Melattur Bhagavata Mela
Melattur Bhagavata Mela

Interview: மெலட்டூர் பாகவத மேளா - கலைமாமணி எஸ்.குமார் அவர்களுடன் ஒரு பிரத்தியேக சந்திப்பு!

Published on

தஞ்சாவூர் கலைகளின் தாய்மடி. அதில் சந்தேகமே இல்லை. இங்கிருந்து புறப்பட்டு உலகையே வசப்படுத்திய கலைகள் ஏராளம். அப்படிப்பட்ட தஞ்சைப் பகுதியில் இருக்கும் அழகிய கிராமம் தான் மெலட்டூர். எங்கும் பச்சைபசேல் வயல்கள். கண்ணுக்கு குளிர்ச்சி தரும் சோலைகள் . இந்த ஊர் பற்றிச் சொன்னால் போதும் சட்டென்று எல்லோருடைய மனதிலும் நினைவுக்கு வருவது பாகவத மேளாதான்.

ஐநூறு ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கலையோடு நெருங்கி செயல்பட்டுகொண்டிருப்பவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 2002 இல் கலைமாமணி பட்டம் பெற்றவரும், ஆந்திர தெலுங்கானா அரசால் 2023 ம் வருடம் Pratibha Puraskar விருது பெற்றவரும், பிரகலாத சரித்திரத்தில் ஹிரண்யகசிபு பாத்திரமாகவே மாறி கடைசி க்ளைமேக்ஸ் காட்சியில் மிக உணர்ச்சிமயமாக அந்த பாத்திரமாகவே வாழ்ந்தவருமான, எஸ்.குமார் (நிர்வாக அறங்காவலர் பாகவத மேளா நாட்டிய சங்கம் மெலட்டூர்), பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக தோற்றமளிப்பவர். 'இவரா ஹிரண்யகசிபு நாடகத்தின் climax காட்சியில் கிட்ட தட்ட 30 நிமிடம் ஹிரண்யகசிபு வதத்தில் அவ்வளவு உணர்ச்சிபூர்வமான நடித்து மெய்சிலிர்க்க வைத்த நபர்?' என்று வியக்க வைத்தவர்.

மெலட்டூர் பாகவத மேளா குடும்பத்தைச் சேர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாக முக்கிய வேடத்தில் நடித்து வருபவர். இவரது மூத்த சகோதரர் எஸ்.நடராஜனின் மறைவுக்குப் பிறகு பாகவத மேளா பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, இந்நாள் வரை திறம்பட நடத்தி வரும் இவரிடம், பாகவத மேளா பாரம்பரியம் குறித்த விளக்கங்கள் கேள்வி பதிலாக பெற்றோம்.

நாடகங்களில் நவரசங்களையும் காட்டி மக்களை பரவசப்படுத்தும் இந்த கலைஞரின் முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஒருசேரக் கொப்பளிக்க உணர்வு பூர்வமாகப் பேச ஆரம்பித்தார்.

S.Kumar - Melattur Bhagavata Mela
S.Kumar - Melattur Bhagavata Mela
Q

பாகவத மேளா எப்படி யாரால் முதன் முதலில் இந்த மெலட்டூர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது?

A

"பாகவத மேளா பழைமை வாய்ந்த பக்தி மார்க்கத்தின் ஒரு பகுதி. பாகவதலு அல்லது பாகவதர் என்று அழைக்கப்படுபவர்கள் இதனைச் செய்தார்கள். அதனால் தான் இதற்கு பாகவத மேளா என்ற பெயர் வந்தது. பாகவத மேளாவின் மிகவும் தனித்துவமான அம்சங்களான நடனம், நடிப்பு, பாடுதல் போன்ற அனைத்து வேடங்களும் ஆண்களால் மட்டுமே நடத்தப்படும்.

பாரம்பரிய நடனத்தை விரும்புவோருக்கு, பாகவத மேளா கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இசையை விரும்புவோருக்கு, பாகவத மேளாவில் பாரம்பரிய கர்நாடக இசை சிறப்பாகக் காணப்படுகிறது. நாடகத்தை விரும்புவோருக்கு, பாகவத மேளா என்பது பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் வகுக்கப்பட்ட நமது பண்டைய நாடக பாரம்பரியத்துடன் ஒரு உயிருள்ள இணைப்பாகும். இவ்வாறு பாகவத மேளா என்பது ஆன்மீகம், நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும்.

பாகவத மேள நாடகத்தில், பாகவதர்கள் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் புராணக் கதைகளைப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள். பக்திக்காக ஏற்பட்டது என்ற காரணத்தினால் இந்தக் கலையானது கோயில்களிலும் அதனைச் சுற்றிலும் இன்றளவும் நடந்து வருகிறது.

இதனுடைய பாரம்பரியம் சோழ நாட்டில் கி பி பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கியது. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, பல நேரங்களில் பல இடையூறுகளுக்கு உள்ளானாலும், அப்படியே தேங்கி விடாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதுதான் இதன் சிறப்பு.

Melattur Bhagavata Mela
Melattur Bhagavata Mela
Q

பதினாறாம் நூற்றாண்டு தொடங்கிய இந்த நிகழ்வுக்கு இடையில் இடையூறு என்று சொன்னீர்கள். எப்படிப்பட்ட தடங்கல்கள்?

A

1932 ம் வருடம் பாகவத மேளாவின் முக்கிய காரணகர்த்தா பரதம் நடேசய்யர் நோய்வாய்ப்பட்டு காலமானார். இதனால் நாடக நிகழ்ச்சி மெலட்டூரில் நின்று போனது. 1938ம் வருடம் என் தாத்தா வெ. கணேசய்யர் அவர்கள் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினார். காலமான நடேசய்யர் அவர்களின் சீடர்கள் பலர் அப்போது மெலட்டூரில் இருந்தனர். அவர்களை தன்னோடு இணைத்துக் கொண்டார். என் தாத்தா.

Melattur Bhagavata Mela
Melattur Bhagavata Mela
Q

உங்கள் தாத்தா தன்னுடைய 40 ஏக்கர் நிலத்தை கொஞ்சம் கொஞ்சமா விற்று இந்த கலையை வளர்ப்பதற்காக செலவிட்டார் என்று கேள்விப்பட்டோம்; அதைப் பற்றி...

A

ஆமாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். தாத்தா ஒரு தீவிர நரசிம்ம பக்தர். கிராம மக்களிடம் நிதி திரட்டி, தன் நிலத்தை விற்ற பணத்துடன், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சிலையை ஐம்பொன்னால் ஆக்கி உற்சவ மூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். தன்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு வருடா வருடம் உற்சவம் நடத்தினார்.

Melattur Bhagavata Mela
Melattur Bhagavata Mela
Q

உங்கள் தாத்தா 'பாகவத மேளாவின் தந்தை' என அழைக்க பட்டதாக அறிந்தோம். எப்படி அந்த பெயர் வந்தது?

A

உண்மை தான். 1941 ம் வருடம் மெலட்டூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள் சந்நிதி முன்பாக பிரகலாத சரித்திரம் என்ற நாட்டிய நாடகத்தினை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் இந்த பாகவத மேளா என்னும் கலை உயிர்த்து எழுந்தது. அது எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறோம். அவர் தொடங்கி வைத்த இந்த கலை மூலம் அவருக்கு இந்த பட்டப் பெயரை மக்கள் சூட்டி கொண்டாடினார்கள்.

Q

உங்கள் தாத்தா மறைவுக்கு பிறகு எப்படி இந்த கலை உயிர்த்தெழுந்தது?

A

தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தந்தையார் கலைமாமணி ஜி சுவாமிநாதன் பாகவத மேளாவின் பொறுப்பினையும், முக்கிய வேடங்கள் ஆன ஹிரண்யகசிபு, ஹரிச்சந்திரன் வேடங்களை ஏற்று மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த நேரத்தில் என் தாயார் ஶ்ரீமதி கல்யாணி அவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது. என் தந்தைக்குப் பிறகு என் அண்ணா நடராஜன் வசம் இந்த பொறுப்பு வந்தது. இன்றைக்கு இந்தக் கலை உலகம் முழுவதும் சேரக் காரணமாக இருந்தவர் அவர் தான். அது மட்டுமல்ல பெண் வேடங்களான லீலாவதி, சந்திரமதி முதலிய பாத்திரங்களை ஏற்று மிக நளினமாக தத்ரூபமாக நடித்து வந்தார்.

Melattur Bhagavata Mela
Melattur Bhagavata Mela
Q

உங்கள் கூற்றுப்படி இந்தக்கலை வடிவம் உயிர்ப்போடு தொடர்வதற்கு எது காரணம் என்று சொல்வீர்கள்?

A

இன்றளவும் இந்தக்கலை உயிர்ப்போடு தொடர்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இதில் பங்கேற்கும் அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்கள். கடந்த 80 வருடங்களாக எந்த வித சன்மானமும் இல்லாமல் ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார்கள். அவர்களின் ஆழ்ந்த பக்தியும் இந்தக் கலையின் மீதான ஈடுபாடு மட்டுமே காரணம்.

இதையும் படியுங்கள்:
'எழுத்தாளர் ஏகாம்பரம்' to 'பாவம் பட்டாபி'... நகைச்சுவை நாடக நாயகன் கோவை அனுராதாவுடன் கல கல பேட்டி!
Melattur Bhagavata Mela
Q

இந்தக் கலை இவ்வளவு வருடங்கள் தொடர்வதற்கு ஊராரின் பங்கு எப்படிப் பட்டது?

A

கண்டிப்பாக ஊர் மக்களின் ஒத்துழைப்பு போற்றத்தக்கது. இந்த கலையை வளர்ப்பதற்குப் பலபேர் தூண்கள் ஆக இருந்துள்ளனர். எவ்வளவு கலை விற்பன்னர்கள், ஜாம்பவான்கள்... அது ஒரு பெரிய லிஸ்டை தரும்.

குறிப்பாக பரதம் காசி நாதய்யா, வீரபத்ராய்யா போன்றவர்களுடன் வெங்கட்ராம சாஸ்திரி 12 நிருத்ய நாடகங்கள் எழுதி உள்ளார். அவர் தந்தைககு தாய் மொழி தெலுகு. அப்படியே அவர் மகன் வெங்கட்ராம் சாஸ்திரிகள் எழுதிய நாடகத்தை தான் இன்றும் பின் பற்றுகிறோம் . நாங்கள் கடந்த 84, வருடங்களாக இந்த மெலட்டுரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியின் முன்பாக அந்த 12 நாடகங்களை நடத்திக்கொண்டு வருகிறோம்.

இதையும் படியுங்கள்:
Interview: "சிம்ரன் ஜோடி என்றதும் ஷாக்கானீங்களா?" - சசிகுமார் open talk
Melattur Bhagavata Mela
Q

இந்த நாட்டிய நாடகங்களைப் பொறுத்து ஜீவன் என்றால் இசை தான். அந்த இசைக் கலைஞர்கள் பற்றி…

A

இங்கு இசைதான் ஜீவன். ஆரம்ப காலங்களில் பாகவத மேளாவின் குருவாகவும், சூத்திர தாரியாகவும் இருந்து வந்த ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி சர்மா, சங்கீத சாம்ராட் என்று அழைக்கப்படும் திருகருகாவூர் ஜி ஶ்ரீனிவாசராகவன், வீரராகவன் ஆகியோர் மிகவும் பக்தியோடு எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் பாகவத மேளாவின் இசையை பெரிய நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

அதற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக திருவையாறு சகோதரர்கள் எஸ் நரசிம்மன், முனைவர் எஸ் வெங்கடேசன் பின்பாட்டிலும் மற்றும் நாகை பிரபு ஶ்ரீராம் மிருதங்கதிலும், கண்ணன் பாலகிருஷ்ணன் சுத்த மத்தளம் கஞ்சிராவிலும், கோகுல கிருஷ்ணன் புல்லாங்குழலிலும், ஏ.வி துரை வயலினிலும் , ஒரு தெய்வார்ப்பணமாகத் தொண்டாற்றி வருகின்றனர்.

முக்கியமாக வெங்கட்ராம் சாஸ்திரிகள் தன் சாகித்தியங்களில்,பொதுவான ராககங்களை பயன்படுத்தினாலும் மிகவும் அரிதான வழக்கத்தில் இல்லாத ராகங்களையும் உபயோகப்படுத்தி உள்ளார். உதாரணத்துக்கு, மெலட்டூர் கண்டா , ஆகிரி போன்ற ராகங்கள். பாகவத மேளாவில் உபயோகப்படுத்தும் 'கண்டா' மெலட்டூர் கண்டா என்றே அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
Interview: "சிம்ரன் ஜோடி என்றதும் ஷாக்கானீங்களா?" - சசிகுமார் open talk
Melattur Bhagavata Mela
Q

மாறி வரும் இந்த நவீன உலகில் பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன இத்தகைய சூழலில் பாகவத மேளாவின் நிலைமை வரும் காலங்களில் எப்படி இருக்கும்?

A

(ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவர் மீண்டும் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு...) "இந்த கலை அழிந்து போகும் துர்பாக்கியம் நேரவே நேராது. இவ்வளவு தன்னம்பிக்கையுடன் நான் சொல்ல காரணம் அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்த கலையில் மிகுந்த ஈ டுப்பாடு காட்டத் தொடங்கி உள்ளார்கள். திருவையாறு சகோதரர்களின் வாரிசுகள் வெங்கடகிருஷ்ணன், வெங்கடசுப்ரமணியன் இருவரும் ஆறு வருடம் முன்பே இந்தக் கலைக்கு தயாராகி இப்போது நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்கள். இந்த இளைஞர்கள் இன்னும் சுமார் 25 வருடங்களாவது பாகவத மேளாவின் இசையினை முன்னெடுத்து செல்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

அது போல் நடன கலைஞர்களாக அனுபவம் வாய்ந்த ஶ்ரீ காந்த் நடராஜன் சந்திரமதி, சீதா, ருக்மணி போன்ற பெண் பாத்திரங்களையும், விஜய் மாதவன், அரவிந்த் போன்ற இளைஞர்கள் இந்த கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலும் பக்தியாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள்.

அது ஏன்? எட்டு வயது நிரம்பிய சுதர்சன் நாகை ஶ்ரீராம் அவர்களின் புதல்வன், கடந்த வருடம் நடந்த அரங்கேற்றத்திலயே தெலுகு வசனங்களை, ஏற்ற இறக்கத்துடன் பேசி நடித்தது எல்லோராலும் பாரட்டப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு கீர்த்தனைகளை ஆரோகண ஆவரோகனத்துடன் பாடுவது சாதாரண வேலை இல்லை. அதை அந்த பாலகன் திறம்பட செய்தான்.

இன்னும் சில இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது. நல்ல மாற்றம் தானே! அவர்களுக்கு இந்த கலையில் ஆர்வம் இருப்பது தான் காரணம். பின் எப்படி இந்த கலை அழியும் ?

இந்த கலையில் ஈடுபட்டு தொண்டு ஆற்ற வெளியூரிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தங்கும் இட வசதி, உணவு வசதி செய்து தரப்படுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை வெற்றிகரமாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் இன்னும் புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் இந்த கலை இன்னும் செழிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதைச் சொல்லும் போது குமாரின் கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது.

கலைகளை ஆதரிப்பது என்பது நம் பாரம்பரியத்தை பாதுகாப்பது. நம் வேர்களான பக்தியையும் மரபையும் பாதுகாப்பது. அப்படிப்பட்ட உத்தமமான காரியத்தில் குமாருடைய தாத்தா, அவர் அப்பா, அவர் சகோதரர் இப்போது குமார், அவருடைய இளைய சகோதரர் அண்ணா பையன்கள் பங்கேற்று நடத்தி வரும் புண்ணிய காரியத்தில் நாமும் பங்களிப்பது அவசியம் தானே! கலைகளின் பூமியான தஞ்சை மண்ணில் இந்த பாகவத மேளா தொடர நம் வாழ்த்துகளையும் பங்களிப்பையும் செய்தோம் என்னும் நிம்மதி கொள்ளலாம். இன்னும் நூற்றாண்டு இந்த கலை வளரும் என்கிற நம்பிக்கை நம் மனதிலும் தோன்றியது.

logo
Kalki Online
kalkionline.com