நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம் – இதை அவசியம் படியுங்க!

அய்யாகண்ணு - பிச்சையம்மாள் தம்பதியினர்
அய்யாகண்ணு - பிச்சையம்மாள் தம்பதியினர்
Published on

வாழ்க்கையில் கணவன் தன் மனைவிக்கும், மனைவி தன் கணவனுக்கும் தக்க தருணத்தில் காட்டும் அன்பு மிகப்பெரிய கருணையாக மாறிவிடும். அந்தக் கருணை அந்த நேரத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். அந்த நேரத்தில் இருவரில் யார் யாருக்கு உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு நிகர் அவரே. அதை அந்த கருணையை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. அப்படி  வாழ்க்கையில் சந்தித்த ஒரு சம்பவத்தை இந்தப் பதிவில் காணலாம். 

எனது அண்ணிக்கு வயது 67. அந்த வயதில் அவருக்கு மூளையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தார்கள். இடது பக்க மூளையில் அறுவை சிகிச்சை செய்தபொழுது வலது பக்க காலும், கையும் இழுத்துக்கொண்டு  நடக்க முடியாமல் செயல் இழந்துவிட்டது. அதன் பிறகு 43 நாட்கள் கோமா ஸ்டேஜ்க்கு சென்று 44ஆவது நாள் கண்விழித்துப் பார்த்தார். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால், கண் விழித்து பார்த்தாரே ஒழிய, நினைவுகள் சரியாகத் திரும்பவில்லை.  மருத்துவர்கள் என் அண்ணனிடம் “இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாரோ, அந்த கேசட்டுகளை எல்லாம் போட்டுக் காண்பியுங்கள். அப்பொழுது நினைவு வருகிறதா பார்க்கலாம்” என்று கூறி அனுப்பிவிட்டார்கள். 

பிச்சையம்மாள்
பிச்சையம்மாள்

அந்த ஆபரேஷனில் விழுந்த என் அண்ணிக்கு பேச்சு சுத்தமாகப் போய்விட்டது. தொண்டையில் இருந்து சளியை அகற்றுவதற்காக ஒரு ஓட்டை போட்டதால் இன்னும் பல பிரச்னைகள். ஆதலால் ஒரு மாவு பொருளை கொடுத்து அதை மட்டும் வெந்நீரில் கலந்து டியூப் வழியாக  செலுத்துமாறு மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். எனது அண்ணனும் வீட்டிற்கு அழைத்து வந்து அதேபோல் செய்தார். சில நாட்கள் கழித்து அந்த தொண்டையில் இருந்த ஓட்டையை அடைத்துவிட்டு, பிறகு நாம் சாப்பிடும் பொருட்களையே  ஊட்ட ஆரம்பித்தார்கள். மெதுவாக சாப்பிட  ஆரம்பித்தார் அண்ணி.

எனது அண்ணியை கவனித்துக்கொள்ள மூன்று முறை வேலைக்காரர்களை நியமித்தோம். ஆனால், அவர்களுக்கு டையாப்பர் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய பிடிக்காமல், சில நாட்கள் கழித்து ‘வீட்டிற்கு சென்று விட்டு வருகிறேன்’  என்று கூறி போனவர்கள் திரும்பவே இல்லை.

அதன் பிறகு எனது அண்ணனே ஒரு முடிவுக்கு வந்து, இவள் போல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தால் என்னை யாரு கவனித்திருக்க போகிறார்கள்? இவள்தானே! அப்போ அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நான்தானே அவளை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கூறி எல்லா வேலைகளையும் என் அண்ணனே செய்ய ஆரம்பித்தார். காலை ஏழு மணிக்கு கதவடைத்துவிட்டு அண்ணிக்கு டயாபர் மாத்தி, குளிக்க வைத்து, துணி மாற்றி தலைக்கு குளிக்க வைத்தால் ஈரம்  போக தலையை துவட்டி, குங்குமம் வைத்து படுக்கையில் கிடத்திவிட்டு பிறகு சமைத்து, அண்ணனே சாப்பாடும் ஊட்டி விடுவார். அண்ணி விரும்பி சாப்பிடுவார்கள். 

அதன்பிறகு அண்ணிக்கு நாம் பேசுவது புரிகிறதா? குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? என்பதை கவனிப்பதற்காக ஒரு முழு நீளத் தாளில் அவர்களின் கணவர், பெண்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், மகன், மருமகள் என்று அனைவரின் பெயரையும் எழுதி, ஒவ்வொருவராக நிற்கவைத்து அந்த தாளை அவரிடம் காண்பித்து இங்கே நிற்பவர் யார்? இங்கே அதில் எழுதி இருப்பதை பார்த்து கூறுங்கள் என்று கூறுவோம். அப்பொழுது நிற்பவரின் பெயரை கை வைத்துக் காட்டுவார். அதிலிருந்து அவருக்கு எல்லாரையும் நன்றாக அடையாளம் தெரிந்துகொள்ள முடிகிறது என்பதை புரிந்துகொண்டோம். 

இதற்கு இடையில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகளை கொடுத்து வந்தார் அண்ணன். கை வைத்தியமாக கருநொச்சியை ஒத்தடம் கொடுத்தால் சரியாகும் என்று சிலர் கூற, அதையும் அண்ணன் சலிக்காது செய்து பார்ப்பார். அப்படியாவது பேசி, எழுந்து உட்கார்ந்துவிட்டால் போதும் என்று. மூன்று வருடங்கள் எதிலும் முன்னேற்றம் இல்லை. எல்லாவற்றையும் படுக்கையில் போட்டே அண்ணன் செய்துவந்தார். செய்து செய்து அவருக்கும் வலது கை மூட்டு நழுவி விட்டது. அப்பொழுதும் கட்டுப்போட்டுக் கொண்டு அவரேதான் செய்தார். எனது அண்ணி பரிதாபமாக என் அண்ணனை பார்ப்பார். கண்ணீர் வடிப்பார். என்னால்தானே உங்களுக்கு இந்த வேதனை என்று கேட்பதாகத் தோன்றும் அந்தப் பார்வை. உங்களைக் கணவனாக அடைய நான் என்ன தவம் செய்தேனோ? என்று கூறுவதாக அந்தப் பார்வை உணர்த்தும். 

இதையும் படியுங்கள்:
உடலுக்கு வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை! ஏன் தெரியுமா?
அய்யாகண்ணு - பிச்சையம்மாள் தம்பதியினர்

மூன்று வருடங்கள் எனது அண்ணன் வீட்டைவிட்டு வெளியில் செல்லவே இல்லை. ஆதலால் மிகவும் நெருங்கிய உறவினர்கள் யாரும் வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. மேலும், அவரவர்களுக்கு பிடித்த தெய்வங்களை வணங்கி, கோயில்களுக்குச் சென்று அந்த திருநீறு, குங்குமம் என்று பிரசாதனங்களை கொண்டு வந்து அண்ணி நெற்றியில் பூசிவிடுவார்கள்.  அவரவர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் எனது அண்ணி கலந்துகொண்டிருந்தால், அந்த கேசட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து போட்டு அவருக்கு காண்பித்து சந்தோஷப்படுத்துவார்கள். அப்படியாவது பேசி விடமாட்டாரா? என்ற ஆதங்கம்,  நம்பிக்கை உறவினர்களுக்கு.  உறவினர்களின் உண்மையான உயர்ந்த அன்பை புரிந்துகொண்ட தருணம் அதுதான்.  உடல் நலமற்று இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்திய தருணம் அதுதான். 

அண்ணன், அண்ணியை கவனிப்பது, சமைப்பது, சாப்பாடு ஊட்டுவது, வீட்டு வேலைகளை தொடர்வது என்று இப்படியாகத்தான் இருந்தார். அண்ணனுக்கு நேரம் இருக்கும்போதெல்லாம் அண்ணியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டு, “நீ செய்யும் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ புளியோதரை செய்வாயே  எப்படி அருமையாக இருக்கும். அதை எல்லாம் எனக்கு இப்பொழுது எழுந்து செய்து கொடேன். ஏன் படுத்தே கிடக்கிறாய்? எழுந்திரு” என்று அண்ணியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆதுரமாகப் பேசுவார். அண்ணி சிறிது நேரம் சிரித்து விட்டு பின்பு அழுவார். 

இதையெல்லாம் கூட இருந்து பார்ப்பவர்களின் மனம் துடிதுடித்துப் போய்விடும். உறவுமுறையை சொல்லி அழைக்கக்கூட முடியாமல் கண்ணீர் மல்கி தொண்டை கரகரத்துப்போய்விடும். நாளாக நாளாக அனைவருக்கும் அந்த அன்பு ஒரு கருணை வடிவமாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மண்ணில் பிறந்த அனைவருக்கும் ஆளுக்கு ஒரு தேதி வைத்து படைத்த ஆண்டவன் அழைத்தால் போய்த்தானே ஆக வேண்டும். அப்படி ஒரு அழைப்பிதழ் என் அண்ணியார்க்கு வர கடைசியாக அவருக்கு தண்ணீர் ஊற்றும்பொழுது எனது அண்ணன் கதறி அழுது  "என் தேவதைக்கு நான்  கடைசி தண்ணீரை  ஊற்றி விட்டேன் " என்றபொழுது அண்ணிக்காக அழுதவர்கள் பாதி, அண்ணனின்  கடமை தவறாத, காதல் மறவாத, மனைவிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை அருவருப்புபடாமல் கடைசிவரை செய்ததை மனதில் நிறுத்தி அழுதவர்கள் மீதி. 

இது எங்கள் வீட்டில் நடந்த உண்மையான நிகழ்வு.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடல் உண்டு.
அப்போ கணவன் அமைவதெல்லாம் யார் கொடுத்த வரம்? 

குறிப்பு:

மூளையில் கட்டி என்று ஆபரேஷன் செய்வதற்கு முனையும் முன்பாக இரண்டு மூன்று டாக்டர்களிடம் மாற்றுக் கருத்து கேட்டுக்கொண்டு செய்வது நல்லது. 

65 வயதிற்கு மேல் ஆபரேஷன் செய்வதால் ஏற்படும் சாதக பாதகங்களை நன்றாக தெரிந்துகொண்டு ஆபரேஷன் செய்ய உறுதிமொழி கொடுப்பது மிக மிக அவசியம். 

நோயாளியை ஆரம்பக்கட்டத்தில் எங்கேயாவது அழைத்துச் சென்றால்  செருப்புகளை மாற்றி போட்டுக்கொள்வது ,சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, திடுக்கென்று  கிளம்பி எங்காவது தவறான இடத்திற்கு சென்று விடுவது போன்றவை இருந்தால் உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்து விடுவது நல்லது. 

இதையெல்லாம் நாங்கள் சரியான முறையில் விபரம் தெரியாமல் கவனிக்காமல் விட்டதால் பல பிரச்னைகளை மேற்கொள்ள வேண்டி வந்தது என்பதால் இதை எழுதுகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com