

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள் (ஒரு சொற்றொடர் பழமொழியாகி உள்ளது).
'கயிதை' என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்பகால பருவத்தில் மென்மையாய் வளர்ந்து, அழகாய் பூத்து, கடைசியில் காயில் கடின விஷமாய், முள்ளாய் மாறும். அதுபோலத்தான் மாமியாரும் அன்போடு ஆரம்பத்தில் உறவாடி, பின்பு விரும்பத்தகாதவராக மாறுவார் என்பதே இப்பழமொழியின் உண்மையான அர்த்தம்.
காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி... எனும் பழமொழி எப்படி வந்தது தெரியுமா..?
கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான். இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக் காவலர்களை அவன் நம்பவில்லை.
கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன், "தயவுசெய்து கத்தி விடாதே" என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை.
கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.
இப்படித்தான் 'காரியம் ஆகணும்னா கழுதையானாலும் காலை பிடி' என்ற பழமொழி வந்தது..!!
(கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரர் கோவிலில் வெளிச்சுவரில், வசுதேவர் கழுதையின் காலில் விழும் சிற்பம் உள்ளது.)
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. இந்தப் பழமொழி எப்படி வந்தது தெரியுமா?
கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். 'கழு' என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச் சொல்வதற்குதான் 'கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் 'கழுதைக்கு' என்று ஆகி விட்டது.
கழுதை கெட்டால் குட்டிச் சுவர் எனும் பழமொழி:
தமிழில் மிகவும் பிரபலமான ஒரு பழமொழியாகும். இதன் உண்மையான அர்த்தம்: 'கழுதை' என்பது இங்கு கழுதை என்ற விலங்கைக் குறிக்கவில்லை. இது 'கழுது' (பாழடைந்த பகுதி) மற்றும் 'கெடுதல்' (தேய்மானம்) ஆகிய இரண்டு சொற்களின் திரிபு ஆகும். 'கழுது' என்றால் பாழ்நிலம் அல்லது வீணான இடம் என்று பொருள். 'கெட்டால்' என்றால் இங்கு 'பாழடைந்தால்' என்று பொருள்.
பழங்காலத்தில் விவசாய நிலங்களைச் சுற்றி பாதுகாப்புக்காகவும், எல்லைகளைக் குறிக்கவும் பெரிய சுவர்கள் எழுப்பப்பட்டன. அந்தச் சுவர்கள் பழுதடைந்து அல்லது பராமரிப்பின்றி பாழடைந்து போகும்போது, அது சிதைந்து குட்டிச்சுவராக மாறிவிடும். எனவே, 'பாழடைந்த நிலம் குட்டிச்சுவராக மாறும்' என்ற உண்மையான கருத்து காலப்போக்கில் மருவி 'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்' என்ற வழக்கில் நிலைத்துவிட்டது.