அணையா நெருப்பு 'சுஜாதா'! சுஜாதாவின் நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் விருதோ பணமோ அல்ல... பின்ன?

மகளிர் தினம்: கவிதா முதல் சகுந்தலா தேவி வரையில்...
Actress Sujatha
Actress Sujatha
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்

நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்.

நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு

யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு..."

அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற 'கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்' பாடலில் வரும் முக்கியமான வரிகள். படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுஜாதா. அந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'நெருப்பு'. அவரின் பெயர் 'கவிதா', கவிதா ஒரு நெருப்பு. ஆனால் அணையும் நெருப்பு. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நெருப்பு.

மூத்த பெண்ணாக பிறந்தவள் படும் கஷ்டங்களை பாலச்சந்தர் தனது பாணியில் சொல்லி இருப்பார். 70 களில் வெளிவந்த படம். யாராவது தனக்கு தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணின் உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் சுஜாதா. மற்றவர்களுக்காகவே வாழ்வார். பேருந்தில் ஆரம்பிக்கும் கதை பேருந்திலே முடியும். உழைக்கும் பெண்கள் எல்லோரும் இப்படி இருப்பார்களா...?

இன்றைய சூழலுக்கு கவிதா எடுத்த முடிவு சரியா... தவறா... என்று பட்டிமன்றம் நடத்த தேவையில்லை. எங்காவது ஒரு சில கவிதாக்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

'கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை... இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...' இந்த பாடல் அனைவருக்குமான பாடலாய் இன்று வரையில் இருந்து கொண்டு இருக்கிறது.

கவிதா போல ஒரு சில பெண்களுக்கு கல்யாண மேடையில் கூட மாறி போய் நின்று விடும் சூழல் அமையும். தனக்குள் இருக்கும் நெருப்பு அணைய மழை போல ஒருவன் வருவான் என்ற நம்பிக்கையோடு 'அவள் ஒரு தொடர்கதை' படம் நிறைவு பெறும்.

அந்த கவிதா போன்ற பெண்களை பட்டிமன்ற தலைப்புக்குள் தயவுசெய்து கொண்டு வராதீர்கள்.

அவர்களுக்கான முடிவை, தீர்ப்பை நீங்கள் சொல்லாதீர்கள். 'என் மனம் என்னையன்றி யாருக்குத் தெரியும்...' அவள் பாடிக்கொண்டே இருக்கிறாள். அவளே பதிலும் சொல்கிறாள். 'கோடையில் ஒரு நாள் மழை வரக்கூடும். கோயில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்...' கோடை மழை என்பது இல்லாத ஒன்றில்லை. வரும்... வரும்... திடீரென்று ஒரு நாள் வந்து உஷ்ணத்தை தணிக்கும். வாடிய பயிர்களை துளிர்க்கச் செய்யும். புதிய வாழ்க்கை அமையும்.

இதையும் படியுங்கள்:
மன்னர்கள் மட்டும்தானா? உலகை மிரட்டிய 5 பேரரசிகள்!
Actress Sujatha

கவிதாவை நினைக்கும் போதெல்லாம் நம் கண்ணில் கவிதாவாக வந்து நிற்பவர் சுஜாதா அவர்கள் தான்.

ஒரு பணக்கார ஆணால் பாதிக்கப்பட்ட ராதாவின் விதியை மாற்றி எழுதிய வக்கீல் 'சகுந்தலா தேவி'யாகவும் அவரே நடித்திருப்பார். அனல் பறக்கும் கோர்ட் காட்சிகள் 'விதி' படத்தில் இருக்கும். ஆருர்தாஸ் வசனம் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

ராஜா என்ற பணக்கார இளைஞனால் (மோகன்) ராதா சீரழிக்கப்பட்டுவிடுவாள். ராஜாவின் தந்தையாக வக்கீல் டைகர் தயாநிதியாக ஜெய்சங்கர் நடித்திருப்பார், தன் மகனுக்காக அவர் வாதாடுவார்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் பெண்களை சீரழிப்பது அவர்கள் பரம்பரை வழக்கம். தன் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு டைகர் தயாநிதி தான் என்று உண்மையை சகுந்தலா தேவி கோர்டில் உடைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்துவார். அதுதான் தீர்ப்பு ராதாவுக்கு சாதகமாக அமைய காரணமாகும்.

இந்த சகுந்தலா தேவி கதாபாத்திரம் தன்னை ஈர்த்த காரணத்தினால் தான் சட்டம் படிக்க முடிவெடுத்ததாக சமீபத்தில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மஞ்சுளா அவர்கள் தனது பிரிவு உபசார விழாவில் தெரிவித்துள்ளார். சுஜாதா அவர்களின் நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.

மகளிர் தினத்தில் சுஜாதா அவர்களை நினைவில் நிறுத்த வேண்டும். சோதனைகளை சந்திக்கும் பெண்களுக்கு கவிதாவாகவும், சாதனை புரியும் பெண்களுக்கு பின்னால் சகுந்தலா தேவியாகவும் சுஜாதா வாழ்த்து கொண்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com