
திருமண வாழ்க்கையில் மகப்பேறு மகத்தான ஒன்றாகும். அதை எதிர்கொள்வது என்பது பெண்களுக்கு மறுபிறவி எடுத்து வந்தாற் போல இருக்கும்.
இந்தியாவில் திருமணம் ஆனவுடன் “என்ன விசேஷம் இல்லையா?” என்ற கேள்வி பதில் சொல்லி மாளாது. ஆனால் அதை நிறைய பேர் தவிர்க்கிறார்கள். இன்றைய இளைய சமுதாயமும் மகப்பேறினை தாங்கள் விரும்பியவாறு தள்ளி போடுகிறார்கள். ஆனால் என்றாவது ஒரு நாள் மகப்பேறு சுமை வந்து தானே தீரும்.
தமிழில் ஒரு சொலவடை உண்டு - “வயிற்றுப்பிள்ளை வந்தவுடன் கழுத்து பிள்ளையை மறந்து விடுவாள்” பெண்!
இதன் விளக்கம். ஒரு பெண் தாயானவுடன் கணவனை விட குழந்தைக்குத்தான் முன்னுரிமை தருகிறாள். தாய்மையின் சிகரமாக விளங்குகிறாள். ஆகையால் முன்னோர்கள் தாயிற் சிறந்த கோயில் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.
மகப்பேறு பற்றி திருவள்ளுவர் தமது குறளில்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
தொல்காப்பியம் மக்கட்பேறு பற்றி பின்வருவனவற்றை விளக்குகிறது.
பெற்றோருக்கு கிடைக்கும் பேறுகளில் சிறந்தது மக்கட்பேறு.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது அவசியம்.
அறிவுள்ள, பண்புள்ள குழந்தைகளைப் பெறுவது, அவர்களை எப்படி வளர்ப்பது முக்கியம்.
சமுதாயத்திற்கு நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெற்றோரின் கடமை.
இந்திய பெண்கள் மகப்பேறு மன அழுத்தத்தினை மிகவும் அற்புதமாக கையாண்டு அதிலிருந்து விடுபடுவது இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பாகும்.
பிறந்த குழந்தையை தொடுதலில் இருக்கும் சுகமே அலாதியாக இருக்கும். மென்மையான ரோஜா மலரை தொடுவது போல தொட்டு மகிழ்வார்கள் பெற்றோர்கள். அதே போல குழந்தைகளின் குரல் கேட்பது காதுகளுக்கு இனிமை தரும்.
இப்படிப்பட்ட மழலைப்பேறு மன அழுத்தத்தை மகளிர் எதிர்கொள்வது என்பது மிகவும் போற்றி வணங்க வேண்டிய ஒன்றாகும்.
அது “சுகமான சுமையாக” வே கருதுகிறார்கள். ஒரு பெண் குழந்தை பெற்றவுடன் குழந்தையின் பிரசவத்திற்கு பின் குழந்தையின் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே எவ்வளவு வலி இருந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மகப்பேறு காலங்களில் கணவர்கள் மிகவும் வாஞ்சையாகவும், ஆறுதலாகவும் நடந்து கொள்வதால், பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்களது தாயார் வீட்டிற்கு சென்று ஓய்வில் இருக்கிறார்கள். அவ்வப்பொழுது மருத்துவரின் ஆலோசனையை பெறுகிறார்கள்.
தியானம் மற்றும் சிறிய அளவிலான மூச்சுப் பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். மகப்பேறு முந்தைய காலத்தில் உரிய மருத்துவமனைகளில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு சென்று மனத்தெளிவு அடைகிறார்கள். ஆகையால் மகப்பேறு வலியை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்து சத்துள்ள உணவு மற்றும் பானங்களை உட்கொள்கிறார்கள். ஒரு சிலர் சிறிய அளவிலான யோகா பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
முறையான தூக்கம் மகப்பேறு உதவிகரமாக அமைகிறது.
தொலைக்காட்சிகளில் வரும் எதிர்மறையான கருத்துக்கள் அடங்கிய சீரியல்களை தவிர்க்கிறார்கள்.
மனநல மற்றும் உடல் நல மருத்துவ ஆலோசகர்களை அவ்வப்பொழுது சந்தித்து அறிவுரைகளைப் பெற்று அதன்படி நடக்கிறார்கள்.
எனவே இந்திய பெண்களுக்கு மகப்பேறு என்பது ”சுகமான சுமையே!”