ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

working women...
working women...Image credit - indiaspend.com

-மரிய சாரா

டிகர் RJ பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம். படம் முழுதுமே நன்றாக இருந்தது என்பதைவிட, அதில் ஒரு வசனம் வரும். "உனக்கு என்ன வரம் வேணும் சொல்லு" என்று ஹீரோ அவரின் தங்கையிடம் கேட்கும்போது, "உடம்பெல்லாம் ரொம்ப tired-ஆ இருக்கு, ஒரு நாள் லீவு கிடைக்குமா?" என அந்தப் பெண் சொல்வது என்பதுதான் இங்கு பல பெண்களின் நிலை.

பெண் வீட்டில் இருந்தாலும் சரி, வேலைக்குச் சென்றாலும் சரி, வீட்டு வேலைகளை பொதுவாகவே பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது நமது நிலை. அது மட்டுமா? பெண்களுக்கும் பேராசைகள் உண்டு என்று பலரும் சாடுவதுண்டு.

ஆனால், இங்கு பல பெண்களின் மனதில் இருக்கும் பேராசைகள் என்ன என்று கேட்டுப்பார்த்தால், "அட இவ்வளவுதானா நான்கூட ஏதோ பெருசா இருக்குமோன்னு நெனச்சேன்" என சொல்லவைக்கும். ஆனால், உண்மையில் நாம் யாருமே அதைப்பற்றி பெரிதாக யோசிப்பதும் இல்லை, தெரிந்துகொள்ள முயற்சிப்பதும் இல்லை.

ஒரே ஒரு நாள் மட்டும் எனக்காக, நானாக, எனதாக, வாழவேண்டும், நிம்மதியாய் உறங்கவேண்டும், சிரித்து மகிழ வேண்டும். தனியாய் நடக்கவேண்டும், பாட வேண்டும், மெய்மறந்து ஆட வேண்டும், தனிமை வேண்டும், சாய்த்துக்கொள்ள தோள்கள் வேண்டும், படுத்து உறங்க மடி வேண்டும்... இதுபோல மிக எளிதான ஆசைகளே இங்கு பல பெண்களின் பேராசைகளாக இருக்கின்றன.

நித்தமும் கணவன், பெற்றோர், பிள்ளைகள், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் என அடுத்தவர் நலன், அடுத்தவர் ஆசை, அடுத்தவர் தேவை என்றே யோசித்து வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுக்கு வானளாவியா ஆசைகளுக்கு எங்கு நேரம் இருக்கும். சொல்லப்போனால், பெரிய பெரிய ஆசைகளும் இந்த உலகில் உள்ளன என்பதை அறியாத பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்?

இதையும் படியுங்கள்:
ஹை ஹீல்ஸ் செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
working women...

சாதனைகள் புரியவேண்டும், வெற்றியை அடைய வேண்டும், நல்ல நிலையில் வாழ வேண்டும் என்றெல்லாம் ஆண்களைப் போலவே கனவு கண்டு அதை சாதித்தும் காட்டும் சில பெண்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். உண்மைதான். இருந்தாலும் இவ்வளவுதானா, என சர்வசாதாரணமாக நாம் நினைக்கும் பல விஷயங்கள் இன்றும் பல பெண்களின் நிறைவேறாத பேராசைகளாவே இருக்கின்றன. இது கசக்கும் உண்மை!

ஓயாமல் உழைக்கும் அந்தப் பெண்ணை பார்த்து, "வீட்ல சும்மாதானே இருக்க என்று சொல்வதை நிறுத்திக் கொண்டு, இன்னிக்கு நீ ஏதும் செய்ய வேணாம்; freeஆ இரு. இல்லன்னா உனக்கு என்ன வேணுமோ அத செஞ்சிக்கோ” என சொல்லிப்பாருங்கள். அவர்களின் முகத்தில் நீங்கள் அப்போது பார்க்கலாம் உண்மையான மகிழ்ச்சியை.

கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்கமுடியாத விலை மதிக்கமுடியாத பேராசைகள் என அவர்களுக்குத் தோன்றுபவை எல்லாம் நமக்கு அற்பமாய் தோன்றுபவைதான் என்று அந்த நொடியில் நீங்கள் உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com