குட் டச்... பேட் டச்... மட்டும் போதாது இத்தோடு ‛நோ டச்’சும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க!

No Touch
No Touch

- தா. சரவணா

‛குட் டச், பேட் டச்’ இதுதான் இப்போதைய பெண் குழந்தைகளுக்கு தேவையான மந்திரச் சொற்கள் ஆகும். ஏனெனில், குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வி, இப்போது நடக்கும் செயல்களைப் பார்த்து நம் நெஞ்சில் எழாமல் இல்லை. அதனால் பெண் குழந்தைகளுக்கு தொடுதல் தொடர்பான புரிதலை புரிய வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் நெஞ்சுப் பகுதி, இடுப்பு பின்புறம் மற்றும் கீழ் பகுதி, உதடு ஆகியவற்றை தந்தை கூட தொடக் கூடாது என்பதை உணர்த்த வேண்டும். அப்படி யாராவது தொட முயற்சித்தாலோ, தொட்டாலோ உடனடியாக அம்மாவிடம் இது குறித்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் தாய் ஒருத்திதான், தன்னுடைய குழந்தைகளுக்கு உண்மையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

இது தவிர்த்து, வயது வந்த பெண்களிடம் முகம் தெரியாத நபரோ, தெரிந்த நபர்களோ தேவையில்லாமல் பேசினாலோ, அதிகப்படியான உரிமை எடுத்தாலோ அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப் பார்க்க வேண்டும். அதையும் மீறி தொந்தரவுகள் தொடர்ந்தால், தன் கணவரிடமோ, உடன் பிறந்தவர்கள், தந்தை, தாயிடம் கூறலாம். அவர்கள் மூலமாக மகளிர் போலீசில் புகார் அளிக்கவும் செய்யலாம்.

இப்படி பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படும் போது, சமுதாயத்தில் இருந்து வெளி வரும் பல கருத்து குற்றச்சாட்டுகளில், பெரும்பாலும் பெண்கள் மீதுதான் சாட்டப்படுகிறது. அதாவது, ‛அவ போட்டிருந்த டிரஸ் அப்படி’ ‛இப்படி டிரஸ் போட்டா... எவனா இருந்தாலும் தப்பு பண்ணத்தான் நினைப்பான்’ என்பதான குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி பகுதியில் நடந்த இளம் பெண்கள் பாலியல் பலாத்கார புகாரில், பாதிக்கப்பட்ட பெண்கள் மீது இப்படிப் பட்ட குற்றச் சாட்டுகள் வீசப்பட்டன. ஆனால், பிறந்த 6 மாத குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் நிலையில், அந்த குழந்தை என்ன பாவம் செய்தது? என யாரும் யோசிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்!
No Touch

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கும் நபர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பெண் குழந்தைகள், பெண்கள் மீதான சீண்டல்கள்

இன்னும் குறைந்தபாடில்லை. பெண்களை பாலியல் சீண்டல்களில் இருந்தும், பாலியல் பலாத்காரத்தில் இருந்தும் காப்பாற்ற ஒரே தீர்வு, குற்றம் சாட்டப்பட்ட காம மிருகங்களுக்கு இப்போதுள்ளதைக் காட்டிலும் கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். குறிப்பாக அரபு நாட்டில் விதிக்கப்படுவது போல உடனடி தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் இது போன்ற நாட்டில் வாழும் மிருகங்கள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போவார்கள். அது வரையில் ‛குட் டச், பேட் டச்’ தான் நமக்கிருக்கும் ஒரே ஆயுதம்.

இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, "குட் டச், பேட் டச் என்பதைக் காட்டிலும், இப்போது 'நோ டச்’ என்பதைத்தான் நாங்கள் அதிகம் வலியுறுத்தி வருகிறோம். அதே போல, பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் அவர்கள் ஆடை அணிதல் போன்றவற்றிலும் சற்று கண்டிப்பு காட்ட வேண்டும். அப்போதுதான் எவ்வித தவறுகளும் நடக்காது" என்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com