
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்', என்ற பாரதியாரின் வரிகளுக்கு இணங்க இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி சிகரம் தொட்டு ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். பெண்கள் தற்போது தொழில், சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
அந்த வகையில் 'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வரிகள் உண்மையாகி வருவதைப் பார்க்கும்போது, பெருமையில் உள்ளம் பூரிக்கத்தான் செய்கின்றது. அதுமட்டுமின்றி ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த துறைகளில் கூட தற்போது பெண்களும் கால் பதித்து வருவது பெண்களின் முன்னேற்றம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.
என்னதான் ஒருபுறம் பெண்கள் முன்னேறிக்கொண்டே இருந்தாலும் மறுபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகளை குறிவைத்து தான் அதிகளவு பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வேட்டையாடும் சமூதாயத்தில் காம கொடூரர்களுக்கு பெண் குழந்தைகளே போதை பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்கள் யாரிடமும் சொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தை வைத்து அவர்களை மிரட்டியே பலமுறை இந்த கொடுமையை நிகழ்த்தும் சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. 50 வயதை கடந்த ஆண்கள் தான் அதிகளவில் இந்த கொடுமைகளை நிகழ்த்துவதாக புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், 2022-ம் ஆண்டை விட 96 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி காதலனுடன் சேர்ந்து நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம், சிறுமியை காதலிப்பது போல் நடித்து கற்பழிப்பு, பள்ளியில் ஆசிரியர்கள் தவறாக நடப்பது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குறிவைத்து நடக்கும் கொடூர சம்பவங்கள் என இப்படி பெண் குழந்தைகளை குறிவைத்து நடக்கும் சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
தினமும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம். எங்கே வெளியில் சொன்னால் குழந்தையின் வாழ்க்கை வீணாகி விடும் என்ற பயத்தில் யாரும் வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம்.
பெண்கள் மீதான பாலியல் பிரச்சினைகள் 15 ஆண்டுகளாகவே அதிகரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அதற்கு இன்றைய வாழ்க்கை முறை மற்றும் செல்போன் பயன்பாடும் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய செல்போன் பயன்பாடுகள், தவறான விஷயத்தை உடனுக்குடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. ஒரு இடத்தில் சிறிய தவறுகள் நடப்பதை ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்தும்போது, அதே தவறு மீண்டும் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி போதை பொருட்களின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. இதுவும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 3% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 19% என்பது தான் பெரும் வேதனை. பாலியல் குற்றங்களில் கைது செய்யப்படுபவர்கள் மீண்டும் வெளியில் வந்து அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கினால் மட்டுமே இனிவரும் காலங்களில் இந்த குற்றங்கள் நடப்பதை தடுக்க முடியாது, ஆனால் குறைக்க முடியும்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை சமாளிக்க பெற்றோர் மிகவும் விழிப்புடன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.