கபத்தைக் கரைக்கும் கற்பூரவல்லி புட்டு!

மூலிகைச் சமையல்!
கபத்தைக் கரைக்கும் கற்பூரவல்லி புட்டு!

பொதுவாக, சித்த மருத்துவத்தில் உள்ளுக்குச் சூடாகவும், வெளிக்கு மீதமான குளிராகவும். பயன்படுத்த வேண்டும் என்பது விதி. பனிக்கூழ் எனப்படும் ஐஸ்கிரிம் சாப்பிட்டதும் நமக்குச்  சளி பிடித்து விடுவது ஏன் என்றால் அதிக குளிர் நம் உள் உறுப்புகளை, ரத்த தாளங்களைச் சிறிது நேரம் ஸ்தம்பிக்கச் செய்து விடுகிறது. ஒருவர் உணவுக்குப் பின் குளிர்ந்த நீர் பருகினார் என்றால் உணவு செரிக்க வெகுநேரம் ஆகிவிடுகிறது. குளிர்ந்த நீரால் ரத்தக்குழாய்கள் சிறிதாக்கப்பட்டு விடுகிறது. நம் நாடு அதிக வெயிற் காலங்களைக் கொண்டது. அதிலும் தற்போது பூமி வெப்பமயமாகி வருகிறது. இந்தக் கால மாற்றத்தை, சீதோஷ்ண மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கலே நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

நாம் இந்தப் பகுதியில் எளிதாகக் கிடைக்கக்கூடிய எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மருந்துக்கு மட்டுமின்றி சலையலுக்கும் உகந்த மூலிகைகளைப் பற்றிப் தெரிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் கற்பூரவல்லியின் மருத்துவக் குணத்தைப் பற்றிப் பார்ப்போம்.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளாண்ட் போல் கற்பூரவல்லியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு செடி வகையைச் சார்ந்தது. மிகச் சிறந்த மருத்துவக் குணம் கொண்ட கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறு வென்ற சுவையுடன் இருக்கும். வாசனைமிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெது மெதுப்பாகவும் இருக்கும். கற்பூரவல்லி இலைகளை எடுத்துச் சுத்தம் செய்து காம்பு நீக்கி கரைத்து வைத்துள்ள சோளமாவில் (வழக்கமாக வாழைக்காய் சுடும் பஜ்ஜி போல) முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து, பொன்னிறமாக வந்ததும் எடுத்து, ஆறியபின் சாப்பிட்டால் சுவையாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும்.

கற்பூரவல்லி இலையின் சாற்றோடு கற்கண்டு சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மாந்தம், இருமல் உடனடியாக நிற்கும்.

கற்பூரவல்லி இலையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கேழ்வரகு மாவுடன் வேகவைத்து எடுத்து அதனுடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய்ச் சேர்த்து புட்டு செய்து உண்ணலாம். அதனாலும் சுவாச மண்டலம் சீராகும். குழந்தைகளுக்குப் பனிக்காலத்தில் சுவாச மண்டல பாதிப்புகளால் வரும் கபத்தைத் தடுக்க மிகச் சிறந்த மூலிகை உணவு இது.

தலைநீர் ஏற்றம், தலையில் நீர் பாய்தல், சுவாச மண்டலக் கோளாறுகள், சளி, இருமல், ஆஸ்துமா அத்தனையும் குணமாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com