
மெலட்டூர் மண்… நடனம் இசை நாடகம் இவற்றினூடே பக்தி மணம் கமழ கமழ கிடக்கிறது. பிரகலாத சரித்திரம் - அரிச்சந்திர புராணம் - உஷா பரிணயம் - ருக்மணி கல்யாணம் என புராணங்கள் பரிமளிக்கும் பூமியாய் காட்சியளிக்கிறது. பீஷ்மர், தசரதர் மற்றும் ருக்குமணி, லீலாவதி, சந்திரமதி என பல்வேறு முகங்கள் காட்டி நம் ஆன்மாவுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்தவர் உயர்திரு மெலட்டூர் எஸ்.நடராஜன் அவர்கள்.
மெலட்டூர் ஸ்ரீ எஸ். நடராஜன் அவர்கள் இறைவன் ருத்ர பரமேஸ்வரர் மற்றும் நரசிம்மர் மீது அசைக்க இயலாத பக்தியுடனும் நிறைந்த இறையாசிகளுடனும் வாழ்ந்தவர். கலை மூலம் தனது பக்தி பிரவாகத்தை வெளிப்படுத்தியவர். அவர் எப்போதும் தெய்வீக ஐக்கியத்துடனே இருப்பது அவருடன் பயணிப்போர் உணர்வர். பக்தமேளா நாடகங்களில் பிரகலாத சரித்திரத்தில் லீலாவதியாக 50 ஆண்டுகளுக்கு மேலாக பங்களித்து கணவனுக்கும் பிள்ளைக்கும் இடையே சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப் போராட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்தவர்.
காஞ்சி பரமாச்சாரியாரால் மிக இளம் வயதிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட இவர் பாகவத லாஸய நிபுண, நாட்டிய சிகாமணி, கலைமாமணி, பிரதீப புரஸ்கார், நாட்டிய கலாநிதி, சங்கீத நாடக அகாதமி விருது, நாட்டிய கலாமணி மற்றும் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது ஒவ்வொரு நடன நிகழ்வும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் சங்கமாய் நிகழும் வல்லமை கொண்டவை. இவரின் சீடர்கள் உலகெங்கும் பரவி தங்கள் குருவின் நடனம், சமுதாய உயர்வு, சக மனித சகோதரத்துவம், ஆன்ம அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வை, கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவம், இறைபக்தி, கிராம குழந்தைகளுக்கும் நடனம் என சேவை மனப்பான்மையுடன் இக்கலையை கற்பித்து வருவது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
அவ்வழியில், தன் மனதில் அன்பு தெய்வமாய் வீற்றிருக்கும் தந்தை என்பதையும் தாண்டி குருவாக வரித்துக்கொண்டு அவரின் மகத்தான பணிகள் அத்துணையையும் அவரது சீடரும் மகளுமான ஸ்ரீமதி பிரியம்வதா முரளி முழு அர்ப்பணிப்புடன் தந்தையின் வாக்கை தவமாய் சிரமேற்கொண்டு மகிழ்வுடன் செய்து வருகிறார்.
சமீபத்தில் பிரியம்வதா முரளி அவர்களின் குழு திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தில் நிகழ்த்திய ஆடிப்பூர உற்சவத்தில் அரங்கனும் ஆண்டாளும் கீதாச்சாரத்துடன் இணைந்த ஆண்டாள் பாசுரங்கள் மற்றும் ஆண்டாள் அரங்கன் கல்யாண வைபவம் என பார்க்கும் அத்தனை பேரையும் துவாபர யுகத்துக்கும் ஆண்டாளின் காலத்திற்கும் அழைத்துச் சென்றார். அதிலும் சிறப்பாக ஆண்டாளின் திருக்கல்யாணம் கலசம் வைத்து திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்தல், நலங்கு அதுவும் அப்பளம் உடைத்தல் அப்பப்பா மெய்சிலிர்க்க வைத்த நாட்டியம்.
பிரியம்வதா முரளியின் குழுநடனமாடிய நடன மணிகள் இறை பிம்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்தது தனிச்சிறப்பு. அன்பும் பக்தியும் ஏக்கமும் குறும்பும் சிரிப்பும் என பலவித நடன மொழிகளால் புராண உலகத்துக்குள் நம்மை அமர வைத்திருந்தது இவர்களின் வெற்றி. கூடி இருந்த அத்தனை பேரும் நாட்டியத்தில் தங்களை மறந்து அமர்ந்திருந்தது இறையருளும் குருவருளும் நிறைந்திருந்ததை உணரச் செய்தது.
கலைப்பாதையில் தனது தந்தையுடன் 35 வருடங்கள் பயணித்த பிரியம்வதா அவர்களின் கனவு, சிந்தனை, பேச்சு என அத்தனையிலும் தந்தையும் குருவுமான உயர்திரு நடராஜன் அவர்களே நிரம்பியிருந்ததை உணர முடிந்தது.
தனது தந்தையின் கனவை நனவாக்கும் முகமாக நேர்மை, ஒழுக்கம், துணிவு, மரியாதை, சமநோக்கு, இரக்கம், கருணை, தாய்மை, இறைபக்தி, ஞானம் என பல்வேறு நற்குணங்களை தன்னகத்தே கொண்டு தனது நடன கலை மூலம் இறை பக்தியை இளம் தலைமுறையினரிடையே பரப்ப, இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். 20 குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்த இலவச பயிற்சியானது திருவையாறு அவ்வை கோட்டம், திருமானூர் எனப் பல்கி இன்று 250 குழந்தைகள் வரை வளர்ந்துள்ளது. இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டு சமுதாயப் பணி செய்து வரும் பிரியம்வதா முரளி அவர்களுக்கு மருத்துவரான அவரின் கணவர் மனைவியின் வெற்றிக்கு பக்க பலமாக இருப்பதை இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பெங்களூருவில் தனது நடன பள்ளியான லாஸ்ய மேளா லயா மற்றும் மெலட்டூர் பாகவத மேளா வித்யாலயா ஆகியவற்றை நிர்வகித்து வரும் இவரின் ஒவ்வொரு செயலிலும் குருபக்தி நிரம்பி வழிவதைக் காணும் சமயம்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (குறள் 67) - என மகிழ்வதா?
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70) - என மலைப்பதா?
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தைநாடே (புறம் 117: 9,10)
என பாரிவேந்தனின் மகளிர் சொல்வதைப் போல இவருக்கும் மெலட்டூர் 'தந்தை நாடு' என உணர்வதா?
மொத்தத்தில் 'தந்தையர் ஒப்பர் மக்கள்' என தொல்காப்பியரின் கூற்றோடு ஒத்துப்போகிறது மனது.
ஒரு குரு எப்போதும் நித்யமானவர். அவரது படைப்புகள் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரது ஆன்மா எப்போதும் அவரின் சீடர்களுக்கு வழிகாட்டியாகவும் ஒளியாகவும் இருக்கும்.
'நான் போய்விட்டேன் என்று வருத்தப்படாதே. ஒரு நாட்டிய சங்கீத ஆராதனையுடன் என் முடிவைக் கொண்டாடு. ஒவ்வொரு கலைஞர் மற்றும் ஒவ்வொரு ஆர்வமுள்ள நடன கலைஞர்கள் மூலமாகவும் என் படைப்புகளும் மதிப்புகளும் வாழட்டும்…' மெலட்டூர் ஶ்ரீ எஸ். நடராஜன்.
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்…