedom) என்ற பிரேசிலிய அமைப்பு 2005 ஆம் ஆண்டில் இந்த நாளை உருவாக்கியது. காலப்போக்கில், இந்த நிகழ்வு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெற்று, உலகளாவிய நிகழ்வாக மாறிவிட்டது.
மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைப் பற்றிப் பொதுமக்களுக்குக் கற்பித்தல், மன இறுக்கம் கொண்டவர்களை மரியாதையுடனும், அனுதாபத்துடனும் நடத்துதல், மன இறுக்கமுடையவர்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்தல் போன்றவை இந்நாளைக் கொண்டாடுவதன் முக்கியத்துவமாக அமைந்திருக்கிறது.
மன இறுக்க அலைவிரிய உடற்கேடு (Autism Spectrum Disorder) என்பது ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு எனப்படுகிறது. இது ஒரு குழந்தையின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது. இந்த வகைக் குழந்தைகளின் பேச்சாற்றலில் கடினம் காணப்படும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாமை, தன் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாமை போன்றவை இதில் அடங்கும். மன இறுக்க அலைவிரிய உடற்கேடு என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். இதை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. சில மருத்துவ முறைகள் மூலம் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு உதவ இயலும்.
இது மனிதர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு அளவளாவிக் கொள்கிறார்கள்? தொடர்பு கொள்கிறார்கள்? கற்றுக் கொள்கிறார்கள்? மற்றும் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. மன இறுக்கம் எந்த வயதிலும் அடையாளம் காணப்படலாம் என்றாலும், இதற்கான குறியீடுகள் மற்றும் அறிகுறிகள் பொதுவாக வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் தோன்றத் தொடங்குகின்றன.
அறிகுறிகள்:
அதாவது, இக்குறைபாட்டைக் குழந்தையின் தொடக்கக் காலச் செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும். குழந்தைகள் பொதுவாக நம்முடைய முகபாவனைகளுக்கு ஏற்றாற் போல், தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும். உதாரணமாக இயல்பான நிலையில் இருக்கக் கூடிய ஒரு ஆறு மாதக் குழந்தையைப் பார்த்து புன்னகைத்தால், அந்தக் குழந்தையும் அதே உணர்வைப் பிரதிபலிக்கும். குரலைச் சற்றுக் கடுமையாக்கினால், அக்குழந்தை அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கும். ஆனால், ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகள் இது போன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தங்களுடைய தனி உலகில் இருக்கும். பெயரை அழைத்தவுடன் உடனேத் திரும்பிப் பார்க்காது. மூன்று அல்லது நான்கு முறை அழைத்த பின்பு மட்டுமே திரும்பிப் பார்க்கும். அதிகமாகப் பேசுவதில்லை, தனிமையையே அதிகம் விரும்பும்.
சில குழந்தைகள், கையில் கிடைத்தப் பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். சில நாட்களில் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சில நாட்களில் சோகமாகக் காணப்படுவார்கள். சொன்ன வார்த்தையையோ, வாக்கியத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வார்கள். இந்த வகைப் பழக்கம், மன இறுக்க அலைவிரிய உடற்கேட்டால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளிடத்திலும் இருக்கும். மிக முக்கியமாக, குழந்தை அதன் தொடக்க மாதங்களில் நடப்பதிலும், பேசுவதிலும் காலதாமதம் ஏற்படலாம்.
குழந்தைகளிடம் இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் இதுவரை துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. ஆனால், இக்குறைபாட்டுக்குக் காரணமாக, எவையெல்லாம் இருக்கலாம் என்ற பொதுவான கணிப்பு உள்ளது.
மரபணுவில் உள்ள பிரச்னைகள் மூலம் இது ஏற்படலாம். குழந்தையின் தாய் கர்ப்பக் காலத்தில் சரியான மருத்துவ சிகிச்சை பெறாதது, குழந்தையின் எடை பிறக்கும் போது மிகக் குறைவாக இருப்பது, வயதான காலத்தில் குழந்தை பெறுவது, கர்ப்பக் காலத்தில் தவறான மருந்துகளை உட்கொள்வது அல்லது குழந்தை வயிற்றில் இருக்கும் போது குழந்தை மற்றும் தாய் வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாவது போன்ற சில காரணங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. எனவே கர்ப்பக் காலத்தில் பெண்கள் முன்னெச்சரிக்கையுடன், சரியான தரமான மருத்துவச் சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.
உலகில் சராசரியாக, 110 குழந்தைகளில் ஒருவருக்கு மன இறுக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளில் மன இறுக்க அலைவிரியக் கோளாறுகள் பெண்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றன. பல வேளைகளில், மன இறுக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் உள்ள கோளாறு ஆகும். மன இறுக்க அலைவிரியக் கோளாறுகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன.
மன இறுக்க அலைவிரிய உடற்கேட்டிற்கான தடுப்பு முறைகள் எனக் குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும் இக்குறைபாட்டை எவ்வளவு விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அதற்கேற்ப அந்தக் குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தி, இயல்பாக அவர்களின் வேலையைச் சுயமாகச் செய்ய வைக்கலாம். தற்போதைக்கு இந்த வழி மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது.
மன இறுக்கம் கொண்டவர்கள் சுதந்திரமாகச் செயல்படவும், முழு வாழ்க்கையை நடத்தவும் உதவும் நோக்கத்துடன் பல தன்னார்வ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.