

மழை மற்றும் குளிர்காலங்களில் பலர் மூக்கை சிந்தியவாறு அங்குமிங்கும் அலைவதை அன்றாடம் பார்த்திருப்பீர்கள். காரணம் சளி பிரச்சினை. நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருக்கும் வரை எந்த உடல் நலப் பிரச்னைகளையும் விரட்டி விடலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் சளி போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இது அதிகமானால் அது நமது மூச்சு பாதையை சீர்குலைத்து மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த சளித் தொல்லையை நீக்கும் அரு மருந்தாக கருந்துளசி (Black basil) உள்ளது.
நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நமது உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது தான் சளி. இது அதிகமாக இருக்கும் போது தான் பிரச்னையே உருவாகும். அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை சரி செய்யலாம். அது தான் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.
கருந்துளசியை சளித் தொல்லையை விரட்டும் ஒரு சிறந்த மூலிகையாக குறிப்பிடுகிறார்கள். 'அசிமம் டெனியபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட கருந்துளசியின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
சிறிதளவு கருந்துளசி இலைகளை எடுத்து கழுவி பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை அகற்றும். கருந்துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்படும் சளி நீங்கும்.
கருந்துளசியில் காரம் சிறிது இருக்கும். ஆனால், சிறிது மிளகுடன் 10 துளசியிலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும். சளி காய்ச்சல் ஏற்பட்டால் 5 கருந்துளசி இலைகளுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட காய்ச்சல் சரியாகும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி முக்கிய இடம் வகிக்கிறது. இதில் 12 வகையான திரவங்கள் நிறைந்திருக்கிறது. இது சர்க்கரை நோயை மட்டுப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அதோடு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது.
தினசரி நான்கைந்து கருந்துளசி இலைகளை நன்கு மென்று தின்றால் இருமல், சளி, தலைவலி, வயிற்றுக்கோளாறு சரியாகும். தண்ணீரால் ஏற்படும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
கருந்துளசியில் இருக்கும் 'ரேடியேஷன் பாய்சன்' எனும் ஆற்றல் மிக்க ரசாயனம் சிறு பூச்சிகளின் விஷக்கடிகள், சரும தொற்று கிருமிகள், விழித்திரை கோளாறுகள் என பலவற்றை நீக்கும் வலிமை கொண்டது. துளசி சாறு இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. குடல் ஆரோக்கியம் காக்கிறது. கண்புரை ஏற்பட்டாலும் சரி செய்துவிடும். கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஒசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.
கருந்துளசி சாற்றை உடல் சிராய்ப்பு மற்றும் சிறு காயங்களுக்கு ஆயின்ட்மென்ட் போல பயன்படுத்தி வரலாம்.
கருந்துளசி இலையுடன் சிறுதுண்டு பச்சை மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து சாப்பிட சிலந்திக்கடி நஞ்சு கடித்த இடத்தில் இதை பூசலாம்.
முகப்பரு முக அழகை கெடுக்கிறதே என்று கவலையா? சிறிதளவு கருந்துளசி சாற்றை முகப்பரு உள்ள இடத்தில் தடவி வர முகப்பருக்கள் மறைந்து விடும்.
இரவில் செம்பு அல்லது பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கி போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் வாயை கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும்.
தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)