தங்கமே தங்கம்! பொன்னின் பயணம்...1960-களில் தங்கம் என்ன விலை?

பவுன் ₹94 இருந்து லட்சத்தைத் தாண்டிய தங்கம்: தமிழர் வாழ்விலும் மொழியிலும் பொன்னின் பயணம்
gold-rate-then-and-now
gold-rate-then-and-nowcredit AI Image
Updated on
MM strip
MM strip

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பினில் குறைவதுண்டோ?”

என்ற பாடல் என்றைக்கும் மவுசு குறையாதது — தங்கத்தைப் போலவே! அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதை நாம் அறிந்தாலும், தற்போதைய அதன் உயர் மதிப்பு, இதுவரையில் உலகம் கண்டிடாதது!

பத்துக்களில் இருந்த ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை நூறுகளாகி, ஆயிரங்களாகப் பெருகி, இப்பொழுது லட்சத்தைத் தாண்டி நிற்பதை நம்மில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. (gold-rate-then-and-now)அதனால்தானோ என்னவோ, அதன் விலை ஒரு நாளில் இரண்டு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது! காலையில் ஒரு முறையும், மாலையில் மற்றொரு முறையும் அதன் விலையை அறிவிக்கும் வழக்கம் நெடுநாட்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.

அதன் அருமை கருதியே, நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் 'தங்கம்' என்றே தங்கள் பெண் குழந்தைகளுக்கும், ஏன், ஆண்களுக்கும்கூட (தங்கராஜ், தங்கமணி, தங்கையன் என) தங்கம் கலந்தே பெயரை வைத்தார்கள். மகளிர் தங்கள் மங்கல நாணைத் தங்கத்தில் அணியும் வழக்கமும் இருந்தது. அந்தப் பாரம்பரியத்தை அறிந்த அரசியல்வாதிகள், தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ‘தாலிக்குத் தங்கம்’ என்று அறிவித்து, அதனை முடிந்தவரை நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள்!

‘அவள் உடம்பில் பொட்டுத் தங்கம் கூட இல்லை!’ என்று எழுதி, எழுத்தாளர்களும் ஏழ்மையை விளக்கத் தங்கத்தையே துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். அதன் குறையாத மதிப்பு காரணமாக, காதலர்களும் தங்கள் காதலியரைத் ‘தங்கமே’ என்றே வர்ணிக்க ஆரம்பித்தார்கள்.

கட்டித் தங்கத்தை வெட்டியெடுத்து, பல சுத்திகரிப்பு முறைகளின் மூலம் அதைத் தூய்மையாக்கி, அதன் பிறகு பிஸ்கட்டுகளாகவும் சிறு சிறு துண்டுகளாகவும் மாற்றி, அதனோடு மேலும் சில உலோகங்களையும் சேர்த்தே ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் மோதிரம், வளையல், சங்கிலி போன்றவை மட்டுமே பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தன. அதிலும் தங்கத்திற்கென்று சிலவும், வெள்ளிக்கென்று வேறு சில ஆபரணங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. அழுத்தந்திருத்தமான, எடை அதிகமுள்ள நகைகள் முன்பு வெள்ளியில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இப்பொழுதோ அவையும் தங்கத்தாலேயே செய்யப்படுகின்றன!

அதுமட்டுமில்லாது, 'வளையல் கடையம்' என்றும், ஆண்களின் கைகளில் 'ப்ரேஸ்லெட்' என்றும் எடையைக் கூட்டிக்கொண்டு இறுமாப்பாய் வலம் வருகின்றன. தங்கம் (Gold), கௌரவத்தைப் பறைசாற்றும் பொருளாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் பெண்கள், தங்கள் பெரும்பாலான உறுப்புகளைத் தங்கத்தால் அழகுபடுத்துவதைப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

இவையெல்லாங்கூட பவுனின் விலை பல மடங்கு உயரக் காரணங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது! பல நாடுகளும் அவற்றின் முக்கிய வங்கிகளும் 'கோல்ட் ரிசர்வ்' (Gold Reserve) வைத்துக் கொள்வதையே விரும்புவதால், தங்கத்தின் தேவை தரணியெங்கும் கூடிவிட்டது.

சாதாரண மக்களின் கனவுப் பொருளாகவே பொன் மாறி வருகிறது. அன்றாடங்காய்ச்சிகளுக்கும் அதற்குமுள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ஒன்று, ஒரு பவுன் வைத்திருப்பவர் கூட இன்று 'லட்சாதிபதி' என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இணையம் கிடைக்கவில்லை!
gold-rate-then-and-now

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரணமாக நாம் என்ன சொல்வோம்? எனக்குத் தெரிந்து, இன்று கிராம் ₹14,320/- ரூபாயாகவும், பவுன் ₹1,14,560/- விற்கும் தங்கம், 'ஒரு காலத்தில் இவ்வளவு மலிவாக இருந்தது' என்று சொல்வோமல்லவா? அப்படிச் சொல்ல வேண்டுமானால், நாம் 1960-களுக்குச் செல்ல வேண்டும். அப்போது எனது சகோதரர் தனது கோடை விடுமுறையில் ஒரு வேலைக்குச் சென்று, ஒரு மாதத்தில் ₹25/- சம்பாதித்து, அதில் கால் பவுன் மோதிரம் செய்து நீண்ட நாட்கள் அணிந்திருந்தார்!

1980-களில் சென்னை குறளகத்தில் எங்கள் அலுவலகம் இயங்கியபோது, நானும் சீனியர் லஜபதி அவர்களும் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் ஒரு வெள்ளிக்கடையில், கிராம் ₹6.40-க்கு ஓய்வு பெற்ற நண்பருக்காக ஏதோ வாங்கியது இன்னும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது!

gold rate
gold rate

உங்களுக்கும் கோல்ட் ஒரு பவுன் ₹94/-க்கு வேண்டுமா? வாங்கலாங்க! ஆனா என்ன... நாம ஒரு 65 ஆண்டுகள் பின்னோக்கிப் போகணும்! ஆமாங்க, அப்ப ஒரு பவுன் விலை ₹94 தான்! எப்படிச் சொல்றேன்னு கேட்கறீங்களா? அந்தக்கால பத்திரிகைச் செய்தியை நீங்களே பாருங்களேன்!

logo
Kalki Online
kalkionline.com