பொதுத் தேர்வுக்கு தயார் செய்து கொள்வது எப்படி?

பொதுத் தேர்வு...
பொதுத் தேர்வு...

மிழ் நாட்டில் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாதக் கடைசியில் பத்தாவது வகுப்பிற்கான தேர்வுகள் ஆரம்பமாகும். அடுத்த நிலைக்குச் செல்வதற்குத் தேவையான இந்த தேர்வுகள், சில மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

மாணவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்வை அணுகுங்கள். நீங்கள் வருடம் முழுவதும் படித்ததிலிருந்து சில கேள்விகள் என்ற எண்ணத்துடன் தேர்வை அணுகுங்கள். எந்தப் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எங்கு தவறு செய்கிறோம் என்பதை  உணரும் போது, அதை திருத்திக் கொள்வது எளிமை யாகிறது. எந்த படிப்புத் துறையில் நன்மதிப்பெண் எடுக்கவில்லையோ, அந்தத் துறையின் முன் வருடங்கள் நடந்த தேர்வுத் தாள்களை எடுத்துப் பலமுறை அந்தத் தாள்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதிப் பழகுங்கள்.

மூன்று மணி நேரத் தேர்வு என்றால், மூன்று மணி நேரம் தனியறையில் அமர்ந்து, புத்தகம் உதவி இல்லாமல் அந்தத் தேர்வுத் தாளை எழுத வேண்டும். பின்னர் விடையை சரி பார்க்க வேண்டும். என்ன தவறு செய்திருக்கிறோம் என்று கண்டறிந்து சரியாகச் செய்யும் வழிமுறையை அறிய வேண்டும். இப்படி ஐந்து அல்லது ஆறு வருடத் தேர்வுத் தாள்களை எழுதிப் பழகினால் தேர்வைப் பற்றிய பயம் விலகுவதுடன், நம்மால் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படும்.

ஒன்று, இரண்டு வருடம் பள்ளியில் படித்த எல்லாவற்றையும், தேர்வின் முதல் நாளில் படிப்பது இயலாது. ஆகவே, பாடத்தின் சிறு குறிப்புகள், விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் முக்கிய ஃபார்முலாக்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். படிக்கும் போது, நடுவில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பதோ, தொலைக்கட்சியில் சிறிது நேரம் நிகழ்ச்சியைப் பார்ப்பதோ நல்லது.

முடிந்த வரை துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தூங்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள் மன அமைதி, முழு கவனத்துடன் தேர்வை எதிர் கொள்ள உதவி செய்யும்.. தேவையற்ற மனக் குழப்பம், உங்கள் கவனத்தைச் சிதறச் செய்வதுடன், சிறிய தவறுகளுக்கு வழி வகுக்கும். அவசரமின்றி, நிதானமாகத் தேர்வுத் தாளை அணுகுங்கள்.

தேர்வு காலங்களில் மாணவனுக்கு ஏற்படுகின்ற மனக் குழப்பத்தை நீக்கி அவர்கள் மனதில் என்னால் முடியும் என்கிற நம்பிக்கையை வளர்க்கும் உயரிய பணியை அந்த மாணவனின் பெற்றோரும், மாணவனின் நன்மதிப்பைப் பெற்ற ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.

மாணவியர்...
மாணவியர்...deccanchronicle.com

முக்கியமாகப் பெற்றோர்களுக்கு - உங்கள் குழந்தைகளை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். “அவனால் அல்லது அவளால் முடியும் போது உன்னால் ஏன் முடியாது” என்று கேட்காதீர்கள். அவன் எங்கு தவறு செய்கிறான் என்பதை கண்டறிய முயற்சி மேற் கொள்ளுங்கள். தேர்வு என்பது வாழ்வின் எல்லை இல்லை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள் “இந்தத் தேர்வு தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” என்பது போல ஒரு போதும் சொல்லாதீர்கள். நீ வாழ்க்கையில் சந்திக்கப் போகிற பல தேர்வுகளில் இதுவும் ஒன்று என்று அவனுக்குப் புரிய வையுங்கள்.

ஒரு சிலர் தன்னுடைய மகன்/மகள் சகல கலா வல்லவன் ஆக வேண்டும் என்ற ஆசையில் வகுப்புப் பாடம் தவிர அவனுக்கு மற்ற மொழிகள், பாட்டு, நடனம் என்று பலவற்றில் ஈடு படுத்துகிறார்கள். தேர்வு காலங்களில் இதைத் தவிர்ப்பது நலம். ஒரு தேர்வு முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து அன்று நடந்த தேர்வுத் தாளை அலசுவதில் அவனுடைய நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.  அன்றையத் தேர்வை எப்படி எழுதியிருந்தாலும், அதைப் பற்றிய கவலையைக் களைந்து, அடுத்த நாள் தேர்விற்கு தயார் செய்து கொள்வது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
மயக்குதே மாஹே… சிறப்புகள் அறிவோம்!
பொதுத் தேர்வு...

தேர்வின் மீதுள்ள அர்த்தமற்ற அச்சம் குறைந்தால், மாணவனுடைய மன அழுத்தம் குறையும். ஒரு பொருளைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ நன்கு அறியாத நிலையில் அதைப் பற்றிய அச்சம் ஏற்படுகிறது. இதைப் போலத்தான் தேர்வும். மனதிலுள்ள அச்சத்தைப் போக்கிக் கொள்ள மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உதவ வேண்டும்.

நினைவிருக்கட்டும். தேர்வு என்பது பூதமல்ல. எதுவும் கடினமில்லை. அதற்குத் தகுந்த முயற்சி மேற்கொண்டால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com