
‘திருமணம்’ என்பது உரிய வயதுடைய ஆண், பெண் இருவருக்கும் இடையே சமூக ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம். ஆனால் பல இடங்களில் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளரின் கட்டாயத்தாலோ, பணத்திற்காகவோ ஆண், பெண் இருவரும் மனம் விரும்பியோ இளவயதிலேயே திருமணம் செய்கிறார்கள். 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடக்கும் திருமணத்தை குழந்தை திருமணம் என்கிறோம். இது சட்டப்படி குற்றமாகும்.
இந்தியா உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ச்சியடைந்து வந்தாலும் பழமையான சம்பிரதாயங்களால் பின்னோக்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும். கிராமப்புறங்களிலும், வடமாநிலங்களிலும் இத்தகைய கொடுமைகள் அதிகளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குழந்தை திருமணம் பெரும்பாலும் ஏழை பெண்களை குறிவைத்தே அரங்கேறுகிறது.
பணம் கொடுத்து ஏழை சிறுமிகளை திருமணம் செய்து வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று விற்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும் பயன்படுத்தும் அவலங்களும் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் பல ஏழைக்குடும்பங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வயது அதிகமானவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
நமது நாட்டில் குழந்தை திருமண தடை சட்டம் 2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும், சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது என்பது இன்றும் கூட சவாலாகவே உள்ளது.
இந்நிலையில் குழந்தை திருமணங்களை தடுத்து, அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தர மாவட்டந்தோறும் குழந்தை திருமண தடுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தை திருமணம் நிகழும் முன்போ, நிகழும் பொழுதோ, நிகழ்ந்த பின்னரோ பாதிக்கப்பட்ட குழந்தையின் தரப்பில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பும், அதிகாரமும், குழந்தை திருமண தடுப்பு அதிகாரிக்கு உள்ளது.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் சட்டரீதியான உதவி உள்பட எல்லாவிதமான உதவி மற்றும் ஆதரவு அளிக்கவும் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
கட்டாயப்படுத்தி பெண் குழந்தையை திருமணம் செய்ய முற்பட்டால் அந்த குற்றத்தை தடுப்பதற்காகக் கைது செய்யும் அதிகாரமும் காவல் துறையினருக்கு உண்டு.
குழந்தை திருமணத்திற்காக கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ அல்லது அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து என தெரிய வந்தாலோ, உடனடியாக அந்த குழந்தையை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதுவரை அந்த குழந்தையை அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கலாம்.
குழந்தையை மீட்ட பின் மருத்துவ உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை, மறுவாழ்வு, ஆதரவு போன்ற எல்லாவிதமான உதவிகளையும் ஆதரவையும் அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது இவை இரண்டும் வழங்கப்படும்.
இங்கு இந்த சிறுமியின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. குழந்தை திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் (படிப்பு, வேலை, பொருளாதாரம்) அழிக்கிறது.
குழந்தை திருமணம் உலக அளவில் பிரச்சினையாக இருந்தாலும், குறிப்பாக ஆப்பிாிக்காவிலும், தெற்கு ஆசியாவிலும் இது முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப காலங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறைந்து வந்தாலும் கூட, கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், மிகவும் வறுமையில் வாடும் மக்களிடையேயும் இது பரவலாக உள்ளது.
குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட, சில சமூகங்களில் இந்த நடைமுறை இப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவிலேயே பீகாரின் வடகிழக்கு பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகம் (68 சதவீதம்) நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசு பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் குழந்தை திருமணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்ததே ஒழிய தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
குழந்தை திருமணம் செய்து வைப்பதால் பெண் குழந்தைகளுக்கு படிப்பதற்கான வாய்ப்பும் நின்று போவதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்கள் சிறிய வயதிலேயே கர்ப்பம் அடைவதால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அத்துடன் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால் அவர்கள் எந்தவிதமான ஆளுமையும் இல்லாத நிலையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைத்தல், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பெண் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு ஏற்படுத்தியிருந்தாலும் குழந்தை திருமணத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.