ஜப்பானில் டிரெண்டாகும் நட்பு திருமணம்! காதலும் இல்லை; உடலுறவும் இல்லை... இது அதுக்கும் மேலே!

Japan friendship marriage
Japan friendship marriage

இதுவரை எத்தனையோ திருமணத்தைப் பார்த்திருப்போம். காதல் திருமணம், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், திருமணமே இல்லாமல் லிவிங்கில் வாழ்வது போன்றவை நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அது என்ன நட்பு திருமணம்? தற்போது ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவரும் திருமண உறவுதான் நட்பு திருமணம். அப்படியென்றால் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…

ஜப்பானில் இளம் வயதினர் பலரும் நட்பு திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த உறவில் காதல், காமம் என்று எதுவும் தேவைப்படாது. திருமணத்தை வெறுப்பவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், காதல், காமம், குழந்தை போன்றவற்றில் விருப்பமில்லாதவர்கள் இந்த நட்பு திருமணத்தைப் பெரிதும் ஆதரிக்கிறார்கள்.

நட்பு திருமணம் என்பது ஒரே எண்ணங்கள், சிந்தனை போன்றவற்றைக் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதற்காகவும், பேசி மகிழ்வதற்காகவும் செய்துகொள்ளும் திருமணம். இவர்களுக்குள் காதல், காமம், குழந்தை போன்ற எந்த விஷயமும் இருக்காது.

இதில் திருமணம் ஆன இருவரும் சட்டப்பூர்வமாக கணவன், மனைவியாக இருப்பார்கள். இவர்கள் சேர்ந்தும் வாழலாம் அல்லது பிரிந்தும் வாழலாம். இவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று நினைத்தால் செயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இருவருக்குமே சம்மதம் என்றால், இருவருமே வேறு நபர்களுடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருக்கலாம்.

அப்பறம் எதற்கு இந்தத் திருமணம் என்று கேட்கிறீர்களா?

நட்பு திருமணம் என்பது ஒரே எண்ண ஓட்டத்தைக் கொண்டவர்கள் ரூம் மேட்ஸ் (room mates) போல இருப்பதாகும். ‘என்னால் சிறந்த கேர்ள் பிரெண்டாக இருக்க முடியாது. ஆனால், நல்ல நண்பியாக இருக்க முடியும்’ என்று நினைப்பவர்கள் தேர்வு செய்யும் முறைதான் இது. இவர்கள் இருவரும் சேர்ந்து மணிக்கணக்கில் பேசி மகிழலாம், இன்ப, துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளலாம் நண்பர்களைப் போல! அதற்கானத் தேடல்தான் இந்தத் திருமணம்.

இந்த நட்பு திருமணத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் 32 வயதிற்கு மேற்பட்டவர்கள். National Average விட அதிகமாக வருமானம் பெறுபவர்கள் 85 சதவீதத்தினர் இளங்கலை பட்டம் அல்லது அதற்கும் மேலாக பட்டம் வைத்திருப்பவர்கள்.

இதையும் படியுங்கள்:
உறவுகள் முறியாமல் நீடித்திருக்க சில ஆலோசனைகள்!
Japan friendship marriage

உடலுறவில் நாட்டமில்லாத பலரும் நட்புடன் இருப்பதிலும், தனக்காக ஒரு துணை தேவை என்பதிலும் நாட்டமுடனே இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாதவர்களும் சமுதாயத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க இந்த நட்பு திருமணத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

பாரம்பரியத் திருமண முறையைப் பின்பற்றாமல், சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் தான் நிலையான நிலமையில் இருப்பது போன்றும் முதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்கிக் காட்டுவதற்காகவும் இந்தத் திருமணம் உதவுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஜப்பானில் திருமணமானவர்களுக்கு வரி சலுகைகள் உண்டு. தனியாக ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது ஜப்பானில் கடினமென்பதால் வரி சலுகைகளுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தத் திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள்.

ஜப்பான் மட்டுமில்லாமல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இப்போது இந்தக் கான்செப்ட் சற்றே எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது.

‘நட்பைவிட சற்று நெருக்கமானது. ஆனால், காதலைவிட சற்றுக் குறைவு’ என்று இதன் அர்த்தத்தை விளக்குகிறார்கள். நட்பிற்கும் காதலுக்கும் நடுவிலே ஒரு கோடு கிழித்து, அந்தக் கோட்டின் மேல் நின்றுகொள்வதுதான் நட்பு திருமணம் என்றுகூட சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com