“டார்லிங் டார்லிங் டார்லிங்...” அலைபேசியில் பாட்டுக்கேட்டபடி இந்திர லோகத்தில் நுழைந்தார் நாரதர்.
இந்திரனுக்கு ஒரே ஷாக்!
“என்னவோய் நாராயணா நாராயணா என்று சொன்ன வாயால் இன்று டிங்கிலீஷில் பாடிக்கிட்டு வரீர்?” இந்திரன் வியப்பாய் கேட்க,
“நானா பாடறேன்?“ நாரதர் சிரித்தார்.
“பின்னே?”
“அலைபேசி பாடுது. டெளன்லோடு பண்ணியிருக்கேன்.” பெருமையாய் சொன்னார் நாரதர்.
“அலைபேசி, டெளன்லோடு ஒன்னும் புரியலை. ஏன் உன் தம்பூரா இவ்வளவு சின்னதா இருக்கு?“
“இதுதான் அலைபேசி மன்னா. செல்ஃபோன் என்றும் சொல்வார்கள். 5ஜி. தம்பூரா ஓல்ட் மாடல், டிரான்ஸிட்டுக்கு கஷ்டமாயிருக்குனு மாத்திட்டேன்.” பெருமையாய் சொன்னார்
“அலைபேசி என்றால்...?”
“காற்றில் பேசுவது. 'நாராயணா நாராயணா' என்று என் குரலை ரெகாட் பண்ணிட்டேன். எனக்கும் வயசாகுதுல்லே. குரல் பிசிறடிக்குது.”
“நானும் காற்றில்தான் பேசுகிறேன். அலைபேசி இல்லாமலே!” இந்திரன் மடக்க,
“இந்திரா, நீ மங்குனி மன்னன்னு அடிக்கடி தெரியனுமா? நீ பேசறது சமயத்தில் பக்கதிலிருக்கிற எனக்கே கேட்காது. அலைபேசி மூலம் உலகம் முழுவதும் யார் வேணா யார் கூட வேணா பேசலாம். கடலை போடலாம், பொய் சொல்லலாம், மெஸேஜ் அனுப்பலாம், ஃபோட்டோ போடலாம், ஸ்டேட்டஸ் போடலாம், பாட்டு பாடலாம், கூகுலில் என்ன வேணா கேட்டு தெரிஞ்சுக்கலாம், எதை வேணா டவுன் லோடு பண்ணலாம்...”
“அப்படியா?”
“என்ன நொப்படியா? இப்ப கூகுளில் உன்னைப்பற்றி கேட்கவா?”
“போடு போடு“ இந்திரன் ஆர்வமாய் கேட்க, நாரதர் இந்திரன் என்று டைப் பண்ண “இந்திர லோக மன்னன், ஏழாங்கிளாஸ் அட்டெம்ப்ட், சாப்பாட்டு ராமன், சோம்பேறி, முட்டாள், அரண்மணையே மூடர் கூடம் ஜொள் பேர்வழி...”
“நிறுத்தும். அலைபேசியை உடைப்பேன். என்னைப்பற்றி நல்லதாக சொல்ல ஒன்னுமில்லையா?” கோபததில் முகம் சிவக்க கேட்டான்.
“அதான் மன்னன்னு சொல்லிச்சே அதுவே அதிகம். கூகுல் உண்மையைத்தான் சொல்லும். பாட்டுப்பாடி டேன்ஸ் ஆடேன். இப்ப இன்ஸ்டாவில் போடலாம். உலகம் முழுக்க பார்க்கும். லைக்ஸ் அள்ளும்,” ஆசையை கிளப்ப,
“எங்கே ஒரு மாடல் காட்டு” இந்திரன் ஆவலாய் கேட்க, ஒரு பெண் “டாடி மம்மி வீட்டிலில்லை” என்று அரைகுறை டிரஸ்ஸில் கோரமாய் பாடியபடி டான்ஸ் ஆட, “ச்சீச்சீ மூடு, மூடு” என்று அலறிய இந்திரன் “என்ன இது? அசிங்கமா ஆடறா, பாடறா”
“இப்படித்தான் அலைபேசியை யூஸ் பண்ணனும். இப்ப நீ ஆடேன்” நாரதர் தட்டிவிட,
“ரகிட ரகிட” என்று இந்திரன் வெறித்தனமாக ஆட, "இந்திரா, இது என்ன வெறித்தனம். நான் இதை எதிர்பார்க்கலை. எல்லாம் இதோட ராசி. கண்றாவி” என தலையிலடித்துக்கொண்டார்.
“யோவ் நாரதரே நல்லாத்தானிருக்கு இந்திர லோகத்திலும் செல்ஃபோனை கொண்டு வந்துடுவோம்.”
“நீயாத்தான் கேட்கறே. நான் சிபாரி்சு பண்ணலை” என்று சொல்லி 2லட்சம் செல்ஃபோன்களை வரவழைத்துத் தந்தார் நாரதர்.
இந்திர லோக ரேஷன் கடை வாசலில் பெரிய க்யூ. மாஸ்க் அணிந்து அழகான அளவான சமூக இடைவெளியில்.
உணவு கார்டு இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு செல்ஃபோன் இலவசம். ஒரே வாரத்தில் ஆளுக்கொரு செல்ஃபோன், அன்லிமிடெட் நெட் ஃப்ரீ. பத்தே நாளில் மந்திரி சபையில் ஒரே கூச்சல் குழப்பம்.
இந்திரனால் சமாளிக்க முடியவில்லை
“யாரைக்கேட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு செல்ஃபோன் இலவசமாய் தந்தீர்கள்? ஒருவரும் வேலைக்கு வருவதேயில்லை. பல வீடுகளில் பெண்கள் சமைப்பதேயில்லை. ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர். ஆன்லைனில் லீவு கேட்கறான் என் தேரோட்டி. குதிரைக்குநோவுனு குதிரையோட பேக்-சைடு ஃபோட்டோவோ்ட ஸ்டேட்டஸ் போடறான்” - நிதி மந்திரி அழ,
“ஆன்லைன் சூதாட்டம், ப்ளூவேல், பப்ஜினு ஆபத்தான விளையாட்டு, பெருகிப்போச்சு. பூலோகத்துக்கு ஃபோன் போட்டு நம்ம ஊர் எலெக்ஷனுக்கு பிரசாரத்துக்கு நடிகைகளையும், அரசியல்வாதிகளையும் கூப்பிட்டு கூத்தடிக்கிறான். சுரபானக்கடைகள் ஃபுல், இது பூலோகத்தை விட கேவலமாயிடும் போலிருக்கு. ஒரு சன்யாசி இன்ஸ்ட்ராகிராமில் நடிகையோட ஆடறதைப்பாரு...” - உள்துறை மந்திரி
“ஆமா நெட்டில் உன்னைப்.பத்தி கேவலமா திட்டி ஃபோட்டோ போட்டிருக்கு. பிரசாரத்துக்கு வந்த நடிகையை இந்திராணிக்கு போட்டியா இங்கேயே தங்க வைச்சிட்டியாம்.”
“எல்லா தொழிலும் படுத்துபோச்சு. பேசிக்கொண்டிருக்கும்போதே மந்திரிக்கு வாட்ஸ்அப்பில் மெஸேஜ். இந்திரன் ஒரு அரசியல்வாதிக்கு லஞ்சம் தரும் ஃபோட்டோவோடு. பாத்தீங்களா உங்க லட்சணத்தை.“
“யார்ரா அது ராஜாங்க ரகசியத்தை வெளியே விட்டது?” இந்திரன் கொதிக்க, சபையே கேவலமாய் இந்திரனை பார்த்தது.
“இப்ப புண்ணியம் பண்ணினவங்க வர இந்திரலோகம் பாவ லோகமாயிடிச்சு. அதனாலே சிவபெருமான் நரகத்தின் இரண்டாவது ப்ளாக்கா இந்திரலோகத்தை மாத்திட்டார். இனிமே நரகலோக சட்டமே இங்கும் நடைமுறைக்கு வருகிறது”னு அசரிரி ஒலிக்க,
அதே சமயம் இந்திரலோகத்தை நரகலோகமாக மாத்தறேன்னு எமனிடம் சபதம் போட்ட நாரதர், “எப்படி?” என்று சிரிக்க “இப்ப புரியுது இந்த சின்ன செல்ஃபோன் பெட்டி ஒழுங்கா யூஸ் பண்ணலைனா இருக்கிற இடத்தை நரகமா மாத்திடும்னு!" என்றான் எமன்.