பெண்களின் சுதந்திரம், சமீபகாலமாகதான் தலைதூக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதை பறிக்கவும் பல தடைகளும் எழுந்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை சொல்லலாம்.
பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தை கடந்து இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து நடுரோட்டில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், உறவினரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் என பல சம்பவங்கள்...
ஊடகங்கள் மூலம் தெரிந்த சம்பவங்கள் இத்தனை என்றால் தெரியாமல் இன்னும் எத்தனையோ? ஒவ்வொரு பெண்ணிடமும் அவர்களுக்கு நடந்த சம்பவங்களை கேட்டால் கூட கோடி கணக்கில் குவியும் குற்றங்கள்... தினசரி நூற்றில் ஒரு பெண்ணாவது கேலி, கிண்டல், சீண்டல்கள் என அனுபவிக்கும் நிலையில்தான் இந்த சமூகம் செயல்பட்டு வருகிறது.
இதனால் தான் பெற்றோர்கள் தங்கள் பெண்களை தனியாக அனுப்புவதற்கு தயங்குகின்றனர். இது போன்ற சம்பவங்களால் தான் பல பெண்கள் வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பெண்கள் பாதுகாப்பு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆபத்தின் போது அழைக்க அவசர உதவி எண்கள் என பல இருந்தும், அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில், இருக்கும்போது அவை செயல்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே...
இவ்வாறு நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்க ஒரு சில நாடுகளில் இருப்பதைப்போல், பாதுகாப்புக்களையும் தண்டனைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது பள்ளிக் கல்லூரிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக 'பிங்க் பேட்ரோல்' (pink patrol) என்ற புதிய திட்டத்தை திருப்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் அறிமுகப்படுத்தி உள்ள நிகழ்வு வரவேற்க தக்க ஒன்றாக திகழ்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் உட்கோட்டம் உட்பட்ட பகுதிகளில் 9க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்குப் பெண்கள் சாலையில் செல்லும் போது சிலர் கேலி, கிண்டல் செய்வதாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது. இதனையடுத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 8 முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மகளிர் காவல்துறை இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை போன்று அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை செய்யப்பட்டு வந்தால், குற்றங்கள் குறையலாம்.... இந்த திட்டம் பெண்களை பாதுகாக்குமா? இதுகுறித்து உங்களுடைய கருத்தை கீழே உள்ள கமெண்டில் பதிவு செய்யுங்கள்...