
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இப்பண்டிகை கூடுதல் சிறப்போடு கொண்டாடப்படுவது வழக்கம். அனைவரது இல்லங்களிலும் பாரம்பரிய இனிப்பு-கார வகைகள், ஆரோக்கியம் நிறைந்த குளிர் பானங்கள் என அனைத்தும் நிரம்பி வழிவதுண்டு. இனிப்பு வகைகளில் குறிப்பிடும்படியானது 'குஜியா'. இதனுள்ளே கோவா, நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை நிரப்பி டம்ப்ளிங் போல செய்து மேலே சக்கரைப் பாகை கொஞ்சமாக தெளித்து வைத்திருப்பர்.
இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'கோண்டா' என்ற ஊரில், இனிப்புகள் விற்கும் கடை ஒன்றில் அதன் உரிமையாளர் வித்யாசமான முறையில் சிந்தித்து, இந்தப் பண்டிகைக்காக ப்ரத்யேகமாக 'கோல்டன் குஜியா'க்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதன் உள்ளே ஸ்பெஷல் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் 24 காரட் தங்கம் மற்றும் வெள்ளியிலான மெல்லிய இழைகளை அடுக்கடுக்காக சேர்த்து இந்த 'கோல்டன் குஜியா' க்களை செய்துள்ளனர். அந்த தங்கம் மற்றும் வெள்ளி இழைகளும் உண்ணக்கூடியவைகளாக செய்யப்பட்டுள்ளன. இந்த இனிப்பின் விலை கிலோ ஐம்பதாயிரமாகவும் (Rs.50000/-) கோல்டன் குஜியா ஒன்றின் விலை ஆயிரத்து முன்னூறு (Rs.1300/-) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் விலையைக் கேட்ட வாடிக்கையாளர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் கடையின் மேனேஜரான திரு.சிவகாந்த் சதுர்வேதி, கோல்டன் குஜியாவின் உள்ளே நிரப்பப்பட்டுள்ள உயர் தரமான கோவா, ஸ்பெஷல் நட்ஸ், ஸ்பெஷல் உலர் பழங்கள் மற்றும் உண்ணக்கூடிய வகையில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி இழைகள் பற்றி விவரித்துள்ளார். கோல்டன் குஜியாவின் தோற்றமும் தங்கத்தினால் செய்யப்பட்டது போலவே ஜொலிக்கிறது.
புதுமையைப் புகுத்த ஒவ்வொருவரும் ரூம் போட்டு யோசிப்பாங்க போல!