Healthy aging
Healthy aging

வயசானா வருந்தாதீங்க; உற்சாகப்படுங்க!

வயது ஏறும் போது, காலமானது மனிதர்களுக்கு உடல் , மனம்,மற்றும் சமூக ரீதியில் மாற்றங்களைத் தந்து, அவர்களை முதுமையில் ஒரு வட்டத்துக்குள் அடக்கி விடுகிறது.

உலகளவில், நவீன மருத்துவம், சிகிச்சை முறைகள், தொழில் நுட்பம் இவை ஒன்றிணைந்து, நீண்ட நாள் வாழ்வை சாத்தியமாக்குகின்றன. மருத்துவம் இவர்களைக் காப்பாற்றினாலும், வேலையிலிருந்து ஓய்வு , பொருளாதாரச் சூழ்நிலை, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு போன்ற பல சிக்கலான மனரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

உடலும் மனமும் நலமாக வைத்திருக்கும் விதத்தில் முதுமையை எதிர்கொள்வது எப்படி?

இந்த சிக்கலான கேள்விக்கு தீர்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர்.

வி.அலமேலு M.S.M.Ch;FRCS அவர்கள்

வி.அலமேலு M.S.M.Ch;FRCS
வி.அலமேலு M.S.M.Ch;FRCS

இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Q

முதுமை என்பது இயல்பாக வரக் கூடியது. ஆதை எதிர்கொள்வதில் குறிப்பாக இந்தியாவில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன டாக்டர்?

A

எந்தவொரு சமூகத்திற்கும் வயதானவர்கள் ஒரு மதிப்புமிக்க வளம். முதுமை என்பது வாய்ப்புகள் மற்றும் சவால்களுடன் கூடிய இயற்கையான நிகழ்வு.

தனிமை, குடும்பத்தினரின் புறக்கணிப்பு, வருமானமின்மை, மூப்பினால் வரும் உடல் பிரச்னைகள் உட்பட பலவற்றை இந்தியாவில் பெரும்பான்மையான முதியோர் சந்திக்க வேண்டியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2036 ம் ஆண்டில், 60 வயதைக் கடந்தவர் எண்ணிக்கை, மொத்த ஜனத்தொகையில் 15 சதவீதம் ஆகும் என்றும், 2050ம் ஆண்டில் இது இரட்டிப்பாகும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Healthy aging
Healthy aging
Q

வயது கூடும் போது உடலில் மூப்பு எவ்வாறு ஏற்படுகிறது டாக்டர்?

A

வயதாகும் போது உடலில் உள்ள செல்களின், உறுப்புக்களின் செயல்பாட்டுத் திறன் குறைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மூட்டு வலி, கோவிட்போன்ற நோய்களின் தாக்கம், தசைகளில் சோர்வு, கண்கள், காதுகளின் பிரச்னைகள், மனதளவில் உற்சாகமின்மை, சுய பச்சாத்தாபம், தனிமை, மன அழுத்தம், கட்டுப்பாடில்லாமல் சிறு விஷயங்களுக்கும் எரிச்சலடைதல், போன்றவற்றால் உடல் நல பாதிப்பு இவையெல்லாம், வழக்கமான முதியோர் பிரச்னைகள்.

இதனால் அவர்களது துடிப்பான சக்தி ( vitality) குறைந்து, அவர்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் சுமையாகி விடுகிறார்கள்.

Q

டாக்டர், இந்த வைடாலிடியை வயதானவர்கள் எப்படி தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது? ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது?

A

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, (World Health Organization)

வைடாலிடி என்னும் துடிப்பான உடல் நிலைக்கு ஆதாரமாக அவரவரின் தனிப்பட்ட சக்தி, மெடபாலிசம் என்னும் உறுப்புக்களின் இயக்கம் (metabolism), நரம்பு தசை மண்டலத்தின் இயக்கம் (neuromuscular function) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இருக்கின்றன.

டாக்டர் அப்துல் கலாம், டாக்டர். எம்.எஸ் சுவாமிநாதன், டாக்டர் வி சாந்தா போன்றவர் களெல்லாம், வயதானால் கூட தங்களின் துடிப்பான மன நிலையை சோர்வடைய விடாமல், இந்த சமூகத்துக்கு எவ்வளவு சேவை செய்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
Drug-GPT: மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI கருவி! மருத்துவத்துறையில் ஒரு புரட்சி!
Healthy aging
Healthy aging
Healthy aging
Q

வயது கூடும்போது, மூத்தோரும், அவர்களைச் சுற்றி உள்ளவர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன டாக்டர்?

A

குடும்பத்தினரும், இல்லம் வைத்துப் பராமரிப்பவர்களும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும், முதலில் வயதானவர்களின் வைடாலிடி குறைபாடு ஏற்படுவதை சரியான நேரத்தில் கவனிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் சோதனைகள் செய்து, சுவாசப்பைகள், இதயம், சிறுநீரகங்கள், சரியாக இயங்குகின்றனவா, ரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவுகள் கட்டுக்குள் இருக்கின்றனவா, எலும்பு மூட்டுக்களில் வலி ஏற்படுகிறதா, ஹார்மோன் பிரச்னை உள்ளதா, புற்று நோய் பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை யெல்லாம் சோதித்துக் கொள்வது வயதானோரின் உடல் நலத்திற்கு அவசியம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் முதியோர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான தேசியத் திட்டமானது ,உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அமைப்புகளின் வாயிலாக முதியோர்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார சேவையை வழங்குகின்றன.

கூட்டுக் குடும்பத்தின் சரிவு மற்றும் சமூக கட்டமைப்பின் முறிவு ஆகியவை முதியவர்களை தனிமையிலும் புறக்கணிப்பிலும் தள்ளுகிறது.

வயதானோரின் மன நிலைக்கு ஏற்ப நடத்தையைக் கண்காணித்து அதற்கேற்ற படி மற்றவர்கள் அவர்களுடன் பழக வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உடலின் சுறுசுறுப்பான செயல்பாடு, நல்ல உணவு அவசியம். புகையிலை, ஆல்கஹால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிலும் நேர்மறையான அணுகுமுறை வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. சமூக செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு, தங்களால் முடிந்த பணிகளைச் செய்யலாம்.

கோயில் போன்ற பொது இடங்களுக்குச் செல்வது, சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பொழுதுபோக்கு அம்சங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது இவையெல்லாம் வயதானாலும் துடிப்போடும் நேர்மறை எண்ணங்களோடும் வாழ வைக்கும்.

வீட்டிலேயே சோதித்துக் கொள்ளும் விதமாக,தெர்மாமீட்டர்(digital thermometer), ரத்த அழுத்தம் (blood pressure devices), ஆக்சிமீட்டர்கள்(finger pulse oximeter), எடை மிஷின்கள்,சர்க்கரை சோதனைகள் இவற்றைக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மாற்றங்கள் வரும் போது மருத்துவரை நாடலாம்.

கம்ப்யூட்டர்களில் பழகி, ஈ மெயில் அனுப்புவது புத்தகங்கள படிப்பது போன்றவற்றில் ஈடுபடுவது டென்ஷனைக் குறைக்கும்.

நடைப் பயிற்சி மற்றும் எளிதான உடற்பயிற்சிகளை வழக்கமாக செய்ய வேண்டும். பாட்டு, ஓவியம், கதை சொல்லுதல், போன்ற கலைகளிலும், ஆன்மீக விஷயங்களிலும் ஈடுபடுதல் மனதுக்கு உற்சாகம் தரும்.

தங்களுக்கு வயதாவதையும் ,அதன் எல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டு, குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி தரும் விதத்தில் நடந்து கொள்ளுவது மிக முக்கியம்.

அதே போல் சமூகத்திலும் நன்மைதரும், மகிழ்ச்சி தரும் வகையில் பழகும் போது, முதுமையாவது அதன் பாதிப்பாவது..

உங்கள் செயல்பாடுகளால் நீங்கள் இளைய தலைமுறைக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டாமா ? இப்படி நினைத்துக்கொள்ளுங்கள்.. உற்சாகம் தானாகவே பிறக்கும்…

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com