அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே...

விருந்து...
விருந்து...Image credit - the hindu
Published on

னித மனம் சேகரித்த மிகப்பெரிய பொக்கிஷங்களில் நினைவுகளும் ஒன்று! ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஓராயிரம் நினைவுகள் பொக்கிஷங்களாய் புதைந்து கிடக்கின்றன, ஆனால் அதனை புரட்டி பார்க்க கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. 

இரண்டு நாட்களுக்கு முன்பு என் மகனுக்கு பள்ளியில் சாப்பிடுவதற்காக உணவு பண்டமாக  மிச்சர்ரும் கடலை மிட்டாயும் கொடுத்து விட்டேன். அன்று அதை பள்ளியில் சாப்பிட்டு வந்தவன், மறுநாள் அதே தின்பண்டத்தை கொடுக்க முயலும்போது நேற்றும் இதேதான் கொடுத்து விட்டீர்கள், இன்றும் இதே கொடுக்கிறீர்கள் போரடிக்கிறது என்றான். ரெண்டு நாள் தானடா கொடுத்து விடுகிறேன், என்று கூறியபோது எனக்கு வேண்டாம், ஒரே மாதிரி கொடுத்தா சாப்பிட போரடிக்குது என்றான். வாங்குவதோ 100 மிக்சரோ 200 மிக்சரோ, அதைக் கூட அவர்களால் முழுமையாக  சாப்பிட முடியவில்லை, மீதி இருப்பவை எல்லாம் பெரும்பாலும் வீணாகத்தான் போக வேண்டிய சூழ்நிலை.

இதை அப்படியே 20 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் கவலையும் ஒரு பக்கம் சந்தோஷமும் மனதில் அருவியாய் ஆர்ப்பரித்து கொட்டுகிறது! 80 மற்றும் 90 கால கட்டங்களில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் பொக்கிஷமான வாழ்க்கை. எங்களுடைய அதிகபட்ச தின்பண்டமே  அன்றைக்கு விளைந்த நிலக்கடலை, மக்காச்சோளம், மாம்பழம், கொய்யாப்பழம், சீதாப்பழம், அச்சம் பழம், புளிச்சி பழம், கூட்டா பழம், பலாப்பழம், கொடுக்காப்புளி இவையே. அந்தந்த பருவத்தில் கிடைத்த பழங்களை எல்லாம் மனசார உண்டு மகிழ்ந்தோம். இந்த பருவம் இல்லாத காலங்களில் காடுகளில் விளைந்த பாசிப்பயிறும், கானப் பயிரும், அரிசியையும் வறுத்து, அதனை தின்பண்டங்களாக உண்ட காலங்களும் உண்டு. 

அப்போதெல்லாம் பெரும்பாலும் பேக்கரிகள் இல்லாத காலத்தால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள்தான் அதிகம் இருக்கும். இன்று இருப்பது போல் 100, 200 என்ற அளவெல்லாம் பெரும்பாலும் இருக்காது. குறைந்தது கால் கிலோ அளவில் தான் வாங்க முடியும். அப்படி ஒரே தின்பண்டத்தை 10 நாட்கள், 15 நாட்கள் வைத்து தின்ற காலமெல்லாம் உண்டு. ஆனால் இன்றோ ஒருவேளை உண்ட சாப்பாட்டை, மறுவேளைக்கு உண்ண மறுக்கிறார்கள் குழந்தைகள். 

அப்பொழுதெல்லாம் கிராமங்களில் யார் வீட்டிலாவது, விசேஷம், கல்யாணம் என்றால் யார் வீடுகளிலும் பெரும்பாலும் சமையலே செய்ய மாட்டார்கள். குறைந்தது இரண்டு வேளை சாப்பாடாவது அந்த விசேஷ வீடுகளிலே முடித்துக் கொள்வார்கள். நாங்கள் சாப்பிட்ட கல்யாண சாப்பாட்டின் ருசி இன்றும் கண் முன் வந்து போகிறது. சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், கோஸ் பொரியல், பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு, அப்பளம், பாயாசம் இதுதான் அன்றைய காலகட்டங்களில் நாம் உண்ட மிகப்பெரிய விருந்தாக இருக்கும். 

ஆனால் இன்றெல்லாம் கல்யாணங்களுக்கு செல்லும்போது பலவிதமான உணவுகளை சமைக்கிறார்கள், அவற்றின்  பெயரைக் கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை, அவ்வளவு வகைகள். அவ்வளவையும் நாம் மனசார சாப்பிடுகிறோமா என்று கேட்டால் இல்லை. எல்லாவற்றையும் ருசி பார்க்கிறோம், அவ்வளவுதான்.

இதையும் படியுங்கள்:
இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!
விருந்து...

இன்றைக்கு குதிரை வைத்து ஆடம்பரமாக வலம் வரும் திருமண ஜோடிகளை விட அன்றைய காலகட்டங்களில் திருமணம் செய்த தம்பதிகள் அதிகமாக பார்க்கப் பட்டார்கள், ரசிக்கப்பட்டார்கள். இன்று பணத்தைக் கொட்டிக் கொடுத்தும் அந்த இன்பத்தை எந்த அளவுக்கு அனுபவிக்கிறார்கள் என்பது சந்தேகமே.

அப்படியானால் நாம் எதை பெற்றிருக்கிறோம்  நம் குழந்தைகள் எதை இழந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் 80 மற்றும் 90 காலகட்டங்களில் வாழ்ந்த நாம் அனைவரும் பொக்கிஷமான நினைவுகளை வைத்திருக்கிறோம். நம் அனைவரிடமும் பக்கம் பக்கமாக  எழுதுவதற்கு பல கதைகள் உள்ளன. ஆனால் நம்முடைய பிள்ளைகளோ, வீட்டிற்கு முன்பே பேருந்தில் ஏறி பள்ளியை சென்றடையும் வசதி வாய்ப்பு வந்தும் கூட அவர்களிடம் பெரிதாக சொல்லிக் கொள்வதற்கு பொக்கிஷமான நினைவுகள் இல்லை! 

பள்ளிக்கால நினைவுகளே...
பள்ளிக்கால நினைவுகளே....Image credit - flickr.com

நாம் சேகரித்த நினைவுகளிலே மிகவும் அற்புதமானவை பள்ளிக்கால நினைவுகளே. நாம் கற்றலில் எத்தகைய நிலையில் இருந்தாலும் நம்மால் அன்றைய சூழலில் வாழ்வதற்கான பொருளாதாரத்தை ஏதோ ஒரு விதத்தில் ஈட்டிக் கொள்ள முடியும். அதனால் நாம் பந்தய குதிரைகளாக நினைத்து விரட்டப்படவில்லை. ஆனால் நிலைமை இன்று அப்படி இல்லை. எதற்காக படிக்கிறோம், படித்து என்ன செய்யப் போகிறோம், எப்படி வாழப் போகிறோம், இந்த ஓட்டம் எதை நோக்கி நகர்கிறது என்ற பிடிப்பே இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இயந்திர கதியாய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் நம் குழந்தைகள். 

வாழ்க்கையின் அழகு பெரிதாய் சாதிப்பதில் இல்லை, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வதில்தான் உள்ளது. நிதானமாகவே பயணிக்க கற்றுக் கொடுங்கள். நம் வாழ்க்கை பாதையை ஆமை வேகத்தில் நடந்தாலும் நாம்தான் நம் எல்லையை அடைய வேண்டுமே தவிர, அந்தப் பாதையில் நிச்சயம் இன்னொருவர் நுழைய முடியாது. மனித வாழ்க்கை மிகவும் அற்புதமானது, அனுபவித்து வாழ கற்றுக் கொடுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com