

இளநரை(Grey hair) என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும் இளம் வயதினரை அதிகம் கவலைப்பட வைக்கும் பிரச்னைகளில் ஒன்றாகும். சிறிய வயதிலேயே தலைமுடி நரைப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. மேலும் அது அவர்களின் தன்னம்பிக்கையும் குறைத்து விடுகிறது. இளநரைக்கு தீர்வாக ஹேர் டை இருந்தாலும் அது நிரந்தர தீர்வு கிடையாது. இளம் வயதினர் தொடர்ச்சியாக தலைமுடிக்கு கருப்பு சாயம் ஏற்றுவதை விரும்புவதும் இல்லை.
இளநரைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது சிறந்த தீர்வாக அமையும். ரசாயனம் மிகுந்த வண்ணப் பூச்சுகள் தலைமுடியை கருமையாக்குவதோடு மட்டுமல்லாமல், மேலும் சில பக்க விளைவுகளையும் உண்டாக்குகின்றன. மரபணு ரீதியான நரையை முற்றிலும் மாற்ற முடியாது என்றாலும், முறையான ஊட்டச்சத்து மூலம் அதன் வேகத்தைக் குறைத்து, ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும்.
நரைமுடிக்கான காரணங்கள்:
முடியின் வேர்க்கால்களில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes), முடிக்குக் கருப்பு நிறத்தைத் தரும் மெலனின் நிறமியை உருவாக்குகின்றன. இந்த உற்பத்தி குறையும்போது முடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு மரபணு காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், நமது வாழ்வியல் முறையும், மன அழுத்தம் மற்றும் சத்துக்குறைபாடு ஆகியவை முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. கீழ்க்காணும் 7 உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுக்கலாம்.
1. நெல்லிக்காய்
நெல்லிக்காய் தலைமுடிக்கு ஒரு வரப்பிரசாதம். இது முடியின் வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் செல்கள் சிதைவடைவதைத் தடுத்து, மெலனின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது இளநரையை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
2. முட்டைகள்
இயற்கையாகவே முட்டையில் முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதம், நல்ல கொழுப்பு, பயோட்டின் மற்றும் வைட்டமின் B12 அதிகளவில் உள்ளன. வைட்டமின் B12 குறைபாடுதான் ரத்த சோகைக்கும், அதன் விளைவாக இளநரைக்கும் முக்கியக் காரணமாகிறது. அதனால் , முட்டை சாப்பிடுவது முடி நிறத்தை மாற்ற உதவும்.
3. கீரைகள்
முருங்கைக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைய உள்ளது. இது ரத்தத்தை உற்பத்தி செய்யவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகின்றது. இதனால் முடியின் வேர்கால்களுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும்போது, முடி வலுவாகவும் கருமையாகவும் வளரும்.
4. கருப்பு எள் மற்றும் விதைகள்
கருப்பு எள்ளில் துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்கள் முடியின் நிறமியை உற்பத்திக்கு செய்வதற்கு மூலக் காரணமாக இருக்கின்றன. அதேபோல் பாதாம் விதைகளில் முடிக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் ஊட்டச் சத்துக்களும் உள்ளன. இவை முடியை கருமையாக மாற்ற உதவுகின்றன.
5. மாதுளை
தலைமுடி நரைக்க முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். மாதுளம் பழத்தில் பாலிபினால்கள் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதனால் மன அழுத்தம் குறைவதால் முடியின் நிறமிகள் தூண்டப்படும்.
6. வால்நட்ஸ்
வால்நட்ஸ்களில் மெலனின் உற்பத்திக்கு தேவையான தாமிரச்சத்து அதிகம் உள்ளது. இது மெலனின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் ஈ முடிகளைப் பளபளப்பாக மாற்றுகின்றன.
7. பால் மற்றும் தயிர்
பாலில் உள்ள கால்சியம் மற்றும் B12 முடி நரைப்பதைத் தள்ளிப் போடுகின்றன. தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவாகும். இது செரிமானத்தைச் சீராக்கி, ஊட்டச் சத்துக்கள் உடலில் முழுமையாக உறிஞ்சப்பட உதவுகிறது. இவை முடியின் நிறத்தை மீண்டும் கருமையாக்க பங்களிப்பை வழங்குகின்றன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)