உலக வரலாற்றிலேயே அழகு, அறிவாற்றல் மற்றும் மர்மம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட ஒரு ஆளுமை என்றால் அது கிளியோபாட்ராவைத் (Cleopatra) தவிர வேறு யாரும் இருக்க முடியாது! 17 வயதிலேயே அரியணை ஏறியது முதல், 9 மொழிகளில் சரளமாகப் பேசியது வரை, அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் அல்ல; நூற்றுக்கணக்கான ரகசியங்கள் புதைந்துள்ள ஆய்வுக்கூடம்.
ஆனால், உலகின் முதல் பெண் அறிவியலாளராகத் திகழ்ந்த இந்த கருப்பழகிக்கு, ஒரு பாம்பு கடிக்கும் அல்லது சில விஷச் செடிகளுக்கும் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மர்மமான முடிவு ஏற்பட்டது ஏன்? அவரது அறிவியல் ஆய்வுகள் எரிக்கப்பட்டது ஏன்? இதோ, கிளியோபாட்ராவின் ஆச்சரியமூட்டும் ஆளுமையின் அறியப்படாத பக்கங்கள்!
கிளியோபாட்ரா உண்மையிலேயே ஒரு பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் நுண்ணறிவாற்றல் மிகுந்த ஒரு பெண். தனது 17வது வயதிலேயே அரசியாக முடி சூட்டிக்கொண்டவர். அவருக்கு அன்றைய காலத்து பண்டைய எகிப்து மொழி நன்கு தெரியும். அவரது காலத்தில் சித்திரத்தில் பதிக்கப்பட்டிருந்த எகிப்து மொழியை நன்கு வாசிக்க தெரிந்த ஒரு சிலரில் கிளியோபாட்ராவும் ஒருவர்.
இதைத் தாண்டி கிளியோபாட்ராவுக்கு ஹிப்ரு, மெடஸ், சிரியன், எத்தியோப்பியன், கிரேக்கம் மற்றும் அரபு மொழிகளில் சரளமாக எழுத படிக்க தெரியும். கிட்டத்தட்ட 9 மொழிகளில் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்று இருந்தார் கிளியோபாட்ரா. மேலும் கிளியோபாட்ரா தனக்கென ஒரு சோதனைச் சாலையை உருவாக்கி அதில் தனது ஆய்வுகளை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. நிறைய மூலிகைகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
இதைத்தவிர அவர் உலக அரசியல், வானியல், கணிதம், புவியியல், வரலாறு, விலங்கியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். கிளியோபாட்ராவின் மருத்துவ குறிப்புகளை புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர் Galen of pergamon மொழிபெயர்ப்பு செய்ததாக செய்திகள் உள்ளன. ஆனால் அவரது புத்தகங்கள் கிமு 319 இல் நடந்த நூலக விபத்தில் எரிந்து சாம்பல் ஆயின என்றும் கூறப்படுகிறது.
அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல ஆராய்ச்சிகளை செய்த கிளியோபாட்ரா ஒரு சிறந்த ஆளுமையாளர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அவர் எழுதிய குறிப்புகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய் பற்றிய குறிப்புகள் ஆகும்.
கிளியோபாட்ராவை பற்றி பல தகவல்கள் மக்களிடையே பேசப்பட்டு வருவது போலவே கிளியோபாட்ராவின் இறப்பை பற்றியும் பல்வேறு மர்மங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. தன்னுடைய காதல் கணவரான மார்க் ஆண்டனியின் இறப்பை தாங்க முடியாமல் கிளியோபாட்ரா விஷ பாம்புகளை தன் மார்பின் மீது விட்டு தீண்டச் செய்து உயிர் துறந்ததாகவும் அவரது இறப்பை பற்றி செய்திகள் உள்ளன.
மேலும் அவர் அழகின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் பாம்பு தீண்டியதால் விஷம் உடலில் ஏறும்போது முகம் மிகவும் விகாரமடையும் என்று கருதி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் பரவலான செய்திகள் உள்ளன. தன் நாட்டில் உள்ள மிகவும் விஷத்தன்மை வாய்ந்த தாவரங்களை உண்டு அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் எனவும் செய்திகள் மக்களிடையே பரவலாக உள்ளது.
எப்படி இருந்தாலும் அழகினாலும், அறிவினாலும் தன் பெயரினை வரலாற்றின் சுவடுகளில் பதித்து சென்ற இந்த கருப்பழகி தன்னுடைய 39 வது வயதிலேயே மரணத்தை தழுவினார் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான்!
இன்றும் கூட மக்களிடையே நிறத்தைப் பற்றிய ஏற்றத்தாழ்வுகள் வரும்போது கருப்பு நிறமும் அழகு என்பதற்கு முன்னுதாரணமாக நம் கண் முன் வந்து செல்பவர் இந்த கருப்பழகி தான் என்று சொன்னால் மிகையாகாது!